

புகழ்பெற்ற வில்லியம் ஃபிரான்ட்ஸ் பள்ளியில் ரூபியின் முதல் நாள் அது. காலையில் கண்விழிக்கும்போதே புத்துணர்வோடு பூத்துக் குலுங்கினாள் ரூபி. எப்படி எல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார் அவளுடைய அம்மா. அப்பாவுக்கோ அந்தப் பள்ளிக்கு அனுப்புவதற்குத் தயக்கமாக இருந்தது.
அமெரிக்க வரலாற்றில் தன் மகள் ஏதோ ஒன்றை மாற்றி எழுதப்போவதாக எண்ணிய ரூபியின் பெற்றோருக்குக் கண்ணீர் சுரந்தது.
தலைமுடியை நன்றாகச் சீவி, புத்தாடை அணிந்து, புத்தகப்பையைத் தூக்கிக்கொண்டு தன் அம்மாவோடு கிளம்பினாள் ஆறு வயது ரூபி பிரிட்ஜஸ்.
பள்ளி வாயிலில் மக்கள் கூட்டம். ‘வெளியே போ ரூபி, இது அமெரிக்கர்கள் பள்ளி’, ‘நீ இங்கே வரக் கூடாது’ என்றெல்லாம் ஆக்ரோஷமாகக் கத்திக்கொண்டிருந்தனர். சிறுமி ரூபிக்கு எதற்காக இப்படிக் கத்துகிறார்கள் என்றெல்லாம் புரியவில்லை. பதற்றம் இன்றி, தன்னை வசைபாடும் கூட்டத்துக்குள் புகுந்து, வகுப்புக்கு ஆர்வமாகச் சென்றாள்.
ஆனால், வகுப்பில் மாணவர்கள் யாரும் இல்லை. ரூபியும் ஆசிரியர் பார்பரா ஹென்றியும் மட்டுமே இருந்தனர். ‘ரூபி போன்ற ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் படிக்கும் பள்ளியில் தங்கள் குழந்தைகள் இனி படிக்க மாட்டார்கள்’ என்று அமெரிக்கப் பெற்றோர் சொல்லிவிட்டனர்.
பள்ளி சேர்ந்த முதல் நாளே இதுபோன்ற அனுபவங்களைச் சுமந்துகொண்டு வீட்டுக்குச் சென்றாள் ரூபி. அடுத்தடுத்த நாள்களில் கழிவறையைப் பயன்படுத்தக் கூடாது, உணவு அறையில் சாப்பிடக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் வந்தன. ரூபியின் உணவில் விஷம்கூடக் கலக்க முயன்றார்கள். ரூபி பள்ளிக்கு வரும்போதும் வீட்டுக்குச் செல்லும்போதும் பொருள்களைத் தூக்கி வீசினார்கள்.
பாதுகாப்புக்கு வரச்சொல்லி காவலர்களை அழைத்தது பள்ளி நிர்வாகம். ஆனால், அவர்கள் வரவில்லை. இந்த விஷயம் அமெரிக்க அதிபரிடம் சென்றது. துப்பாக்கி ஏந்திய ஃபெடரல் மார்ஷல்கள் ரூபியின் பாதுகாப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
யார் இந்த ரூபி? - 1954ஆம் ஆண்டு மிசிசிபி நகரில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாள் ரூபி. தந்தை விவசாயக் கூலி. அறுவடை நடந்தால் ரூபி வீட்டில் அடுப்பு எரியும், இல்லை என்றால் அவர்கள் வயிறு எரியும். வறுமை தாங்காமல் 1957இல் குடும்பத்தோடு நியூ ஆர்லியன்ஸுக்குக் குடிபெயர்ந்தார்கள்.
அன்றைய அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் தனித்தனியாகப் பள்ளிகள் இயங்கிவந்தன. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அமெரிக்கர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் படிக்கலாம் என்று சட்டம் வந்தது. ஆனாலும், ஆப்பிரிக்க அமெரிக்கக் குழந்தைகளுக்குக் கடினமான நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றுதான் பள்ளியில் நுழைந்திருந்தாள் ரூபி.
வில்லியம் ஃபிரான்ட்ஸ் பள்ளியில் தன் மகளைச் சேர்த்ததற்காக ரூபியின் அப்பா வேலையை இழந்தார். வீட்டு வேலை செய்துவந்த அம்மாவுக்கும் வேலை பறிபோனது. ரூபியின் தாத்தா, பாட்டியும் அவர்கள் வேலை செய்த பண்ணையிலிருந்து துரத்தப்பட்டனர். ஆனாலும் ரூபி இந்தப் பள்ளியில் படிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தனர்.
வாரங்கள் ஓடின. மாதங்கள் கடந்தன. எதிர்ப்பு மட்டும் குறையவே இல்லை. தினமும் ரூபி வருவதற்கு முன்பே பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். துப்பாக்கி ஏந்திய மார்ஷல்கள் புடைசூழ, சற்றும் பயப்படாமல் கம்பீரமாக நடந்து செல்வாள் ரூபி.
ரூபிக்குப் பாடம் கற்பிக்கும் பார்பரா ஹென்றியிடம் தங்கள் குழந்தைகள் படிக்க மாட்டார்கள் என்று அமெரிக்கப் பெற்றோர் சொல்லிவிட்டனர். அதனால், அவர் ரூபிக்கு மட்டுமே பாடம் எடுத்தார்.
அன்றைக்கும் அப்படித்தான். ரூபிக்காகக் காத்திருந்தார் பார்பரா. வழக்கம்போல் வாயிலில் ரூபியை எதிர்த்துக் கத்திக்கொண்டிருந்தது அந்தக் கூட்டம். ரூபி திரும்பினாள். பாதுகாப்புக்காக வந்த மார்ஷல்கள் அவளைத் தடுத்தனர். பார்பரா பதற்றமடைந்தார். ரூபி ஏதோ சொல்லிவிட்டு, வகுப்பறை நோக்கி வந்தாள்.
“என்ன ஆச்சு ரூபி? அவர்களிடம் என்ன சொன்னே?” என்று கேட்டார் பார்பரா.
“ஓ... அதுவா? தினமும் தேவலாயத்தில் இவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வேன். இன்றைக்கு மறந்துவிட்டேன். அதனால்தான், ‘கடவுளே, இவர்களை மன்னித்துவிடு’ என்று பிரார்த்தனை செய்தேன்” என்ற ரூபியை வாரி அணைத்துக் கொண்டார், பார்பரா.
காலம் மாறியது. அடுத்த கல்வியாண்டில் இரண்டு அமெரிக்கச் சிறுவர்கள் ரூபியின் வகுப்பில் சேர்ந்தார்கள். அடுத்தடுத்து பலரும் வகுப்புக்கு வந்தனர். இப்படியாக அமெரிக்காவின் முதல் கலப்புப் பள்ளியை ரூபி என்கிற ஒற்றைச் சிறுமி உருவாகக் காரணமாக இருந்து, வரலாற்றை மாற்றி எழுதினாள்! (மேதைகளை அறிவோம்) - இஸ்க்ரா iskrathewriter@gmail.com