

தினமும் தனக்கு வரும் கடிதங்களைப் படிக்கவும் பதில் அனுப்பவும் சில மணி நேரத்தைச் செலவிடுவார் பிரதமர் நேரு. 1949. அக்டோபர் 2 அன்று ஜப்பானில் இருந்து கடிதம் வந்திருந்தது. அதை எழுதியவர்கள் குழந்தைகள். ‘இரண்டாம் உலகப் போரின்போது, எங்கள் நாட்டில் இருந்த இரண்டு யானைகளை இழந்துவிட்டோம். அதனால் எங்களுக்கு யானைகளைப் பரிசாக அனுப்பி வையுங்கள்’ என்று கேட்டிருந்தனர். நேருவும் ஒரு யானையைக் கண்டுபிடித்து, ‘இந்திரா’ என்று பெயர் சூட்டி, ஜப்பானுக்கு அனுப்பி வைத்தார்!
‘இந்த யானை நான் அனுப்பும் பரிசு அல்ல. இந்தியக் குழந்தைகள் ஜப்பானியக் குழந்தைகளுக்கு அனுப்பும் அன்புப் பரிசு! யானையைப் போல வலிமையையும் பொறுமையையும் புத்திசாலித்தனத்தையும் வளர்த்துக்கொள்ளுங்கள். பெரியவர்கள்தாம் சாதி, மதம், இனம், மொழி, அரசியல், ஏழை, பணக்காரர் போன்ற விஷயங்களுக்குள் அடைபட்டு, பிரிந்து கிடக்கின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் அவற்றில் சிக்கிக்கொள்ளாமல், எல்லாரிடமும் நட்பை உருவாக்கிக்கொள்ளுங்கள்’ என்கிற ஒரு கடிதத்தையும் அந்தக் குழந்தைகளுக்கு அனுப்பிவைத்தார்!
நேருவுக்குப் பாராட்டு!
நேரு தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள், 1934ஆம் ஆண்டு ‘Glimpses of World History’ என்கிற பெயரில் 1192 பக்கங்களில் மிகப் பெரிய புத்தகமாக வெளிவந்தது. ‘தி டைம் மிஷின்’ போன்ற அறிவியல் புனைகதைகளை எழுதிய புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் ஹெச்.ஜி.வெல்ஸ், சுருக்கமாக ‘உலக வரலாறு’ புத்தகம் ஒன்றையும் எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகம் வெளிவந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு, நேருவின் புத்தகம் வெளிவந்தது.
அமெரிக்க இதழான ‘நியூயார்க் டைம்ஸ்’, வெல்ஸையும் நேருவையும் ஒப்பிட்டு ஒரு கட்டுரை வெளியிட்டது. பொதுவாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகளிலிருந்து வரும் எதையும் எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை. 'நேருவின் பிரம்மாண்டமான உலக வரலாறைப் படிக்கும்போது ஹெச்.ஜி.வெல்ஸ் நம் கண்களுக்குச் சுருங்கிவிடுகிறார். அதோடு ஆங்கிலத்தையும் நேருவிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்’ என்று குறிப்பிட்டிருந்தது! அவர்களின் மொழியை ஆங்கிலேயர் அல்லாத ஒருவரிடம் கற்றுக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டதிலிருந்து நேருவின் மொழி வளத்தையும் எழுத்தாற்றலையும் புரிந்துகொள்ளலாம்!