

வேகமாகச் சென்றுகொண்டிருந்த நாட்டிலஸ் நீர்மூழ்கி, கலிபோர்னியாவுக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் 3,300 அடி ஆழத்தில் நின்றது.
“ஆழ்கடல்ல இந்தக் கறுப்பு விலங்குகளையே பார்த்துப் பார்த்து சலிப்பா இருக்கு” என்றான் செந்தில்.
நீர்மூழ்கியின் விளக்கை இயக்கிய அருணா சிரித்துக்கொண்டே கைகாட்டினார். அங்கே இளஞ்சிவப்பும் அடர்சிவப்பும் கலந்து, நீல வண்ண ஜிகினா புள்ளிகளுடன் ஓர் அடி நீளத்தில் ஓர் ஊசிக்கணவாய் செங்குத்தாக நீந்திக்கொண்டிருந்தது!
“அட! ஆழ்கடலில் சூரிய ஒளி போகாதுன்னு நினைச்சிட்டு இருந்தேன். இந்த ஊசிக்கணவாய் என்னடான்னா இப்படி ஜொலிக்குது” என்று ஆச்சரியப்பட்டாள் ரோசி.
“இது ஸ்ட்ராபெர்ரி ஊசிக்கணவாய் (Strawberry Squid). ஜொலிஜொலிப்பு இருப்பதால இதை ஆபரண ஊசிக்கணவாய்னும் சொல்வாங்க. அதாவது Jewel squid. இதோ இந்த நீல ஜிகினா புள்ளிகளை photophoresனு சொல்வோம். இவை ஒருவகையான நீல ஒளியை உமிழக்கூடிய உயிர் ஒளிர்தல் செல்கள் (Bioluminescent Cells). வேட்டையாடிகளிடமிருந்து மறைந்து தப்பிக்க, இரை தேட, பிற ஊசிக்கணவாய்களுடன் பேச, இணையைக் கவர என்று இந்த நீல ஒளி பல விதங்களில் உதவுது. ஆழ்கடலில் சிவப்பு நிறம் தெரியாது என்பதால் இவை இவ்வளவு வண்ணமயமா இருந்தாலும் இந்த இருட்டில் இதன் உடல் கறுப்பாதான் இருக்கும்” என்று சொல்லி நிறுத்தினார் அருணா.
“அதோ அங்கே பாருங்க! இதுக்குக் கண்ணில் ஏதோ நோய் இருக்கு, ஒரு கண்ணைவிட இன்னொரு கண் பெரிசா வீங்கின மாதிரி இருக்கு” என்று கைகாட்டினான் செந்தில்.
அதை மறுப்பதுபோல் தலையசைத்த அருணா, “இது நோயல்ல. இந்தக் கண்களோட அமைப்பே இப்படித்தான்” என்றார்.
“இதோட வலது கண் நீல நிறத்தில் சிறியதாகவும் கீழே பார்த்தபடியும் இருக்கும். இது இரை விலங்குகள் அல்லது வேட்டை விலங்குகள் வெளியிடும் உயிர் ஒளிர்தலைக் கண்டுபிடிக்க உதவக்கூடியது. அதோ, அந்தப் பக்கம் பெரிதாகத் தெரியும் வலது கண், குழல் மாதிரியான அமைப்பைக் கொண்டது. மேலே பார்த்தபடி இருக்கும் இந்த வலது கண், இடது கண்ணைவிட இரு மடங்கு பெரியது. மஞ்சள் அல்லது பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும்” என்று சொல்லி நிறுத்தினார் அருணா.
“சரி, இந்த மஞ்சள் குழல் கண்ணோட வேலை என்ன?” என்றாள் ரோசி.
“இந்த மஞ்சள் கண்ணுக்கு முனைவுற்ற ஒளியைப் (polarised light) பார்க்கும் ஆற்றல் உண்டு. இந்தக் கண் மேல் நோக்கி இருப்பதால், கடலின் மேற்பரப்பிலிருந்து வரும் மிகவும் மெலிதான நீல ஒளியில், விலங்குகள் நீந்தும் நிழல் தெரியுதான்னு பார்க்க உதவும். முனைவுற்ற ஒளியைப் பார்க்க முடிவதால், மேலே நீந்தும் விலங்கின் நிழல் மிகத் துல்லியமான நீல நிறத்தைத் தவிர, வேறு எந்த நிறத்தில் இருந்தாலும் உடனே கண்டுபிடிச்சிடும். ஒவ்வொரு நாள் இரவும் ஆழ்கடலில் இருந்து கடல்மட்டத்தை நோக்கி இந்த ஊசிக்கணவாய்கள் வேட்டைக்குப் போகும்போது இரை தேடவும் வேட்டையாடிகளிடமிருந்து தப்பிக்கவும் இந்த ரெண்டு விதமான கண்களும்தாம் உதவுது. செங்குத்தாக நீந்துவதால் மேலே, கீழே, அக்கம்பக்கம் என எல்லாத் திசைகளிலும் இந்த ஊசிக்கணவாய்களால் பார்க்க முடியுது” என்று சொல்லி முடித்தார் அருணா.
“எனக்கும் இப்படி ரெண்டு வகை கண் இருந்தா நல்லா இருக்கும். ஒரு கண் முழிச்சுகிட்டே இருக்கும்போது இன்னொரு கண் ஓய்வெடுக்கும். தனியா தூக்கம் எல்லாம் தேவையில்லை” என்றாள் ரக் ஷா.
“அட ஆமாம்!” என்று மற்ற இருவரும் ஆமோதித்தார்கள்.
ஆழ்கடலில் நிறம் பற்றிய ஒரு காணொளியை இணையத்தில் ஓடவிட்டார் அருணா. சிறிய இறால் ஒன்றைக் குறிவைத்து ஊசிக்கணவாய் முன்னேற, அதைத் தொந்தரவு செய்யாமல் புறப்பட்டது நாட்டிலஸ் நீர்மூழ்கி.
(அதிசயங்களைக் காண்போம்!)
நாராயணி சுப்ரமணியன்
nans.mythila@gmail.com