

வீட்டுத் தோட்டத்தில் அணில் கத்துவது கேட்டது.
“அப்பா, மரத்திலிருந்த அணிலை ஆனந்த் கவண் கல்லால அடிச்சுட்டான். பாவம் அது கீழே விழுந்துடுச்சு” என்றபடி வீட்டுக்குள் ஓடிவந்தாள் கவிதா. அவளின் உள்ளங்கைக்குள் ஓர் அணில் வலியில் சிணுங்கிக்கொண்டிருந்தது.
“ஐயோ, முன்னங்காலில் லேசா அடிபட்டிருக்கு. நல்லவேளை பெரிய காயம் எதுவும் இல்லை” என்று சொல்லிக்கொண்டே, காயத்திற்கான மருந்தை எடுத்துவந்தார் அப்பா. மருந்தை அணிலின் காலில் தடவி, அட்டைப் பெட்டிக்குள் வைத்தார்.
“நாளைக்குச் சரியாகி, அணில் வெளியே ஓடிப் போயிரும்” என்று அப்பா சொன்னதைக் கேட்டு, கவிதாவுக்கு நிம்மதியாக இருந்தது.
அப்பாவின் கோபம் தணியட்டும் என்று காத்திருந்த ஆனந்த், சற்று நேரத்திற்குப் பிறகு மெதுவாக வீட்டிற்குள் வந்தான்.
“ஆனந்த், எதுக்காக அணிலைக் கவண் கல்லால அடிச்சே? எந்த உயிரையும் துன்புறுத்தக் கூடாதுன்னு தெரியாதா? நேற்று நம் வாசல் விளக்கைக் கவண் கல்லால உடைச்சுட்டே. இன்னிக்குத்தான் புது பல்பு மாட்டினேன். இவ்வளவு நாளும் நல்லாதானே இருந்தே? திடீர்னு என்ன ஆச்சு உனக்கு? ” என்று சற்றுக் கோபமாகக் கேட்டார் அப்பா.
ஆனந்த் தன் கையிலிருந்த கவணை முதுகுக்குப் பின்னால் மறைத்தபடி நின்றிருந்தான்.
ஆனந்துக்கு அந்தக் கவணை அவனுடைய மாமாதான் வாங்கிக் கொடுத்திருந்தார். பத்து நாள்களுக்கு முன்பு பாட்டி வீட்டுக்குச் சென்றிருந்தபோது, ஊரில் திருவிழா நடைபெற்றது. அங்கேதான் மாமா அந்தக் கவணை வாங்கிக் கொடுத்து, எப்படி அடிக்க வேண்டும் என்றும் கற்றுக் கொடுத்தார்.
மாமா கற்றுக் கொடுத்தபடியே ஆனந்த் கவணில் சிறுகல்லை வைத்து அடித்துக் காட்டினான். ஆனந்த் வெகு சீக்கிரமே குறிபார்த்துக் கவணில் கல் வைத்து அடிக்கக் கற்றுக்கொண்டது எல்லாருக்குமே ஆச்சரியமாக இருந்தது.
பாட்டி வீட்டு மாமரத்தில் ஏராளமான மாங்காய்கள் காய்த்துக் கிடந்தன. மாமா, “ஆனந்த், அதோ அந்த மாங்காயை அடித்துக் காட்டு. கவண் அடிப்பதில் உன் குறி எப்படின்னு பார்ப்போம்” என்று விளையாட்டாகச் சொன்னார்.
ஆனந்த் கவணில் கல்லை வைத்து ஒரு மாங்காயின் மீது அடிக்க, மறுநொடியே மாங்காய் தொப்பென்று தரையில் விழுந்தது. மாமா மட்டுமல்ல, எல்லாருமே ஆனந்தைப் பாராட்டினார்கள். அடுத்தடுத்து மாங்காய் களைக் குறிபார்த்து அடித்துக் காட்டி, அசத்தினான் ஆனந்த்.
