

சேவை செய்வதற்கு வயது எப்போதுமே ஒரு தடையாக இருப்பதில்லை. அதை உண்மை என்பதை உணர வைத்திருக்கிறான் ஆஸ்திரேலியாவில் வாழும் ஒரு சிறுவன். அதுவும் இந்தச் சிறுவன் தன்னைப் போன்ற சிறுவர், சிறுமிகள், குழந்தைகளுக்காக சேவையைச் செய்து வருகிறான். அது என்ன சேவை?
அந்தச் சிறுவன் பெயர் கேம்பெல் ரெமெஸ். அவனுக்கு 12 வயதுதான் ஆகிறது. இந்த வயதில் விளையாட்டு மைதானமே கதி என்று இருக்க வேண்டிய இந்தச் சிறுவன், மருத்துவமனையே கதியென்று இருக்கிறான். குழந்தைகள் அனுமதிக்கப்படும் வார்டில்தான் இவன் எப்போதும் சுற்றிக்கொண்டிருக்கிறான். மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்டு இருக்கும் குழந்தைகளுக்காகத்தான் இந்தச் சிறுவன் அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கிறான். அது மட்டுமல்ல, குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கரடி பொம்மையை (டெடி பேர்) செய்து, விற்பனை செய்துவருகிறான்.
கேம்பெல்லுக்கு 9 வயது இருக்கும். ஒரு கிறிஸ்துமஸ் தினத்தன்று அருகிலுள்ள மருத்துவமனையில் இருக்கும் சிறுவர்களுக்குப் பரிசு வழங்கலாமா என்று தன் அம்மா, அப்பாவிடம் கேட்டிருக்கிறான். ஆனால், பரிசுப் பொருட்களின் விலை அதிகம் என்று கூறி இருவரும் மறுத்துவிட்டார்கள். அதன் பின் அவர்களிடம் கேட்டு ஒரு தையல் மெஷினை வாங்கியிருக்கிறான் கேம்பெல். அன்று முதல் பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்ததும் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காகக் கரடி பொம்மை செய்ய ஆரம்பித்தான். அது இன்றும் தொடர்கிறது.
தான் செய்யும் இந்தப் பணிக்கு ‘புராஜெக்ட் 365’ என்றும் பெயரும் சூட்டியிருக்கிறான் கேம்பெல். இதுபற்றி அண்மையில் இந்தச் சிறுவன் `ஃபேஸ்புக்கில் இப்படி எழுதியிருக்கிறான்.:
“தினமும் நான் ஒரு கரடி பொம்மையைச் செய்கிறேன். தினமும் ஒரு பரிசு செய்வதன் மூலம் ஓராண்டில் 365 பொம்மைகள் செய்கிறேன். அதை மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன். அதேபோல இரண்டு சிறப்புப் பொம்மைகளைச் செய்து, அவற்றை விற்கிறேன். இதில் கிடைக்கும் பணத்தை பொம்மைகள் செய்ய பயன்படுத்துகிறேன். இந்த ஆண்டு இதுவரை 400 பரிசுப் பொம்மைகளைச் செய்துவிட்டேன். இதன்மூலம் 56 லட்சம் ரூபாயும் கிடைத்துள்ளது”. என்று சொல்லியிருந்தான்.
குழந்தைகளே! இந்தச் சிறிய வயதில் கேம்பெல் எவ்வளவு பெரிய சேவையைச் செய்துவருகிறான், பார்த்தீர்களா? இவனுடைய சேவைக்கு அன்புப் பூங்கொத்து ஒன்றைக் கொடுப்போமா?!