கதை: அதிசய அழைப்பு!

கதை: அதிசய அழைப்பு!
Updated on
2 min read

ஹார்ன் சத்தம் கேட்டதும், “சுதந்திரா, வேன் வந்துவிட்டது” என்றபடியே வாசலுக்கு வந்தார் அம்மா. பின்னாடியே சுதந்திராவும் அவள் அப்பாவும் வந்தனர்.

மூன்று பேருக்கும் ஆச்சரியம். வாசலில் இருந்தது வேன் இல்லை, ஒரு கார். அதிலிருந்து ஓர் அதிகாரி இறங்கினார்.

“இங்கே சுதந்திரா யார்?”

“இதோ என் மகள்தான். நீங்கள்?” என்றார் அப்பா.

“நான் பிரதமர் அலுவலகத்தில் இருந்து வருகிறேன். மாணவர்களுக்கான ஓவியப் போட்டியில் சுதந்திராவுக்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது. நேரு பாராட்ட விரும்புகிறார். தயாராக இருங்கள்.”

அம்மாவும் அப்பாவும் பாய்ந்துவந்து சுதந்திராவைக் கட்டிக்கொண்டனர். சுதந்திராவுக்கு இரட்டை மகிழ்ச்சி. இன்று பள்ளி செல்ல வேண்டாம். நேருவைப் பார்க்கப் போகிறேன்.

ஒரு மணி நேரம் கழித்து கார் வந்தது. மூவரும் ஏறிக்கொண்டனர். அரை மணி நேரத்தில் நேருவின் இல்லத்தை அடைந்தனர். பெரிய வரவேற்பறையில் மூவரும் அமர்ந்தனர்.

இரண்டே நிமிடங்களில் நேரு வந்துவிட்டார். நல்ல உயரம். சாம்பல் நிற கோட். சட்டையில் ரோஜா. அதே சிரிப்பு. மூவரும் எழுந்து நின்றனர். நேரு வணக்கம் சொல்லிவிட்டு, சுதந்திராவிடம் திரும்பினார். “எப்படி இருக்கிறாய் சுதந்திரா?”

சுதந்திராவுக்கு வார்த்தை வரவில்லை.

“சுதந்திரா, உனக்கு ஓவியத்தில் ஆர்வம் அதிகமா?”

ஆமாம் என்று தலை அசைத்தாள் சுதந்திரா.

“உன் ஓவியம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உன் வயதில் நானும் நிறைய வரைந்திருக்கிறேன். அப்போது எனக்குப் பள்ளிக்கூடமே பிடிக்காது. வரைந்துகொண்டே இருக்கலாம் என்று தோன்றும்.”

சுதந்திரா சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

“கதைப் புத்தகங்கள் வாசித்துக்கொண்டு, வரைந்துகொண்டு, விளையாடிக்கொண்டு இருக்கலாம் என்று தோன்றும். அப்பாவும் அம்மாவும் எப்பொழுதும் படி, படி என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.”

கண்களை விரித்தாள் சுதந்திரா.

“ஆமாம், ஏன் நீயும் என்னை மாதிரிதானா?”

“ஆமாம். எனக்குப் பாடப் புத்தகங்களே பிடிக்காது. வரைய மட்டுமே பிடிக்கும்” என்றாள் சுதந்திரா.

சிரித்தார் நேரு.

“சுதந்திரா, நானும் என் அப்பாவிடம் இதையேதான் சொன்னேன். ஆனால், அப்படிச் சொன்னது தவறு என்று புரிந்தது. ஓவியம் மட்டும் தெரிந்தால் போதாது சுதந்திரா. வரலாறு, கணிதம், ஆங்கிலம், அறிவியல் அனைத்தும் தெரிந்தால்தான் ஓவியம் கற்றுக்கொள்ள முடியும்.”

“அதெப்படி?”

