ஆழ்கடல் அதிசயங்கள் - 29: ஆயிரம் கிலோ மீன்!

ஆழ்கடல் அதிசயங்கள் - 29: ஆயிரம் கிலோ மீன்!
Updated on
2 min read

நாட்டிலஸ் நீர்மூழ்கி தமிழ்நாட்டுக்கும் அந்தமானுக்கும் நடுவில் வந்து நின்றது. அப்போது ஓங்கில்கள் கூட்டம் துள்ளிக்குதித்து விளையாடுவதைப் பார்த்து ரசித்தனர்.

“ஏதோ மிதந்துவருது!” என்று செந்தில் கத்தினான். அது நீர்மூழ்கிக்கு அருகில் வரவும், “ஐயோ பாவம், இந்த மீனை ஏதோ ஒரு வேட்டையாடி மீன் கடிச்சிடுச்சு போல, தட்டு மாதிரி மிதந்து வருது” என்றான்.

அருணா சிரித்தபடி கைகாட்ட, அந்தப் பிரம்மாண்டமான தட்டு செங்குத்தாக நின்று இரண்டு துடுப்புகளையும் அடித்துக்கொண்டு நீந்த ஆரம்பித்தது!

“அட! இது என்ன? தலையை வெட்டி வாலை ஒட்டவெச்ச மாதிரி!” என்றாள் ரோசி.

“இதுக்குப் பேருதான் மோளா அல்லது சூரியமீன் (Sunfish). இதோட அறிவியல் பெயருக்கு அர்த்தம் அரவைக்கல். இதோட வடிவத்தைப் பார்த்தாலே ஏன் இந்தப் பெயர் வந்ததுன்னு தெரிஞ்சிடும்” என்றார் அருணா.

“சூரியமீன்னு பேரு ஏன் வந்தது?” என்றாள் ரக் ஷா.

“இப்போ இங்க பார்த்தோமே, அந்தச் சூரியக் குளியல்தான் காரணம். இது உடலைப் பக்கவாட்டில் வைத்துக் கடற்பரப்பில் சூரியஒளி படும்படியா மெதுவா மிதக்கும். பார்ப்பதற்கு அது சூரியக்குளியல் போடுவதுபோல இருப்பதால சூரியமீன்னு பேரு. இதுங்க ஆழ்கடலில் போய் சொறி மீன்களைச் சாப்பிடும். அங்கு ரொம்ப குளிரா இருக்கும். அதனால வேட்டை முடிந்த பிறகு இப்படி மேற்பரப்புக்கு வந்து சூரிய ஒளியில் குளிர்காயும்போது இந்த மீன்களோட உடல் வெப்பம் சமநிலைக்கு வரும்னு கண்டறிஞ்சிருக்காங்க” என்று விளக்கினார் அருணா.

“இந்த மீனுக்கு வித்தியாசமான தலை, தடிமனான பல் அமைப்பு, தட்டையான உடல், விநோதமான வால் பகுதி... இது பெரிசா வேற இருக்கே!” என்று ஆச்சரியப்பட்டான் செந்தில்.

“ஆமா, இங்கு காணப்படும் சூரியமீன்கள் பத்து அடி உயரமும் 1,000 கிலோ எடையும்கூட வளரும்” என்று அருணா சொல்லும்போதே, “இது மூணு அடிதான் இருக்கும்போல, இது குட்டி” என்றாள் ரோசி.

“ஆமாம், பூமியின் தெற்குக் கோளத்தில் மட்டுமே காணப்படும் ஒருவகை சூரியமீன் இனம் இதைவிடப் பெருசா வளரும். சுமார் 2,500 கிலோ எடை வரை போகும். எலும்புள்ள மீன்களிலேயே அதிகமான எடை கொண்டது இதுதான்” என்றார்.

“அவ்வளவு பெருசா?” என்று ரக் ஷா ஆச்சரியப்பட்டாள்.

“உண்மையான ஆச்சரியம் இனிமேதான் இருக்கு” என்று நீர்மூழ்கிக்குள் இருந்த ஒரு சிறிய பாட்டிலை எடுத்துக் காட்டினார் அருணா.

“என்ன இது?”

“இந்தத் திரவத்துல ஆராய்ச்சிக்காக நான் எடுத்து வைத்திருக்கும் சூரியமீன் முட்டைகள் இருக்கு. இதோ தூசி மாதிரி தெரியுதே... ஒவ்வொண்ணும் ஒரு முட்டை. ஒரு முட்டையின் அளவு 1.3 மில்லிமீட்டர்தான்!” என்றார் அருணா.

மூவரும் ஆச்சரியமாக அந்தத் திரவத்தைப் பார்த்தனர்.

“ஒவ்வொரு சூரியமீனும் பல லட்சக்கணக்கான முட்டைகளை இடும். முட்டையிலிருந்து வெளியில் வரும் லார்வாவின் அளவு இரண்டரை மில்லிமீட்டர்தான். அதிலிருந்து 10 அடி உயரமுள்ள மீன் வளரணும்னா பாருங்களேன்... கிட்டத்தட்ட 6 கோடி மடங்கு வளர்ச்சி!” என்றார் அருணா. மூன்று பேருக்கும் ஆச்சரியத்தைத் தாங்க முடியவில்லை.

“இந்த மீனின் வளர்ச்சி நிலைகள் பற்றி ஆராய்ச்சிகள் நடந்திட்டு இருக்கு” என்று அருணா சொல்லி முடிக்கும்போது, அடுத்த சொறி மீன் வேட்டைக்காக சூரியமீன் நகர்ந்தது. அங்கிருந்து புறப்பட்டது நாட்டிலஸ் நீர்மூழ்கி. - (அதிசயங்களைக் காண்போம்!)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in