

படத்தில் இருந்த விலங்கைப் பார்த்து வியந்தாள் சாபிரா. வளர்மதி ஆசிரியரிடம் விலங்கின் பெயரைக் கேட்டாள். அது, சோலை மந்தி (சிங்கவால் குரங்கு) என்றும், மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் குரங்கினம் என்றும் ஆசிரியர் சொன்னார். சோலை மந்திகளைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையை, ஜிமாவிடம் சொன்னாள் சாபிரா.
மலைப் பகுதியில் தலையணை ஆறு பாயும் காடுகளை ஒட்டி அவை வாழ்கின்றன என்கிற தகவல் கிடைத்தது. வனத்துறையின் அனுமதி பெற்று பயணத்துக்கு ஏற்பாடு செய்தார் வளர்மதி. பாதுகாப்புக்கு வந்த வனக்காவலர் சோலை மந்திகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்.
“மேற்கு மலைகளில் மட்டுமே வாழும் அரியவகை குரங்கினம் இது. இப்போது சுமார் மூவாயிரம் குரங்குகள் மட்டுமே இருக்கின்றன. சோலை மந்திகளைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வனக்காவலர் சொன்னதைக் கேட்டு சாபிராவுக்கும் ஜிமாவுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
காற்று இதமாக வீசியது. செங்குத்தான மலை அடுக்குகள், அழகான மடிப்புகளாகப் பரவி யிருந்தன. அடர்வனத்தின் உள்ளே செல்லச்செல்ல வண்டுகளின் ரீங்காரமும் காற்றின் இசையும் புதிய அனுபவத்தைத் தந்தன.
கற்களும் பாறைகளும் நிறைந்த குறுகிய ஒற்றையடிப் பாதை. கைத்தடி உதவியுடன் நடந்தனர். மலையேற்றம் கடினமாக இருந்தது. இன்னும் சற்று நேரத்தில் மலைக்கிராமத்தை அடையலாம் என்றார் வனக்காவலர்.
மலையகச் சிறுமி நீலி, தாத்தாவைச் சந்திக்க ஏற்கெனவே அங்கே சென்றிருப்பதாகத் தகவல் கிடைத்தது. ஜிமாவின் கைபேசி, வேட்டையாடி விலங்குகள் எவ்வளவு தொலைவில் உள்ளன என்கிற தகவலை ரேடாரில் கேட்டறிந்து தந்தது.
“இன்னும் எவ்வளவு தொலைவில் அந்த மலைக்கிராமம் இருக்கிறது?” என்று ஜிமா கேட்டவுடன், கைபேசியில் குறுஞ்செய்தி வந்தது.
கரடுமுரடான பாதையைக் கடந்து ஒருவழியாக மூன்றாவது கொண்டை ஊசி வளைவுக்கு வந்துசேர்ந்தார்கள். பூச்சிகள் எழுப்பிய ’சிட், சட்’ சத்தம் பயத்தை வரவழைத்தது. ஆபத்தான பயணம் என்றாலும் வனக்காவலர் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தார். கிராமத்தை ஒட்டிய பலாமரங்களின் உச்சிக் கிளைகளில் சோலை மந்திகள் கூட்டமாக இருந்தன.
“மலைகளில் பலா மரங்கள் வளர, சோலை மந்திகள்தாம் காரணம். பழத்தைச் சாப்பிட்டு, கொட்டைகளை ஆங்காங்கே வீசுவதால், விதை பரவலுக்கு உதவுகின்றன” என்றார் வனக்காவலர்.
சாபிராவும் ஜிமாவும் எதிரில் இருந்த குன்றில் உட்கார்ந்தனர். வடக்கில் பெரும் பள்ளத்தாக்கு தெரிந்தது. மலை உச்சியில் ஐந்து வெவ் வேறு இடங்களில் இருந்து கொட்டும் அருவிகள், மேகங்கள் வடிவதைப் போலக் காட்சி தந்தன.
அப்போது சரசரவென்று சத்தம் கேட்டது. சிலர் இறங்கிவந்தார்கள். ஒருவர் தோளில், மேள வாத்தியப் பையைத் தொங்கவிட்டிருந்தார். சிவகிரி மலைக் காடுகளில் ஒரு யானை கால் வலியால் துடிப்பதாகவும், யானைக்குச் சிகிச்சை அளிக்க வனத்துறையினர் அழைத்ததாகவும் சொன்னார். அவருடன் மேலும் சிலர் வந்திருந்தனர்.
அந்த நேரம் தாத்தாவைச் சந்தித்து விட்டுத் திரும்பி வந்துகொண் டிருந்தாள் நீலி. ஜிமாவுக்கும் சாபிராவுக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. சட்டென்று ஏதோ ஞாபகத்துக்கு வரவே, ஜிமா கைபேசியால் தெற்கில் உள்ள மலைகளைப் படம் எடுத்தாள். நீலியின் காதில் ஏதோ சொன்னாள். நீலி யாருக்கும் தெரியாமல் மலை வாசிகளை அழைத்துவந்தாள்.
மலைவாசிகள் யானைக்குச் சிகிச்சை அளிக்க வந்தவர்களைப் பிடித்து மரத்தில் கட்டினார்கள். மற்றவர்களுக்கு எதுவும் புரியவில்லை. மேள வாத்தியப் பையைச் சோதித்தார்கள். கொல்லப்பட்ட ஒரு சோலை மந்தி அதில் இருந்தது.
சாபிரா அலறினாள்.
ஜிமா, “அவர்களின் கண் ரேகை களைக் கைபேசியில் பதிவுசெய்தேன். காவல் நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் போன்றவற்றைத் தொடர்புகொண்ட கைபேசி, அவர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரித்துத் தந்துவிட்டது” என்றாள்.
சாபிராவும் நீலியும் ஜிமாவை ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்.
“மருத்துவப் பயன்பாட்டுக்காகச் சோலை மந்திகளை வேட்டையாடும் கும்பல் என்று தெரியவந்தது. ஏற்கெனவே வனத்துறை அவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறது” என்றாள் ஜிமா.
சற்று நேரத்தில் அங்கு வந்த வனத்துறை அதிகாரிகளிடம் திருடர்களை ஒப்படைத்தார்கள்.
வனத்துறை அதிகாரிகளிடம் நீலி, “இவங்களைக் கைதுசெய்து சிறையில் அடைக்கிறதுக்குப் பதிலாக, இந்த வருசம் மூவாயிரம் மரக் கன்றுகள் நடணும்னு தண்டனை கொடுங்க. இறந்து போன அந்தச் சோலை மந்தி, காட்டுக்குச் செய்யவிருந்த உதவியை இவர்கள் செய்யட்டும்” என்றாள்.
அதிகாரிகள் நீலியையும் ஜிமாவையும் பாராட்டினார்கள். எல்லாரும் மலையிலிருந்து கீழே இறங்கினார்கள்.