மாய உலகம்!: யாராக இருந்தால் எனக்கென்ன?

மாய உலகம்!: யாராக இருந்தால் எனக்கென்ன?
Updated on
3 min read

எப்போது விடியும் என்று பார்த்துக் கொண்டிருப்பேன். விறுவிறுவென்று ஜன்னல் பக்கமாக நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்துவிடுவேன். மடியில் ஒரு நோட்டுப் புத்தகமும் பென்சிலும் இருக்கும். ஒரு பல்லி ஊர்ந்துவரும். வரைவேன். ஓர் அணில் தாவி ஓடும். வரைவேன்.

மியாவ் என்று பக்கத்து வீட்டுப் பூனை கத்தும். வா ராஜா உனக்குத்தான் காத்திருக்கிறேன் என்று புன்னகை செய்வேன். அது என்னையும் நான் அதையும் மாறிமாறி உற்று உற்றுப் பார்த்துக்கொள்வோம். இந்தா, சரியாக இருக்கிறதா என்று எடுத்து நீட்டுவேன். வாலை ஒரு சுழற்றுச் சுழற்றிக்கொண்டு நகரும். கா, கா என்று ஜன்னல் கம்பிமீது வந்து காகம் உட்காரும். கருகருவென்று இருக்கும் அதன் மினுமினுப்பு காகிதத்தில் வரும்வரை நகர மாட்டேன்.

‘ஆர்.கே. லக் ஷ்மண், ஓவியன்’ என்று நானே பொன் எழுத்துகளால் ஒரு பலகைகூடத் தயார் செய்துவிட்டேன். ‘இதில் ஒன்றும் குறைச்சல் கிடையாது, முதலில் ஒவியப் பள்ளிக்கு எழுதிப் போடு. அவர்களிடம் சேர்ந்து முறைப்படி பயிற்சி பெற்றுக்கொண்டால்தான் ஓவியன் என்று மற்றவர்களும் உன்னை அழைப்பார்கள்’ என்று வீட்டில் இருப்பவர்கள் சொன்னதும், அதற்கென்ன என்று நான்கைந்து படங்களை இணைத்து ஒரு கடிதமும் எழுதி அனுப்பினேன்.

பதில் வந்துசேர்ந்தது. எல்லாரும் அதை மறைத்து, மறைத்து வைத்ததைப் பார்த்தபோதே எனக்குத் தெரிந்துவிட்டது. குழந்தை பாவம், மனம் உடைந்துவிடப் போகிறான் என்று எல்லாருக்கும் ஒரே கவலை. நானா பயப்படுவேன்? நானா அழுவேன்? நான் வரைந்தது பூனை இல்லை என்றால், வேறு யார் வரைந்ததை அந்தப் பள்ளி பூனை என்று அழைக்கும்? என்னுடைய மரம், மரம் இல்லை யென்றால் வேறு எது மரம்?

பென்சிலைக் கூர்மைப்படுத்திக்கொண்டேன். ஜன்னல் கதவைச் சாத்திவிட்டு, வீட்டைவிட்டு வெளியில் வந்தேன். வெண்டைக்காய் வாங்கும் பெண், பக்கத்து வீட்டுத் தாத்தா, வீலென்று அழும் குழந்தை, கிழிந்த சட்டையில் தையல் போட்டு நடக்கும் தெருக்கோடி மனிதர், மாட்டை விரட்டிக்கொண்டு ஓடும் சிறுமி என்று எல்லாரையும் நிறுத்தி, நிதானமாக வரைய ஆரம்பித்தேன்.

என்னை ஏற்றுக்கொள்ள முடியாது என்றாயே, என் உலகை நான் எப்படி ஏற்றுக்கொண்டிருக்கிறேன் என்று பார். எனக்குச் சொல்லிக் கொடுக்க முடியாது என்றாயே, இந்த உலகம் எனக்கு என்னவெல்லாம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கிறது என்று பார். இடமில்லை என்றாயே, இதுதான் என் இடம். நான் ஓவியன் இல்லை என்றால், வேறு யார் ஓவியன்?

