Last Updated : 14 Dec, 2016 11:15 AM

 

Published : 14 Dec 2016 11:15 AM
Last Updated : 14 Dec 2016 11:15 AM

உலகின் விந்தைத் தாவரங்கள்!

உலகில் இயற்கை விந்தைகள் ஏராளம் உள்ளன. விலங்குகள், பறவைகள், மலைகள், கடல்கள் என பல விந்தைகளை இதற்கு முன்பு பார்த்திருக்கிறோம். அதுபோலத் தாவரங்களில்கூட விந்தையான தாவரங்கள் நிறைய உள்ளன. அவற்றில் சிலவற்றை இந்த வாரம் பார்ப்போமா?

நூறு குதிரைகள் மரம்

மத்திய தரைக் கடலிலுள்ள மிகப் பெரிய தீவு சிசிலி. அங்கு இன்னும் உயிர்ப்போடு ஓர் எரிமலை உள்ளது. எட்னா என்ற அழைக்கப்படும் இந்த எரிமலை உள்ள இடத்தில் ‘நூறு குதிரைகள்’ என்ற பெயரில் ஒரு மரம் உள்ளது. இந்த மரத்தின் வயது 4,000 ஆண்டுகள். ஒரு முறை ராணுவ வீரர்கள் நூறு பேரும் அவர்களின் குதிரைகளோடு இடியிலிருந்து தப்பிக்க இந்த மரத்தின் கீழ் ஒதுங்கிக்கொண்டார்களாம். அதனால்தான் இந்த மரத்துக்கு இந்தப் பெயர்.

பூச்சிகளைக் கொல்லும் தாவரம்

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள ஒரு தாவரம் குடுவை (Pitcher plant). இந்தத் தாவரத்தில் குழல் வடிவ இலைகளில் உள்ள தேன் சுரக்கும் சுரப்பிகள் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கக்கூடியது. தப்பித் தவறி தாவரத்தில் பூச்சிகள் உட்கார்ந்தால் கீழே உள்ள திரவத்தில் மூழ்கி இறந்துவிடும். மண்ணிலிருந்து கிடைக்கும் நைட்ரேட் போன்ற உணவூட்டத்தைச் சமன் செய்யப் பூச்சிகளின் மாமிசத்தை இந்தத் தாவரம் பயன்படுத்திக்கொள்கிறது.

இரட்டை தென்னை விதை

இந்தியப் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் உள்ள தீவு நாடு ஷெஷல்ஸ். இந்தத் தீவில் கோக்டெமர் (Cocdemer) என்ற தென்னை மரம் உள்ளது. இந்தத் தென்னையிலிருந்து கிடைக்கும் இரட்டை தென்னை விதையே உலகின் மிகப் பெரிய விதை.

பழமையான மரம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ளது சில்வர் மவுன்டெயின் என்ற ஊர். இங்கே உலகின் மிகவும் பழமையான இரண்டு மரங்கள் உள்ளன. இப்போதும் உள்ள அந்த இரு மரங்களில் ஒன்று 4,845 ஆண்டுகள் பழமையானது. அந்த மரத்தின் பெயர் ப்ரிஸ்டில் கோன் பைன் ( Bristle cone pine). இந்த மரத்துக்கு ‘மெத்தூஸெல்லா’ எனப் பட்டப் பெயரும் உள்ளது. விவிலியத்தில் மெத்தூஸெல்லா என்பவர் 969 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த பெரியவர். நீண்ட நாள் வாழ்ந்த பெரியவரைப் போலவே இந்த மரமும் வாழ்வதால் இந்த மரத்துக்கு இந்தப் பட்டப்பெயர் சூட்டப்பட்டது.

விநோத ஒட்டுண்ணி

மிதவெப்ப மண்டல நாடுகளில் காணப்படும் ஒரு தாவரம் டாடர் (Dodder). இதற்கு இலை இல்லை. மெல்லிய கொடியாக வளர்ந்து மற்ற தாவரங்களைத் தொற்றிக்கொண்டு வாழும் ஒட்டுண்ணி ரகம். இதனால், மற்ற தாவரங்களை இது சேதப்படுத்தி அழித்துவிடுகிறது. இப்படியும் ஒரு தாவரம்.

விஷத் தாவரம்

விஷம் ஐவி (Posion ivy) என்ற ஒரு வகை தாவரம் வட அமெரிக்காவில் உள்ளது. இந்தத் தாவரம் உண்டாக்கும் எண்ணெய் தோலில் பட்டால் அவ்வளவுதான். கடுமையான வீக்கமும் கொப்புளமும் ஏற்படும். விஷம் ஐவி பட்ட ஆடைகளை பல ஆண்டுகள் கழித்து உடுத்தினாலும் பாதிப்பு ஏற்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x