

என்னோட பள்ளி நூலகத்திலேர்ந்து கொண்டு வந்து நிறைய புத்தகங்களை நான் வாசிப்பேன். அதுல எனக்கு ரொம்ப பிடிச்ச புத்தகம் எண்ணங்கள். இந்தப் புத்தகத்தை டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி எழுதியிருக்காரு. மனுஷங்களுக்கு ஒவ்வொரு சமயத்திலேயும் தோன்றுகிற எண்ணங்கள பத்தி இந்தப் புத்தகம் பேசுது.
புத்தகத்தோட ஆசிரியர் தன்னோட எண்ணங்களை மட்டும் இந்தப் புத்தகத்துல சொல்லல. குழந்தை, பெண், வயதானவர்ன்னு பலரோட எண்ணங்களையும் சொல்லியிருக்காரு. இந்தப் புத்தகம் மனோதத்துவ நூல்ன்னு எங்க அப்பா சொன்னாரு. எனக்கு அப்படியெல்லாம் தெரியல. மனுஷங்களோட வாழ்க்கையில வரும் இன்பம், துன்பம்; வெற்றி, தோல்வி பற்றி சொல்லியிருந்தது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. இதைப் படிக்கும்போதே மனசுக்குள் தன்னம்பிக்கை கிடைச்ச மாதிரி இருந்துச்சு.
இப்போ நாம ஒரு செயலைச் செய்றோம். அது சரியா, தப்பான்னு நமக்குத் தெரியும். நாம் செய்யுறது தப்புன்னு தெரிஞ்சா, அதை நிறுத்திடணும். ஏன்னா, நாம் செய்யுறது தப்புன்னு நம்ம எண்ணமே சொல்றப்ப, அதை நிறுத்துவதுதானே நல்லதுன்னு புத்தகத்தோட ஆசிரியர் சொல்லியிருந்ததை ரசிச்சு படிச்சேன். இதுமாதிரி புத்தகம் பூராவும் சிந்திக்க வைக்க நிறைய விஷயங்கள் இருக்கு. இந்தப் புத்தகத்தை வாங்கி நீங்க படிச்சா, அதை நீங்களும் உணருவீங்க.
முடிஞ்சா வாங்கிப் படிச்சு பாருங்க ஃபிரெண்ட்ஸ்!
நூலை மதிப்புரை செய்தவர்: ஸ்வேதா மணவழகன், 9-ம் வகுப்பு,
பாரதியார் ஹைடெக் இண்டர்நேஷனல் பள்ளி, ஆத்தூர், சேலம்,
உங்களுக்குப் பிடித்த நூல் எது? குழந்தைகளே! உங்கள் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, மாமா என யாராவது உங்களுக்கு நூல்கள் வாங்கிக் கொடுத்திருப்பார்கள். நீங்களும் அதை ஆசையாகப் படித்திருப்பீர்கள். அப்படி ஆர்வமாகப் படித்த நூல்கள் உங்களிடம் இருக்கிறதா? அந்த நூலில் பிடித்த அம்சங்களை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள். மறக்காமல் நூலின் முன் பக்க அட்டையை ஸ்கேன் செய்தோ, புகைப்படம் எடுத்தோ அனுப்புங்கள். உங்கள் புகைப்படத்தை அனுப்பவும் மறக்க வேண்டாம். படிக்கும் வகுப்பு, பள்ளியின் பெயர், முகவரியையும் குறிப்பிடுங்கள். ‘மழலை மதிப்புரை’ என்று தலைப்பிட்டு எங்களுக்கு அனுப்புகிறீர்களா? |