புயலுக்குப் பிடித்த ஊர்கள்!

புயலுக்குப் பிடித்த ஊர்கள்!
Updated on
1 min read

மழைக் காலம் தொடங்கிவிட்டது. புயல், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் போன்ற செய்திகளை அதிகம் பார்க்கும் காலம். புயலை ‘சைக்ளோன்’ என ஆங்கிலத்தில் சொல்வார்கள். இந்தப் பெயர் எப்படி வந்தது?

குறிப்பிட்ட பகுதியில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடையும்போது அதைப் புயல் என்று அழைக்கிறார்கள். இடி, மழை, பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு, வெள்ளம் போன்ற இயற்கை நிகழ்வுகளுடன் தொடர்புடையது புயல். 1840-ல் முதன்முதலில் புயல் என்ற பெயரைப் பயன்படுத்தியது ஹென்றி பிடிங்க்டன். ‘சுழன்று அடிக்கும்’ எனப் பொருள்படும்படி சைக்ளோன் என்று அழைத்தார். இது ‘கைக்லோன்’ என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது.

பொதுவாகப் புயல் எனப் பொருள்படும்படி ஆங்கிலத்தில் பல சொற்கள் உள்ளன. அந்த ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு பகுதியிலேயே பயன்படுத்தப்படுகின்றன. அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகும் புயலை ‘ஹரிக்கேன்’ என்று அழைக்கிறார்கள். பசிபிக் பெருங்கடலில் உருவாவதை ‘டைஃபூன்’ என்றும், இந்தியப் பெருங்கடலில் உருவாவதை ‘சைக்ளோன்’ என்றும் அழைக்கிறார்கள்.

உலகெங்குமே புயல்களால் பாதிக்கப்படாத நாடுகள் இல்லை. இந்தியாவில் வங்கக் கடற்கரைப் பகுதியில் உள்ள மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களும், அரபிக் கடல் பகுதியிலுள்ள குஜராத், மகாராஷ்டிரம் புயல் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள். 1999-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி ஒடிசா கடற்கரையில் உள்ள பாரதீப் பகுதியை சூப்பர் புயல் தாக்கியது. அப்போது புயல் மணிக்கு 260 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றுடன் கரையைக் கடந்தது. இது இந்தியாவில் ஏற்பட்ட பெரிய புயல் ஆகும்.

தகவல் திரட்டியவர்: எஸ். ப்ரியதர்ஷினி,
9-ம் வகுப்பு, அரசினர் மேல்நிலைப் பள்ளி, சிதம்பரம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in