மறுநாள் உயரமான மரத்தில் பழுத்திருந்த பப்பாளிப் பழத்தைக் காட்டி, “ஆனந்த், பப்பாளி மரத்தில் ஏறினால் மரம் முறிந்துவிடும். அதனால் உன் கவண் கல்லால் இப்போது அந்தப் பப்பாளிப் பழத்தை அடித்துக் காட்டு” என்று மாமா சொல்ல, ஆனந்த் பப்பாளியை அடித்தான். மறுநொடி பப்பாளிப் பழம் கீழே விழுந்தது.
கிராமத்தில் இருந்தவரை ஆனந்துக்குக் கவண் கல் அடிக்க மாங்காயோ பப்பாளியோ கொய்யாப்பழமோ கிடைத்தது. ஆனால், ஊரிலிருந்து வந்த பிறகு அதுபோல எதுவும் கிடைக்கவில்லை. அதனால்தான் அன்று விளக்கை அடித்தவன், இன்று அணிலை அடித்துக் காயப்படுத்திவிட்டான்.
பெட்டிக்குள் தூங்கிக்கொண்டிருந்த அணிலைப் பார்த்தான் ஆனந்த். பாவமாக இருந்தது.
“மன்னிச்சுக்கோங்கப்பா, தெரியாமல் அணிலை அடிச்சுட்டேன்” என்று வருத்தத்துடன் சொன்னான்.
ஆனந்தை அருகில் அழைத்து, அவன் தலையை வருடிக் கொடுத்தார் அப்பா.
“ஆனந்த், நல்லவேளை அணிலுக்குப் பெரிய காயம் எதுவும் படவில்லை. இனி இதுபோல் செய்யக் கூடாது.”
“இனி கவணில் கல் வைத்து அடிக்கவே கூடாதா? ஊரில் நான் குறிபார்த்து கவண் அடிப்பதாக எல்லாரும் பாராட்டினாங்களே...” என்று கேட்டான் ஆனந்த்.
“ஆனந்த், அங்கே உன் திறமையை நீ சரியான வழியில் பயன்படுத்தினே. ஆனா, இங்கே அப்படிச் செய்யலையே... நம் திறமையை எப்போதும் நல்லவிதமாகத்தான் பயன்படுத்தணும். தீயவழியில் பயன்படுத்தக் கூடாது” என்றார் அப்பா.
“இந்தக் கவணை எப்படி நல்ல வழியில் பயன்படுத்த முடியும்? பாட்டி வீட்டில் மாங்காய், கொய்யா எல்லாம் அடித்தேன். இந்த நகரத்தில் எதுவுமே இல்லையே” என்று கேட்டான் ஆனந்த்.
“ஆனந்த், கவணைப் பொறுத்தவரை அதில் உனக்கு என்ன திறமை இருக்கிறது என்று நினைக்கிறாய்?”
“குறிபார்த்து கல் வீசும் திறமைதான்” என்றான் ஆனந்த்.
“சரிதான். ஒரு பொருளைக் கல்லால் அடிக்க வேண்டும் என்றால் அந்தப் பொருளின் மீது கவனத்தைக் குவித்து கவணால் அடிக்கிறாய். அப்போ அந்தத் திறமையைப் பலரும் பாராட்டும்படி பயன்படுத்த வேண்டும். துப்பாக்கிச் சுடுவதில் பயிற்சி எடுத்துக்கொண்டால் சாதனை படைக்கலாம்” என்றார் அப்பா.
“அப்படியா!”
“ஆமாம், உன்னை அதற்கான வகுப்பில் சேர்த்துவிடறேன். நீ நல்லா பயிற்சி எடுத்துக்கிட்டால், மாவட்ட அளவில் விளையாடலாம். உன் திறமையை வளர்த்துக்கொண்டால் மாநில அளவிலும் தேசிய அளவிலும்கூட விளையாடலாம். ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்று, நம் நாட்டிற்குப் பெருமை சேர்க்க முடியும்” என்றார் அப்பா.
“ஆஹா! என்னைச் சீக்கிரமே சேர்த்துவிடுங்க. சாம்பியன் ஆகிக் காட்டுறேன்” என்று உற்சாகமாகச் சொன்னான் ஆனந்த்.