

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன், அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்று உலகின் பல்வேறு நாடுகளிலும் தமிழர்கள் வசிக்கிறார்கள். அவர்களுக்குத் தமிழ் மொழி மீது ஆர்வம் இருக்கிறது. ஆனால், பேசவோ எழுதவோ தெரியாது. தமிழ் பேசுபவர்களுக்கும்கூட எழுத, படிக்கத் தெரியாது.
ஆனால், எப்படியாவது தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டும், கற்றுக்கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படித்தான் அமெரிக்காவில் வசிக்கும் பெர்சிஸ், தன் மூன்று வயது மகளுக்குத் தமிழ் கற்றுக்கொடுக்க புத்தகங்களைத் தேடினார். கிடைக்கவில்லை. அப்போதுதான் எந்த நாட்டுத் தமிழர்களும் பயன்படுத்தும் விதத்தில் தமிழில் புத்தகங்களைக் கொண்டுவரும் எண்ணம் உருவானது என்கிறார்.
பெர்சிஸின் எண்ணத்தைச் செயல்படுத்த அவருடைய தங்கை பெனியேல் முன்வந்தார். “முதலில் தமிழர்களின் பாரம்பரிய விழாவை வைத்து, கதை சொல்ல முடிவெடுத்தோம். பொங்கல் விழாவை வைத்து நான்கு புத்தகங்களைத் திட்டமிட்டோம். அவற்றில் இரண்டு புத்தகங்கள் இப்போது வெளிவந்துள்ளன. எனக்குத் தமிழ் நன்றாகத் தெரியும்.
அதனால் நானே கதைகளை எழுதினேன். கனடாவில் வசிக்கும் எரின் தாஸ், மிக அழகான ஓவியங்களை வரைந்து கொடுத்திருக்கிறார். பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த ‘ஆதி, புவி, கே, தியோ, ஸோயா’ ஆகிய சிறார்கள் இந்தப் புத்தகங்களில் வருவார்கள்.
“ஒரு புத்தகம் வாங்கினால் அதில் தமிழிலும், அதே பக்கத்தில் ஆங்கிலத்திலும் இருக்கும். இதனால் தமிழ் தெரியாதவர்களாலும் தமிழ் படிக்க முடியும். அதே புத்தகத்தில் பாதியிலிருந்து ஆங்கிலத்தில் மட்டும் இந்தக் கதை இருக்கும். தமிழர்கள் மட்டுமன்றி, பிறரும் தமிழர் பாரம்பரியத்தைப் படிக்கலாம். புத்தகம் வாங்குபவர்களுக்கு ஆடியோ புத்தகத்தை இலவசமாகத் தருகிறோம்” என்கிறார் பெனியேல்.
தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் பல கலாச்சாரங்களில் கலந்தாலும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தமிழ் மொழியைக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட ‘கேளிர்’ பதிப்பகம், அடுத்தடுத்து இது போன்ற புத்தகங்களை வெளியிட இருக்கிறது. - கேளிர் புக்ஸ், தொடர்புக்கு: community@kelirbooks.com