கதை: மண்புழுவும் வினோதினியும்

கதை: மண்புழுவும் வினோதினியும்
Updated on
2 min read

தோட்டத்தில் உள்ள செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள் வினோதினி.

“வினோ, அந்த உடைஞ்ச தொட்டியில் இருக்கிற ரோஜா செடியைத் தரையில் நட்டு வச்சிடு” என்று குரல் கொடுத்தார் அம்மா.

“அன்னிக்கே சொன்னேன் இல்ல, அந்த இடத்துல மண் ரொம்ப இறுக்கமா இருக்கு. என்னால கொஞ்சம்கூடத் தோண்ட முடியலைன்னு...” என்று பதிலுக்குக் குரல்கொடுத்தாள் வினோதினி.

வெளியில் வந்த அம்மா, “ரெண்டு நாளா தண்ணி ஊத்தி ஊற வச்சிருக்கேன். இப்ப சுலபமா தோண்டிடலாம், நீயே பாரு” என்று சொன்னார்.

சின்ன குச்சியை வைத்து மண்ணைத் தோண்டிய வினோதினி, “அட, ரொம்ப நல்லா தோண்ட வருதே!” என்று ஆச்சரியப்பட்டாள்.

“சரி, சீக்கிரம் செடியை நட்டு வச்சிட்டு வா” என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குள் சென்றுவிட்டார் அம்மா.

தோண்டிய குழியிலிருந்து ஈரமானமண்ணைக் கையில் எடுத்த வினோதினி, “ஆ... அம்மா...” என்று அலறினாள்.

“உஷ்... நான் என்ன பாம்பா? இப்படிக் கத்தறே?”

“குட்டிப் பாம்புன்னு பயந்துட்டேன்... மண்புழுவா?”

“ஆமா, உனக்கு உதவி செஞ்சிட்டிருந்தேன்.”

“என்ன, நீ எனக்கு உதவி செஞ்சியா? கதை விடாதே.”

“ரெண்டு நாளைக்கு முன்னால உன்னால இந்த இடத்துல குழி தோண்ட முடியல. இப்ப எவ்வளவு சுலபமா தோண்டறே... அதுக்கு நான்தானே காரணம்?” என்று உடலை நெளித்தது மண்புழு.

“என் அம்மா தண்ணி ஊத்தி ஊற வச்சதும் ஒரு காரணம். சின்ன உடலை வச்சுக்கிட்டு ஏன் இப்படிக் கஷ்டப்பட்டு மண்ணைத் தோண்டிட்டு இருக்கே?”

“உங்க பாடத்துல எங்களைப் பத்தி படிச்சதில்லையா?” என்று வியப்புடன் கேட்டது மண்புழு.

“ஓ... படிச்சிருக்கேனே... விவசாயிகளின் நண்பன் மட்டும்தான் எனக்கு நினைவிலிருக்கு.”

“ஓ... தாவரங்களோட கழிவுகளைத் தான் நாங்க சாப்பிடறோம். எங்களோட கழிவுகள் இந்த மண்ணை வளமாக்குது. மிருதுவாவும் மாத்துது. அதனால மண்ணுல காத்தும் நீரும் ஆழத்துக்குப் போகுது. மரங்களும் செடிகளும் தங்களுக்குத் தேவையான காற்றையும் தண்ணீரையும் எடுத்துக்க முடியுது.”

“ரொம்ப அற்புதமான வேலையைச் செய்யறீங்க!” என்று பாராட்டினாள் வினோதினி.

“நான் அப்படியெல்லாம் பெருமையா நினைக்க மாட்டேன். நாங்க தாவரக் கழிவுகளைச் சாப்பிடறோம். தாவரங்களுக்குக் காற்றும் தண்ணியும் கிடைக்க உதவி செய்யறோம், அவ்வளவுதான்!”

“உங்கிட்டயிருந்து நாங்க நிறைய கத்துக்கணும் போல!” என்று சிரித்தாள் வினோதினி.

“நீங்க எங்ககிட்டேயிருந்து கத்துக்கவும் வேணாம்; எங்களைப் பாராட்டவும் வேணாம்.”

“ஏன், இப்படிச் சொல்றே?”

“விவசாயம் செய்யறேன்னு மண்ணை எல்லாம் விஷமா மாத்தி வச்சிருக்கீங்களே...” என்று வருத்தமாகச் சொன்னது மண்புழு.

“என்ன சொல்றே?” என்று அதிர்ச்சியடைந்தாள் வினோதினி.

“விவசாயத்துக்கு ரசாயன உரங் களைப் பயன்படுத்தறதால, மண்ணோட வளம் கெட்டுப்போயிருச்சு. இதனால மண்ணை நம்பி இருக்கிற எங்களை மாதிரி உயிரினங்கள் ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கோம்.”

“ஐயோ... ரொம்ப வருத்தமா இருக்கு...”

“பாதிப்பு எங்களுக்கு மட்டுமில்ல வினோதினி, உங்களுக்கும்தான். ரசாயன உரங்களால விளைவிக்கிற உணவைச் சாப்பிடும் உங்களுக்கும் பல நோய்கள் வருது. மண்ணை நம்பியிருக்கும் எல்லாருக்குமே இதனால பாதிப்புதான்.”

“ஐயோ... இதுக்கு என்ன செய்யலாம்?”

“இயற்கை உரங்களைப் பயன் படுத்துங்க. கொஞ்ச வருஷம் கழிச்சு மண்ணோட நுண் சத்து இயற்கையாகவே கிடைச்சிடும். சரி, உங்க அம்மா கூப்பிடறாங்க. சீக்கிரம் செடியை நடு ” என்று சொல்லிவிட்டு மண்ணுக்குள் புகுந்தது மண்புழு.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in