

‘சே... இந்த லெப்டினன்ட் போரிஸ் சேர்ந்து ஆடுவதாகச் சொல்லிவிட்டு, என் கால்களை மிதித்துவிட்டான்’ என்று அனஸ்டேஷியா பொருமிக்கொண்டிருந்தாள். இந்த நடன நிகழ்ச்சிக்கு வர மாட்டேன் என்று எவ்வளவோ சொல்லியும் பாட்டி அவளை விடவில்லை.
ஒருவகையில் அவள் வந்ததும் நல்லதுதான். நினைவுப் பரிசாக, அழகான டயரி ஒன்றைப் பாட்டி அவளுக்குப் பரிசளித்தார். அந்த டயரிதான், எதிர்கால ரஷ்யாவின் யாருமறியாத பக்கங்களைப் பிஞ்சு விரல்களால் பேசக் காத்திருந்தது!
ஜார் சக்கரவர்த்தியின் செல்லப் பிள்ளையாக இருந்து என்ன செய்வது? 13 வயதுப் பெண்ணுக்குத் தம்பியோடு விளையாடக்கூட வழி இல்லை. அவனுக்கு உடல் நலமில்லை. அக்காக்களை விளையாட அழைத்தால் சண்டையில்தான் முடியும். என்ன செய்வாள்? நாள் முழுக்க நடப்பதை எல்லாம் டயரியில் எழுதிவைத்து விடுவாள் அனஸ்டேஷியா.
ரஷ்ய மன்னர் இரண்டாம் நிக்கோலஸைக் கண்டு நாடே அஞ்சினாலும் அனஸ்டேஷியாவுக்கு அவர் அப்பாதானே! அவரின் அடர்த்தியான மீசையை இழுத்து, “இப்படி ஓய்வு நாளில்கூட பால்கனியில் உட்கார்ந்து தேநீர் குடிக்கச் சொல்றீங்களே, எங்காவது அழைத்துச் செல்லுங்கள் அப்பா” என்று அடம்பிடிப்பாள்.
அப்படி ஒருமுறை குடும்பத்தோடு வால்கா நதிக்குச் சென்றார்கள். அவர்களின் ரோமனொவ் வம்சத்தின் 300ஆவது ஆட்சி ஆண்டைக் கொண்டாடுவதற்கு! இங்கிருந்துதான் ரஷ்யாவை ஆளும் நெடும்பயணத்தைத் தன் முன்னோர்கள் தொடங்கியதாகச் சொல்கிறாள் அனஸ்டேஷியா.
அங்கிருந்த வயதான முதியவர் ஒருவர், இரண்டாம் நிக்கோலஸின் நிழலை ஓடிவந்து முத்தமிட்டார். ஜார் மன்னரின் நிழல் என்றால் சாதாரணமா என்ன? ஆனால், இப்போது நாட்டில் பல இடங்களில் மக்கள் போராட்டங்களில் இறங்கியிருக்கிறார்கள். என் தந்தையின் ஆட்சியில் மிகவும் துன்பப்படுவதாகச் சொல்கிறார்கள். என்ன அநியாயம்? இப்படி அப்பாவைக் குறைசொல்பவர்களை அனஸ்டேஷியா அடியோடு வெறுத்தாள்.
“ஜார் மன்னரை, லெனின் என்பவரோடு சேர்ந்துகொண்டு மக்கள் எதிர்க்கிறார்கள். இது ஜார் வம்சத்தினரின் நாடு. இதை நாங்கள்தான் ஆள வேண்டும் என்பதுகூட இவர்களுக்கு ஏன் புரியவில்லை? ரஷ்யாவை என் அப்பா உயிராக நினைக்கிறார். அவருக்குப் பின் என் தம்பி இந்த நாட்டை ஆள்வான். இதுதான் ரஷ்யாவின் விதி” என்றெல்லாம் அரசியல் பேசியபோது அனஸ்டேஷியாவுக்கு 14 வயது.
