

வயதானவர்களின் தோலில் ஏன் சுருக்கங்கள் ஏற்படுகின்றன, டிங்கு?
- ச. ஹரீஸ்வரன், 3-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
நம் மேல் தோலில் முதன்மையான மூன்று அடுக்குகள் உள்ளன. இவை அனைத்தும் கெரட்டின் செல்களால் ஆனவை. தோலின் மேல் பகுதியில் பழைய செல்கள் மட்டுமே இருக்கும். அடிப்பகுதியிலிருந்து புதிய செல்கள் உருவாகி, மேலே வரும். புதிய செல்கள் வரும்போது, பழைய செல்கள் உதிர்ந்துவிடும். நம் நடுத் தோலில் ‘கொலாஜன்’, ‘எலாஸ்டின்’ ஆகிய புரதப் பொருள்கள் இருக்கின்றன. இவைதான் நம் தோலுக்கு மென்மையையும் சுருங்கி விரியும் தன்மையையும் கொடுக்கின்றன. முதுமையடையும்போது எலாஸ்டினின் அளவு குறைந்துவிடுகிறது. இதனால்தான் வயதானவர்களின் தோலில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன, ஹரீஸ்வரன்.
கடலில் இருந்து மட்டும்தான் உப்பு கிடைக்கிறதா, டிங்கு?
- ஜி. மஞ்சரி, 10-ம் வகுப்பு, ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.
கடல் மட்டுமன்றி உப்பு ஏரி, உப்புக் கிணறு போன்ற நீர்நிலைகளில் இருந்தும் உப்பு காய்ச்சி எடுக்கப்படுகிறது. நிலத்தில் உள்ள சுரங்கங்களில் இருந்தும் உப்பு வெட்டி எடுக்கப்படுகிறது. மலைகளில் உள்ள குகைகள், சுரங்கங் களில் இருந்தும் உப்பு வெட்டி எடுக்கப்படுகிறது, மஞ்சரி.
வீட்டில் பிடிக்கும் மழை நீரை எவ்வளவு நாள்கள் வரை பயன்படுத்தலாம், டிங்கு?
- எம். நிரஞ்சனா தேவி, 6-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம்.
மழை நீரை எப்படிப் பிடிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அதன் தூய்மை இருக்கும். மாடியில் இருந்து, கூரையில் இருந்து பிடிக்கும் மழை நீரில் அழுக்கும் கலந்து வரலாம். மழை நீரைப் பிடித்து, வடிகட்டி, பாதுகாப்பான இடத்தில் வைத்து சில நாள்களில் இருந்து சில வாரங்கள் வரை பயன்படுத்த முடியும். மழை நீரின் சுவையிலோ மணத்திலோ ஏதாவது மாற்றம் தெரிந்தால் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடலாம், நிரஞ்சனா தேவி.