

பேருந்து வந்து நின்ற அந்த மைதானம் வெயிலில் தகதகவென மின்னிக்கொண்டிருந்தது. சோலையூரில் வந்து இறங்கியதும் சுற்றும்முற்றும் பார்த்தார் சோமு. கானல் நீர் நதி மாதிரி ஓடிக்கொண்டிருந்தது. கோடைக்காலத்தின் உச்சம். வெள்ளை வெளேர் என்று வெயில் அடித்தது. ஒரு மரம்கூட இல்லை. பேருந்து நிலையம் பொட்டலாக இருந்தது. ஒதுங்கக்கூட நிழல் இல்லை. சொந்த ஊரான சோலையூரைவிட்டு அவர் சென்று முப்பது வருடங்களாகி விட்டன. கல்வி, வேலை என்று அவர் நகரத்துக்குச் சென்று இவ்வளவு காலம் வாழ்ந்தார். திடீரென்று சொந்த ஊர் நினைவு வந்துவிட்டது. ஒரு தடவையாவது போய்ப் பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டு வந்தார்.
இப்போது சோலையூர் ‘பாலையூர்’ ஆகக் காட்சி அளித்தது. அதிர்ச்சி அடைந்தார். அவர் சிறுவனாக இருந்தபோது சோலையூரில் எங்கு பார்த்தாலும் மரங்கள் நிறைந்த சோலைகள் இருக்கும். குளிர்ந்த காற்று எப்போதும் வீசும். பறவைகளின் கீச்சு ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும். வண்ணத்துப்பூச்சிகளும் தட்டான்களும் காற்றில் அங்குமிங்கும் அலைந்து திரியும். அவரும் அவருடைய நண்பர்களும் அந்த மரங்களின் நிழலில் மண்ணா மரமா, எறிபந்து, சில்லாங்குச்சி, கோலி, பம்பரம், செதுக்கு முத்து, கண்ணாமூச்சி, தொட்டுப்பிடிச்சி போன்று பல விளையாட்டுகளையும் விளையாடி இருக்கிறார்கள். ஆனால், இப்போது எந்தச் சத்தமும் இல்லை. வானத்தில் ஒரு பறவைகூடப் பறக்கவில்லை. காற்றில் ஒரு வண்ணத்துப்பூச்சிகூட அலையவில்லை. ஆள் நடமாட்டமே இல்லை.
சோமு மெதுவாக நடந்தார். கொஞ்ச தூரம்கூட நடக்கவில்லை. உடல் வியர்த்தது. தண்ணீர் தாகம் கூடியது. வெப்பத்தினால் உடல் கொதித்தது. பளீர் என்கிற வெளிச்சத்தால் கண்கள் கூசின. கை, கால்கள் நடுங்கின. எங்காவது நிழலில் உட்கார்ந்தால் பரவாயில்லை. ஒரு வாய் தண்ணீர் குடித்தால் பரவாயில்லை. ஆனால், கண்ணுக்கு எட்டிய தூரம்வரை எந்த நிழலும் இல்லை. சோமுவுக்கு மயக்கம் வருவதுபோல இருந்தது. தலை சுற்றியது. எவ்வளவோ முயன்றார். பல்லைக் கடித்துக்கொண்டு எப்படியாவது அந்த மைதானத்தைக் கடந்துவிடவேண்டும் என்று நினைத்தார்.
கால்கள் பின்னின. கண்கள் செருக ஆரம்பித்தன. மயங்கி விழப் போனார் சோமு. அப்போது அவரை இரண்டு குளிர்ந்த கைகள் தாங்கிப்பிடித்தன. அவருடைய தலைக்கு மேல் குடை பிடித்த மாதிரி பச்சை நிழல் விழுந்தது. லேசான குளிர்க்காற்று வீசியது. அவருடைய உதடுகளில் சொட்டுச் சொட்டாக நீர்த்துளிகள் விழுந்தன. மென்மையான விரல்கள் அவரை வருடிக் கொடுத்தன. அவர் கண்களைத் திறந்து பார்த்தார். ஆச்சரியமாக இருந்தது. ஒரு பெரிய ஆலமரத்தின் நிழல் அவர் மீது போர்வை மாதிரி போர்த்திக் கொண்டிருந்தது.
மெதுவாக எழுந்து நடந்தார். அந்த மரமும் அவருடன் நடந்துவந்தது. அவர் மீது வெயில் படாமல் நிழலைப் பரப்பி பாதுகாத்தது. எப்படி இந்த மாயம் நிகழ் கிறது என்று ஆச்சரியத்துடன் நடந்தார். வீடு நெருங்கிவிட்டது. அங்கே வீட்டின் முன்னால் கைகளை நீட்டி வரவேற்றது, அவர் சிறுவனாக இருந்தபோது நட்டு வைத்து வளர்த்த ஆலமரம்!