மாய உலகம்! - எனக்குப் பேய் பிடிக்கும்!

மாய உலகம்! - எனக்குப் பேய் பிடிக்கும்!
Updated on
2 min read

நானும் எவ்வளவோ எழுத்தாளர்களோடு பேசியிருக்கிறேன். எவ்வளவோ கதைகளைப் படித்திருக்கிறேன். ஆனால், உன் புத்தகத்தைக் கண்டால் கை, கால் எல்லாம் தானாக நடுங்க ஆரம்பித்துவிடுகிறது. உன் பெயரைக் கேட்டாலே, ஐயோ இவனா என்று பயம் வந்துவிடுகிறது. நீ ஏன் இப்படிப்பட்ட கதைகளை எழுதுகிறாய் ஸ்டீபன் கிங்? உன்னால் எளிதான, இயல்பான, மகிழ்ச்சியான கதைகளை எழுதவே முடியாதா? நான் எழுத வந்த காலம் தொடங்கி இந்தக் கேள்வியை எல்லாரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓ, அதற்கென்ன எழுதிவிட்டால் போச்சு என்றுதான் ஒவ்வொருமுறையும் சொல்வேன். சொல்வேனே தவிர, செய்ய மாட்டேன் என்று எனக்கும் தெரியும். அவர்களுக்கும் தெரியும்.

என்ன செய்ய? ஏதேனும் எழுதலாம் என்று நான் நினைக்கும் ஒவ்வொரு முறையும் ஒரு குட்டிப் பேய் எங்கிருந்தோ குதித்து என் மடியில் ஏறி உட்கார்ந்துகொள்கிறது . தயவுசெய்து அங்கே போய் விளையாடேன் என்று கெஞ்சிப் பார்த்துவிட்டேன். என் கண்ணு, என் பட்டு என்று கொஞ்சிப் பார்த்துவிட்டேன். நகர்கிறதா அது? ஏதாவது யோசிக்க வேண்டும் என்றால் என்னைப் பற்றி யோசி. ஏதாவது எழுத வேண்டும் என்றால் என்னைப் பற்றி எழுது என்று அடம்பிடிக்கிறது. ஓர் ஊரில் ஓர் அப்பா, ஓர் அம்மா, ஒரு குழந்தை... என்று எல்லாரையும் போல்தான் எழுத ஆரம்பிப்பேன். அப்போ நான் என்று காதுக்கு அருகில் வந்து குட்டி கிசுகிசுக்கும். என்னை மறந்துவிட்டாயா, நான் உனக்கு வேண்டாமா என்று பாவமாகக் கேட்கும். ஆமாம் என்ன செய்வாய் என்று கேட்கலாம்தான். ஆனால், அதன் இரு கண்களிலிருந்தும் பொட்டுப் பொட்டாக வழியும் நீரைக் காணும்போது இந்தப் பாழாய்போன இதயம் சும்மா இருக்குமா?

ஒரு குழந்தை, ஒரு குட்டி நாய், அதன்பின் ஒரு குட்டிப் பேய் என்று கதையைத் தொடர்வேன். அவ்வளவுதான். நான் போட்டு வைத்திருக்கும் எல்லாத் திட்டங்களையும் நொடிப்பொழுதில் குட்டிப் பேய் மாற்றிவிடும். நான் கற்பனை செய்து வைத்திருந்த அந்த அழகான வீட்டின் கதவுகள் நள்ளிரவு ஆகிவிட்டால் படபடவென்று தானாகவே அடித்துக்கொள்ள ஆரம்பிக்கும். நன்றாக ஓடிக்கொண்டிருந்த கடிகாரம் 12 அடிப்பதற்கு ஒரு விநாடி இருக்கும்போது டக்கென்று நின்றுவிடும். சுகமாகக் கனவு கண்டுகொண்டிருக்கும் அம்மாவின் போர்வைக்குள் புகை வடிவ உருவம் ஒன்று நுழையும். வீலென்று அலறிக்கொண்டு அவர் விழிப்பார். வாயில் விரலைப் போட்டுக்கொண்டு தூங்கும் குழந்தையாவது நிம்மதியாக இருக்கும் என்றா நினைக்கிறீர்கள்? படக்கென்று குதித்து வந்து தொட்டிலை வேகவேகமாக ஆட்டிவிட்டு மறைந்துபோகும் பொல்லாத பேய். அம்மாதான் ஆட்டுகிறார் என்று சுகமாகச் சிரிக்கும் குழந்தையைப் பார்க்கும்போது எனக்கே பயமாக இருக்கும்.