நான் எழுதிக்கொண்டிருக்கிறேன், தொந்தரவு செய்யாதே என்று ரொம்பவே பிகு பண்ணிக் கொண்டிருந்த என் அண்ணன் ஆர்.கே. நாராயண் (அவரை உங்களுக்குத் தெரிந்திருக்கும்) ஒருநாள் என்னிடம் வந்து, லக் ஷ்மண், என் கதைக்குப் படம் வரைந்து கொடுப்பாயா என்றார். ‘தி இந்து’வில் அவர் கதை வரும். ஓரமாக என் படமும். ஆகா, ஓகோ என்று எல்லாரும் அண்ணாவை, அண்ணாவை மட்டும் என் முன் பாராட்டுவார்கள். படம் நான் போட்டது என்று வாய்வரை வந்துவிடும். சொல்ல மாட்டேன். என் வேலை வரைவது. அதை மட்டும் செய்துகொண்டிருந்தேன்.

மெல்ல மெல்ல எனக்கும் கடிதங்கள் வர ஆரம்பித்தன. என்னையும் விசாரிக்க ஆரம்பித்தார்கள். இந்தப் படம் உன்னுடையதா? எங்களுக்கும் வரைவாயா? அவசரமாக ஒரு படம் வேண்டும். முடியுமா?

இப்படியாக என் வாழ்க்கை மாற ஆரம்பித்தது. என்ன இவன் இப்போதெல்லாம் கண்டுகொள்வதே இல்லை என்று பூனைகூட விநோதமாக நின்று பார்த்தது. நான் வரைந்துகொண்டிருக்கிறேன், தொந்தரவு செய்யாதே என்று அண்ணனிடம் நானும் பிகு பண்ணிக்கொள்ள ஆரம்பித்தேன்.

மற்றொரு பக்கம் ஊர், உலகில் என்னென்ன பத்திரிகைகள் வருகின்றன, அவற்றில் யார் எல்லாம் வரைகிறார்கள், எப்படி எல்லாம் வரைகிறார்கள் என்றும் கவனித்துக்கொண்டிருந்தேன். கேலிச் சித்திரம் என்றால் என்னவென்று தெரிந்துகொண்டது அப்போதுதான். ஒரு கதைக்கு என்ன தேவையோ அந்த அளவுக்கு; ஒரு பத்திரிகை என்ன கேட்கிறதோ அதை மட்டும் வரைந்துகொண்டிருந்த நான், என் வழியை மாற்றிக்கொண்டேன்.

ஓர் எழுத்தாளர் தனக்குப் பிடித்ததை எழுதும்போது, நான் ஏன் எனக்குப் பிடித்ததை வரையக் கூடாது? பேனா மட்டும்தான் கூர்மையான ஆயுதமா? எது சரி, எது தவறு என்பது பேனாவுக்கு மட்டும்தான் தெரியுமா? பென்சில் என்ன பாவம் செய்தது?

ஒரு கட்டுரை சொல்ல வேண்டிய செய்தியை ஏன் ஒரு படம் சொல்லக் கூடாது? கோபம், கிண்டல், மகிழ்ச்சி, ஏமாற்றம் அனைத்தையும் சொற்களைக் கொண்டுதான் வெளிப்படுத்த வேண்டுமா? கோடுகளால் முடியாதா?

எனக்கு நேரு பிடிக்கும். அவர் சறுக்கினால், அவர் தவறு செய்தால் என் படம் சுட்டிக்காட்டும். என் நாடு எனக்கு முக்கியம். அதற்காக அதன் குறைகளை நான் மறைக்கமாட்டேன். என் மொழி, என் மக்கள், என் சமூகம், என் நண்பர் யாரும் எதுவும் என் பென்சிலிடமிருந்து தப்ப முடியாது.

ஒருநாள் வீட்டுத் தொலைபேசி மணி அடித்தது. எடுத்தேன். ‘நான் நேரு பேசுகிறேன். இன்றைய செய்தித்தாளில் என்னைக் கிண்டல் செய்து நீங்கள் வரைந்தது மிகவும் பிடித்திருந்தது. அந்தப் படத்தை உங்கள் கையெழுத்தோடு எனக்கு அனுப்பி வைக்க முடியுமா? என் அறையில் மாட்டி வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.’

திகைத்து நின்ற என்னிடம் பரபரப்போடு செய்தித்தாளை எடுத்துவந்து நீட்டினார்கள் வீட்டில் இருப்பவர்கள். ‘நேருவைப் போய் இப்படி வரைந்திருக்கிறாயே? அவர் கோபித்துக்கொண்டால் என்னாகும் தெரியுமா?’

(இந்தியாவின் புகழ்பெற்ற ஓவியர், கேலிச் சித்திரக்காரர் ஆர்.கே. லக்ஷ்மண்.)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in