வியட்நாம் நாட்டு கிராமியக் கதை: அறிவு எப்படி இருக்கும்?

வியட்நாம் நாட்டு கிராமியக் கதை: அறிவு எப்படி இருக்கும்?
Updated on
2 min read

ஆரம்பக் காலத்தில் கோடுகள் இல்லாமல்தான் புலிகள் இருந்தன. ஒருநாள் காட்டைவிட்டு வெளியே வந்தது புலி. அது, ஓர் எருமையை வைத்து விவசாயி உழுதுகொண்டிருப்பதைப் பார்த்தது. எருமை அதன் வேலையை அயராமல் செய்தது. ஆனாலும் சில நேரம் அந்த விவசாயி அதைச் சாட்டையால் அடித்தார். புலிக்கு ஆச்சரியம்.

மதிய உணவு வேளையின்போது புலி எருமையை நெருங்கிக் கேட்டது, “ஏய், உன்னைப் பார்த்தால் பலசாலியாக இருக்கிறாய். அப்புறம் ஏன் அந்த மனிதர் உன்னை அடிக்கும்போது சும்மா இருக்கிறாய்?”

எருமை முணுமுணுத்தது.

“அருகில் அந்த மனிதர் இல்லை. சத்தமாகச் சொல்” என்று குரல் உயர்த்தியது புலி.

“அவர்கள் உருவத்தில் சிறியவர்கள்... ஆனால், அறிவு உள்ளவர்கள்.”

புலிக்கு ஆர்வம் அதிகமானது.

“அறிவு என்றால் என்ன? பார்ப்பதற்கு அது எப்படி இருக்கும்?”

எருமைக்கு எப்படிப் பதில் சொல்வது என்றே தெரியவில்லை.

“அறிவு என்றால் அறிவுதான். வேறு என்ன? வேண்டுமானால் நீ போய் அந்த மனிதரிடம் கேள்” என்று சொல்லிவிட்டு, புல்லைச் சாப்பிட ஆரம்பித்தது.

புலி விவசாயி அருகில் சென்றது.

“உன்னுடைய அறிவு எங்கே இருக்கிறது? எனக்குக் காட்ட முடியுமா?”

விவசாயிக்கு இந்தக் கேள்வி ஆச்சரியத்தைக் கொடுத்தது. சற்று யோசித்தார். பிறகு, “நான் அதை வீட்டில் வைத்திருக்கிறேன். நான் போய் உனக்காக எடுத்துவருகிறேன். உனக்கும் வேண்டும் என்றால் கொஞ்சம் கொடுக்கிறேன்” என்று சொன்னார்.

அதைக் கேட்ட புலிக்கு மிகுந்த மகிழ்ச்சி. வேகமாகத் தலையை ஆட்டியது.

திடீரென்று விவசாயி ஏதோ ஞாபகத்துக்கு வந்ததுபோல, “நான் போன பிறகு நீ என்னுடைய எருமையைத் தின்றுவிட்டால், நான் என்ன செய்வது?” என்று புலியைப் பார்த்துக் கேட்டார்.

புலி தயங்கியது. என்ன பதில் சொல்வது என்று அதுக்குத் தெரியவில்லை.

உடனே விவசாயி சொன்னார், “உன்னை மரத்தில் கட்டிவைக்க நீ என்னை அனுமதித்தால், நான் கவலை இல்லாமல் போய் வருவேன்.”

‘எனக்குத் தேவை அறிவு. அது எப்படி இருக்கிறது என்று அவசியம் பார்த்துவிட வேண்டும். முடிந்தால் அவரிடம் கொஞ்சம் வாங்கிக்கொள்ள வேண்டும்’ என்று நினைத்த புலி, தன் சம்மதத்தைத் தெரிவித்தது.

உடனே விவசாயி புலியை மரத்தில் நின்ற நிலையில் நேராகக் கட்டிவைத்தார். புலியைச் சுற்றிலும் வைக்கோலைப் போட்டு, தீ வைத்தார்.

புலிக்கு ஒன்றும் புரியவில்லை.

“இங்கேதான் என் அறிவு இருக்கிறது. இங்கேதான் என் அறிவு இருக்கிறது” என்று உற்சாகமாகக் கத்தினார் விவசாயி.

அந்தக் காட்சியைப் பார்த்து எருமை மகிழ்ச்சியாக உருண்டது. அப்படி உருளும்போது அதனுடைய முகத்தாடை பாறையில் மோதியது. எருமையின் மேல் தாடைப்பற்கள் எல்லாம் உடைந்துவிட்டன.

கட்டியிருந்த கயிறு எரிந்த பிறகு புலி அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று திரும்பிப் பார்க்காமல் காட்டுக்குள் ஓடியது.

அன்று முதல் ஒவ்வொரு புலியின் உடலிலும் தீச்சூடு போல கறுப்புக் கோடுகள் உருவாயின. எருமைக்கும் மேல் தாடையில் பற்களே இல்லாமல் போய்விட்டது! - தமிழில்: உதயசங்கர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in