அப்பா பெரிய ஆள் இல்லையா? என்னென்னவோ படித்தவர் இல்லையா? கதவு பழையதாக இருக்கும் அதான் அடித்துக்கொள்கிறது என்று அம்மாவைச் சமாதானப்படுத்துவார். புகை உருவம் ஒன்று வந்ததே, அதென்ன என்று அம்மா கேட்டால், புகையாவது, உருவமாவது? ஏதாவது கனவு கண்டிருப்பாய்; படுத்துத் தூங்கு என்று சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொள்வார். ஐந்து நிமிடங்கள் அமைதியாகக் கழியும். ஆறாவது நிமிடம் குட்டி நாய் கட்டில்மீது ஏறி நின்று அப்பாவைப் பார்த்தபடி ஊளையிட ஆரம்பிக்கும். கதவைத் திறந்துகொண்டு ஒரு நரி உள்ளே வரும். ஊளையிடும். அந்த நரிக்குப் பின்னால் நூறு நரிகள் காத்திருக்கும். அப்பா அலற ஆரம்பிப்பார். அவர் ஆசையாசையாக வளர்த்துவந்த நாய் அவர் கண்களைப் பார்த்து, ’அடுத்து நீதான்’ என்று நிறுத்தி நிதானமாகச் சொல்லும்.

நம்புங்கள், சிறு வயதில் எனக்கு இருட்டென்றால் பயம். பாம்பு, எலி, சிலந்தி எதைக் கண்டாலும் வீலென்று கத்துவேன். அறைக்குள் யாரும் இல்லை என்றால் அலறுவேன். சட்டென்று யாராவது நுழைந்தால் அலறுவேன். என் கட்டிலுக்கு அடியில் ஒரு பேய் மறைந்திருக்கிறது என்றும் குனிந்து பார்த்தால் பிடித்து இழுத்து விழுங்கிவிடும் என்றும் நம்பினேன். உள்ளே பயம். வெளியே போக பயம். வாய்விட்டுப் பேச பயம். வாய்மூடிக் கிடக்க பயம். பயத்தை மறைக்கப் படிக்க ஆரம்பித்தேன். கண்டதை எல்லாம் படித்தேன். ஒரு நாள் ஒரு புத்தகத்தில் எதிர்பாராத இடத்தில் ஒரு குட்டிப் பேய் தோன்றியது. டபக்கென்று மூடிவிடலாம் என்று நினைத்தபோது புத்தகத்திலிருந்து வெளியில் குதித்துவந்து என்னைக் கட்டிக்கொண்டது குட்டிப் பேய். நடுங்கிக் கொண்டிருந்த என் விரல்களைத் தன் மெல்லிய விரல்களால் அது பற்றிக்கொண்டது.

என்னைக் கண்டு அஞ்ச வேண்டாம், கிங் என்றது பேய். நான் உன் பயத்தில் தோன்றியவன். உன் பயத்தில் வாழ்பவன். என்னை உருவாக்கியது நீதான். என்னை வளர்த்தது நீதான். நான் உன்னுடைய பேய். நான் உன் பயத்தை வளர்த்து, வளர்த்து அழகிய கற்பனையாக மாற்றுகிறேன். அடுத்த முறை நீ இருளைப் பார்க்கும்போது, சிலந்தியைப் பார்க்கும்போது, பாம்பைப் பார்க்கும்போது உன் மனத்தில் பயம் தோன்றாது. நூறு கதைகள் பிறந்துவரும். என்னை நம்பு. என்னை அணைத்துக்கொள் என்றது. அணைத்துக்கொண்டேன். பயம் மறைந்தது. நடுக்கம் மறைந்தது. கட்டிலுக்குக் கீழே குனிந்து பார்த்தேன். ஒன்றுமே இல்லை. பூட்டிய அறைக்குள் இரவும் பகலும் அடைந்து கிடந்தேன். யாருக்கும் எதுவும் ஆகவில்லை. பேசினேன். சிரித்தேன். சுற்றினேன். கதை, கதையாக எழுதத் தொடங்கினேன். படிப்பவர்களை பயமுறுத்தத்தான் எழுதுகிறாயா கிங் என்று என்னிடம் கேட்டால், ஆம் என்பேன். எதற்காக இப்படியெல்லாம் பயமுறுத்துகிறாய் என்று கேட்டால், என் குட்டிப் பேயைப் பார்த்தபடி சொல்வேன். ‘அப்போதுதான் உங்கள் பயம் மறையும்!’ - (ஸ்டீபன் கிங் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர்.)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in