உலகப் போர் தொடங்கி மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. அந்தப் போர் தொடங்கிய நாளை இளவரசி என்றும் மறக்கமாட்டார்.
1914, ஆகஸ்ட் 1. திடுதிப்பென்று, “நாங்கள் போருக்குச் செல்கிறோம். ரஷ்யா மீது ஜெர்மனி படையெடுத்துவிட்டது” என்று மன்னர் அலறினார். குடும்பமே கண்ணீர்விட்டதை அழுதுகொண்டே டயரியில் எழுதினார் அனஸ்டேஷியா.
இந்த மூன்று ஆண்டுகளில் பெரிய மாற்றமில்லை. மக்களின் போராட்டம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது.
நிக்கோலஸ் உலகப் போரில் கவனம் வைத்தபோது, உள்ளூரைக் கோட்டைவிட்டார். 1917இல் ரஷ்யா ஜாரைவிட்டு, ‘சாண்’ விலகியதாகச் சொன்னார்கள். இளவரசி நம்பவில்லை. போர்முனையிலிருந்து தொலைபேசியில் அழைத்து, “சாண் அல்ல, மொத்தமும் மூழ்கிவிட்டது” என்று தந்தை சொன்னதும் அனஸ்டேஷியாவின் உலகம் இருண்டது.
ரகசியங்களைப் பாதுகாப்பதற்காக, அலமாரியில் இருந்த டயரிகளை ஒவ்வொன்றாகக் கொளுத்தினார்கள். அம்மாவும் அக்காவும் வற்புறுத்தியும் அனஸ்டேஷியா தன் டயரியைத் தர மறுத்துவிட்டார்.
ஜாரின் குடும்பத்தைக் கைது செய்து, வீட்டில் சிறை வைத்தனர்.
இளவரசியின் உலகம் சுருங்கியது. மென்மையான ரொட்டிகள் கடினமாக இருந்தன. ரொட்டிக்கு வெண்ணெய்கூடக் கிடைக்கவில்லை. அதிகாரம் நிறைந்த ஜாரின் குடும்பம், முதல் முறை சாதாரண மக்களின் வாழ்க்கை முறையைச் சந்தித்தது.
அனஸ்டேஷியாவின் 16ஆவது பிறந்த நாளுக்கு பாரிஸ் அழைத்துப் போவதாகப் பாட்டி சொல்லியிருந்தார். இனி எதுவும் நடக்காது. இருக்கும் நகைகளை விற்று இங்கிலாந்து செல்ல ஜார் மன்னர் திட்டமிட்டார். அதற்குள் ஓராண்டு கடந்துவிட்டது.
இறுதியாக, “இந்த டயரியை என்ன செய்வது? இதிலிருக்கும் உண்மைகளும் ஒளித்து வைத்த நகைக் குறிப்புகளும் யாருக்கும் தெரியக் கூடாது என்றால், உடனே கொளுத்திவிடு” என்று அக்கா ததியானா சொன்னதை, அனஸ்டேஷியா ஏற்க மறுத்தார்.
“இங்கிலாந்தோ ஜப்பானோ சென்று, நான் உன்னைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் வரை சோனியாவிடம் இரு” என்று டயரியை முத்தமிட்டு, பிரியாவிடை கொடுத்தார் அனஸ்டேஷியா.
1914 முதல் 1918வரை அரிய வரலாற்றுக் குறிப்புகளைத் தன் டயரியில் எழுதி வைத்த அனஸ்டேஷியா, திரும்பி வரவேயில்லை. குடும்பத்துடன் கொல்லப்பட்டார். ஆனால், நான்தான் அனஸ்டேஷியா என்று பலர் தோன்றினார்கள். காணாமல்போன கடைசி இளவரசியை டயரியும் தேடிக்கொண்டுதான் இருக்கிறது! (மேதைகளை அறிவோம்) - இஸ்க்ரா, iskrathewriter@gmail.com