

‘இதற்கு மேல் ஒரு அடிகூட எடுத்துவைக்க முடியாது’ என்று ஆர்தர் மேஸ் சக ஆய்வாளர் ஹாவர்ட் கார்ட்டரிடம் சொன்னார். இருவருமே சோர்ந்துவிட்டார்கள். வெப்பம் தகிக்கும் எகிப்து பாலைவனம் அவர்களைப் படுத்திவிட்டது.
‘அரசர்களின் பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படும் இந்தப் பிரதேசத்தில்தான் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இறந்துபோன ‘பார்வோன்’ (Pharaoh) மன்னர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.
‘பல மாதங்கள் தேடித் திரிந்தும் அபூர்வமான ஒரு கல்லறைகூட நமக்கு அகப்படவில்லை. நமது ஆய்வை இத்துடன் நிறுத்திக்கொள்ளலாம்’ என்று கெர்னர்வான் பிரபு அனுப்பிய கடிதம் பாலைவன மணலில் தூசி அப்பிக்கிடந்தது. கடைசியாக ஒருமுறை முயன்று பார்க்கலாம் என்று இருவரையும் ஹாவர்ட்தான் சமாதானப்படுத்தினார். ஆனால், ஒன்றும் அகப்படவில்லை.
சரி, திரும்பிவிடலாம் என்று பேரரசர் ஆறாம் ராம்சிஸ் கல்லறையைக் கடந்து வரும்போது, பழங்கால நுழைவாயில் ஒன்றைக் கண்டார் ஹாவர்ட். உடனே பணியாளர்களை அழைத்து, அந்த இடத்தைச் சுத்தம் செய்யச் சொன்னார். குப்பைகளை அகற்றியதும் படிக்கட்டு ஒன்று உள்நோக்கிச் சென்றது.
‘இதுதான் கல்லறைக்குச் செல்லும் வழியா? நாம் அந்த அதிசயத்தைக் கண்டுபிடித்துவிட்டோமா? உள்ளே பார்வோன் மன்னரின் உடலோடு எண்ணிலடங்காத பொக்கிஷங்களும் இருக்குமா ’ என்று உற்சாகம் ததும்ப கெர்னர்வானுக்குக் கடிதம் எழுதி, நேரில் வரச் சொன்னார் ஹாவர்ட்.
1922, நவம்பர் 24 அன்று மூவரும் சேர்ந்து உள்ளே நுழைந்தனர். நடைபாதை முழுக்கச் சிற்பங்கள் உடைந்து கிடந்தன. பார்வோன் மன்னர் கல்லறையில் இருக்கும் பொக்கிஷங்களைக் கொள்ளையடித் திருக்கிறார்கள் என்பது புரிந்தது.
நடைபாதையைத் தாண்டியதும் சவப்பெட்டி வைக்கப்பட்ட அறை தென்பட்டது. கதவு துவாரத்தின் வழியாக விஷவாயு இருக்கிறதா என்பதை அறிய, மெழுகுவத்தியைக் கொளுத்தினார், ஹாவர்ட். முதலில் ஒன்றும் தெரியவில்லை. பின்னர் அறைக்குள் ஏராளமான பொருள்களைக் காண முடிந்தது.
தங்கத்தால் செய்யப்பட்ட பொருள்கள் ஜொலித்தன. 4 மெத்தைகள், 6 தேர்கள், 116 கூடைகளில் உணவுப் பண்டம், 30 பீப்பாய்களில் மதுபானம், பார்வோன் விரும்பி விளையாடும் செனட் ஆட்டத்தின் பலகை என சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் அங்கே இருந்தன! இறந்த பிறகும் வாழ்க்கை இருக்கும் என்று நம்பியதால், பார்வோன்கள் கல்லறையில் இப்படிப்பட்ட பொருள்களை வைப்பது அந்தக் காலத்தில் வழக்கம்.
அங்கிருந்த குறிப்புகளைப் படித்து, இது துட்டன்காமனின் கல்லறை என்று ஹாவர்ட் சொன்னார். உடனே அருகிலிருந்தவர்கள், ‘யார் அது?’ என்று கேள்வி எழுப்பினார்கள். ஹாவர்ட் சொல்லத் தொடங்கினார். அவர்களைச் சுற்றியிருந்த பாலைவனம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த அமர்னா நகராக மாறியது. கல்லறையில் கிடந்த துட்டன்காமன் குழந்தையாகத் தெரிந்தார்.
சுமார் கி.மு.1341இல் அகேனாட்டன் பார்வோனின் மன்னருக்குப் பிறந்தார் துட்டனேட்டன். தன் தந்தை ஆட்சி செய்து வந்த அமர்னா நகரில் செல்வச் செழிப்போடு வளர்ந்தார். துட்டனேட்டனின் ஒன்பது வயதில் தந்தை அகேனாட்டன் இறந்துபோனார்.
அதனால் ஒன்பது வயதிலேயே துட்டனேட்டன் ஆட்சிக்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டது. மதப் பழக்க வழக்கங்களில் தன் தந்தையிடம் இருந்து துட்டனேட்டன் மாறுபட்டார். ‘ஏதென்’ என்கிற சூரியக் கடவுளைக் குறிக்கும் தன் பெயரின் பின்பகுதியை, ‘ஆமன்’ என மாற்றிக்கொண்டார். துட்டன்காமன் என்றால் ‘கடவுளின் அவதாரம்’ என்று பொருள்.
துட்டன்காமன், அன்கேசெனமனைத் திருமணம் செய்துகொண்டார். கோயில்களைக் கட்டினார். நாட்டை விரிவாக்குவதற்காகப் போர்களிலும் பங்கேற்று இருக்கிறார். சட்டதிட்டங்களை உருவாக்கினார். 19 வயதுக்குள் இவ்வளவு விஷயங்களையும் செய்துவிட்டு, திடீரென்று இறந்துபோனார். அந்த இளம் பார்வோனுக்குக் கட்டப்பட்ட கல்லறைதான் இது என்று ஹோவர்ட் சொல்லி முடித்தார்.
மூவாயிரம் ஆண்டுகளாக உறங்கிக் கிடந்த துட்டன்காமனை, ஆராய்ச்சியாளர்கள் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார்கள். துட்டன்காமன் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டு நூறாண்டுகள் ஆனாலும் இன்னும் முழுமையான தகவல்கள் வெளிவரவில்லை. தொழில்நுட்பம் வளர வளர துட்டன்காமன் குறித்த தகவல்கள் அதிகமாகக் கிடைத்துக்கொண்டிருக்கின்றன.
துட்டன்காமன் நோயால் இறந்தாரா, விபத்தில் இறந்தாரா, கொலை செய்யப்பட்டாரா என்பதற்கான உறுதியான காரணம், தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும் ஆராய்ச்சிகளில் தெரியவரும்.
எகிப்துப் பேரரசின் அரசாட்சியை குழந்தைப் பருவத்தில் ஏற்று, அதிகாரம் செலுத்தி, எதிரிகளிடமிருந்து காப்பாற்றி, இளம் பருவத்தில் மறைந்துபோன துட்டன்காமனை அறிவியல் உலகம் நமக்குத் திருப்பி அளித்திருக்கிறது! ‘பாய்’ கிங் என்று அழைக்கப்படும் துட்டன்காமன் மூவாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் வரலாற்றில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்! (குழந்தை மேதைகளை அறிவோம்!) - இஸ்க்ரா, iskrathewriter@gmail.com