“பென்சில், வண்ணங்கள், தூரிகை, காகிதம் என்று பலவற்றை வைத்து நீ ஓவியம் வரைகிறாய். இவை எதுவுமே இல்லாமல் குகைகளில் மனிதர்கள் ஓவியம் வரைந்திருக்கிறார்கள், தெரியுமா? அது இன்றுவரை அழியாமல் இருக்கிறது!”

“நம்பவே முடியவில்லையே!”

“ஆமாம். எப்போது வேண்டுமானாலும் நீ போய் அந்தக் குகை ஓவியத்தைப் பார்க்கலாம். அவர்கள் எப்படி வரைந்தார்கள் என்று மட்டுமல்ல எப்படி வாழ்ந்தார்கள், எப்படிச் சாப்பிட்டார்கள், என்ன சாப்பிட்டார்கள் என்று அனைத்தையும் நம்மால் இன்று தெரிந்துகொள்ள முடிகிறது. அதைத்தான் வரலாறு என்கிறோம். இதை எல்லாம் நாம் தெரிந்துகொண்டதற்குக் காரணம் ஆராய்ச்சியாளர்கள். அவர்களுக்கு உதவியது அறிவியல். அறிவியலும் வரலாறும் இல்லாவிட்டால் நம்மால் நம் உலகைத் தெரிந்துகொள்ளவே முடியாது.”

சுதந்திரா கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“நல்ல ஓவியராக வேண்டுமானால் நீ மற்ற பாடங்களையும் படிக்க வேண்டும். கணிதம் தெரிந்தால்தான் மலை, பூ, மனிதர்கள் அனைத்தையும் கச்சிதமாக வரைய முடியும். வரலாறு தெரிந்தால்தான் நீ எதைப் பற்றி வரைகிறாயோ அதைப் பற்றி தெரிந்துகொள்ள முடியும். நீ இப்போது வந்த கார் எப்படிச் சாலையில் பயணித்து வந்தது என்பதைத் தெரிந்துகொள்ள அறிவியல் அவசியம். இவை எல்லாம் பாடங்கள் அல்ல. நம்மைச் சுற்றி இருக்கும் அழகான உண்மைகள். நீ இந்த உண்மைகளைத் தெரிந்துகொண்டால் இன்னமும் நன்றாக வரையலாம். நிறைய பரிசுகள் வாங்கலாம்.”

தன் உதவியாளரை அழைத்தார் நேரு. “சுதந்திராவை என்னுடைய நூலகத்துக்கு அழைத்துச் செல்லுங்கள். நேற்று நான் அவளுக்காக வாங்கி வைத்த புத்தகங்களைப் பரிசாகக் கொடுங்கள்.”

அவளுடைய அப்பா, அம்மாவிடம், “இனி சுதந்திரா நன்றாகப் படிப்பாள். அதே நேரம் படிப்பு மட்டுமே முக்கியமல்ல. அவளுடைய ஓவியத் திறமையை நீங்கள் ஊக்குவிக்க வேண்டும்” என்றார் நேரு.

அதிகாரியை அழைத்து, “ஆறு மாதங்கள் கழித்து சுதந்திராவிடம் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று பாருங்கள். படிப்பில் ஆர்வம் இல்லை என்று சொல்லும் மற்ற மாணவர்களின் பெயர்களையும் பள்ளிகளிடம் கேட்டு வாங்குங்கள். இன்று மாலை சுதந்திராவின் பள்ளி ஆசிரியரைச் சந்திக்கிறேன். குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டிவிடும் வகையில் எப்படிப் பாடம் எடுப்பது என்று அவர்களிடம் விவாதிக்க வேண்டும்” என்றார் நேரு.

அந்த அதிகாரி, “ஒரு நாட்டின் பிரதமராக உங்களுக்கு ஏகப்பட்ட வேலைகள் உள்ளனவே...” என்றார்.

“சுதந்திரா போன்ற குழந்தைகள்தாம் நாளைய இந்தியாவை உருவாக்கப் போகிறார்கள். அவர்களுக்கு உதவியாக இருப்பதைவிட வேறு என்ன முக்கிய வேலை எனக்கு?”

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in