Last Updated : 14 Dec, 2016 11:06 AM

 

Published : 14 Dec 2016 11:06 AM
Last Updated : 14 Dec 2016 11:06 AM

குழந்தைகளுக்கான குறும்படம்: ஆபத்தில் உதவும் நண்பன்!

மீன் கடைக்கு அம்மாவுடன் போயிருக்கிறீர்களா? பெரும்பாலும் இறந்துபோன மீன்கள்தான் விற்பனைக்கு இருக்குமில்லையா? ஆனால், மீனுக்கு உயிர் இருந்தால்… இன்னும் கொஞ்ச நேரத்தில் குழம்பில் மிதக்கப் போகிறோம் என்று நினைக்குமா? நினைக்காது இல்லையா? ஆனால், அப்படி நினைக்கும் ஒரு ஆக்டோபஸ், மாட்டிக் கொண்ட தன் நண்பனைக் காப்பாற்றச் செய்யும் கலாட்டாதான் ‘ஆக்டபொடி’ எனும் குறும்படம்.

மீன் கடையில் உள்ள ஒரு கண்ணாடித் தொட்டியில் ஆரஞ்சு, பிங்க் நிறத்தில் இரண்டு ஆக்டோபஸ்கள் கொஞ்சி விளையாடிக்கொண்டிருக்கின்றன. திடீரென அந்தக் கடை உரிமையாளருக்கு போன் வருகிறது. வேகமாக வரும் கடையில் வேலை செய்யும் நபர், பிங்க் ஆக்டோபஸைப் பிடிக்கிறார். அதை ஐஸ் பெட்டியில் வைத்து ஆட்டோவில் எடுத்துச் செல்கிறார். தன் நண்பனைப் பிடித்துச் செல்வதால் அதிர்ச்சியாகிறது ஆரஞ்சு ஆக்டோபஸ். உடனே அது தன் நண்பனை வெட்டி ஒருவர் சமைப்பது போலச் சின்னக் கனவு காண்கிறது. உடனே தன் நண்பனைக் காப்பாற்றப் புறப்படுகிறது ஆரஞ்ச் ஆக்டோபஸ்.

யாருக்கும் தெரியாமல் மீன் தொட்டியில் இருந்து தத்தித் தாவிக் குதித்துச் செல்லுகிறது ஆரஞ்சு ஆக்டோபஸ். அப்படியே ஆட்டோவின் பின் வழியே ஏறி, முன்பக்கத்தில் கடைக்காரரை வண்டி ஓட்ட விடாமல் செய்யும் ஆக்டோபஸின் சேட்டைகள் செம ஜாலியாகவே இருக்கின்றன. அதன் முகபாவங்களில் கோபத்தையும் நண்பனைக் காப்பாற்றுவதற்காகச் செய்யும் ஆர்ப்பாட்டங்களும் ரசிக்க வைக்கின்றன.

ஒரு கட்டத்தில் அந்தக் கடைக்காரர், ஆரஞ்சு ஆக்டோபஸைப் பிடித்து விட, கண்களை உருட்டி, அவர் முகத்தில் திரவத்தைத் துப்பிவிடுகிறது. தடுமாறி விடும் உரிமையாளர், ஆட்டோவுடன் உருண்டு விழுகிறார். இரண்டு ஆக்டோபஸ்களும் நீச்சல் குளம், கட்டிடங்களைத் தாவி வேகமாக உருண்டோடுகின்றன. தப்பித்துவிட்ட மகிழ்ச்சியில் ஒரு கம்பியில் உட்கார்ந்து இரண்டும் ஓய்வெடுக்கின்றன. அப்போது எங்கிருந்தோ வரும் ஒரு பருந்து ஆரஞ்சு ஆக்டோபஸைத் தூக்கிச் செல்கிறது.

கஷ்டப்பட்டுத் தன் உயிரைக் காப்பாற்றிய நண்பனைக் காப்பாற்றப் பிங்க் ஆக்டோபஸ் என்ன செய்கிறது என்பதுடன் முடிகிறது அந்தக் குறும்படம்.

மொத்தமே 2.26 நிமிடங்கள்தான் ஓடுகிறது இந்தப் படம். ஆபத்து காலத்தில் உதவுபவன்தான் நண்பன் என்ற கருத்தின் அடிப்படையில் குழந்தைகளுக்காகப் படமாக்கப்பட்டிருக்கிறது. 2007-ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தக் குறும் படம், சர்வதேச அனிமேஷன் குறும்பட விழாக்களில் நிறைய விருதுகளை வென்றிருக்கிறது.

ஆழ்கடல் உயிரினங்களில் குழந்தைகள் பயப்படும் ஆக்டோபஸை, அவர்கள் விரும்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த ஆக்டபொடி குறும்படம். இந்தக் குறும்படத்தைப் பார்க்க ஆசையா?