கதை: அன்பு மொழி

கதை: அன்பு மொழி
Updated on
2 min read

கோதையும் கதிரும் கோடை விடுமுறையில் செண்பகக் காடுகளைச் சுற்றிப் பார்க்கச் சென்றார்கள். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய காடுகளில் வாழும் அரியவகை விலங்குகளையும் பறவைகளையும் பார்க்க வேண்டும் என்பது அவர்களின் நீண்ட கால ஆசை.

காட்டை ஒட்டிய மலைவாசிகள் குடியிருப்பில் வசிக்கும் நீலியுடன் கோதையும் கதிரும் காட்டுக்குள் சென்றனர். கானாங்குருவி, காட்டுப்புறா, ஆக்காட்டி, நீலப்பைங்கிளி போன்ற பறவைகளையும் காட்டு முயல்கள், மலையணில், உடும்பு, சிங்கவால் குரங்கு போன்ற விலங்குகளையும் கண்டு ரசித்தார்கள். புலி, யானை, கரடி, சிறுத்தை போன்ற விலங்குகள் வாழும் அடர்ந்த காடுகளுக்குள் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை.

கோதையும் கதிரும் செண்பகக் காடுகளைச் சுற்றிப்பார்க்க, பெரிதும் உதவியாக இருந்தாள் நீலி. நீலியின் தம்பி சீரன் அன்பானவன். அதிபுத்திசாலி. ஓவியத்தில் கெட்டிக்காரன்.

சீரன் எப்போதும் ஒரு கரித்துண்டு வைத்திருப்பான். குடிசைச் சுவர், பாறை, கட்டாந்தரை என எல்லா இடங்களிலும் கரித்துண்டை வைத்து நிறைய ஓவியங்களை வரைந்து வைத்திருந்தான்.

சூரிய உதயம், இரை தேடும் பறவைகள், சிறுவிலங்குகள், காட்டருவி என தான் கண்ட காட்சிகளை அழகான ஓவியங்களாக மாற்றியதில் அவனது தனித்திறமை வெளிப்பட்டது.

சீரனால் பேச இயலாது. அதனால் படங்கள் வரைந்து எதையும் சொல்ல ஆரம்பித்தான். காலப்போக்கில் சிறந்த ஓவியனாகிவிட்டான்.

சற்றும் எதிர்பாராத போது கோதையின் காலுக்கடியில் புகுந்து ஓடிய ஓர் அணில் சீரன் மீது ஏறியது. சீரனின் உள்ளங்கையில் உட்கார்ந்துகொண்டது. அணிலின் முதுகைத் தடவிக் கொடுத்தான். கோதைக்கு ஆச்சரியம்.

“செண்பகக் காடுகளில் அதிசய மலை அணில்கள் உள்ளன. இது பிறந்த சில நாள்களிலேயே அம்மாவை விட்டுப் பிரிந்துவிட்டது. எங்கள் குடியிருப்பைச் சுற்றி விளையாடியது. அம்மாவைத் தேடி அலைந்தது. பயனில்லை. சீரன் நாவல்பழங்கள் தந்தான். பகலில் வெளியே சுற்றித் திரிந்தாலும் ராத்திரியில் எங்க குடிசையில் வந்து படுத்துக்கொள்ளும். இது எங்க குடும்பத்தில் ஒருத்தராவே மாறிப்போச்சு" என்றாள் நீலி.

கோதை அணிலோடு விளையாடினாள்.

“அடுத்த தடவை வரும்போது, சீரனுக்கு ஒரு பரிசு கொண்டுவருவோம்’’ என்றாள் கோதை.நீலி என்னவென்று கேட்டு நச்சரிக்க, “கொஞ்ச நாள் பொறுத்திரு” என்று சமாதானம் சொன்னான் கதிர். இருவரும் விடைபெற்று வீடு திரும்பினார்கள். அடுத்தமுறை வந்தபோது, சீரன் வரைவதற்கான அத்தனை பொருள்களையும் வாங்கி வந்திருந்தாள் கோதை. அவற்றைக் கண்ட சீரனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

“சீரனிடம் உள்ள திறமைகளை வெளி உலகிற்குக் காட்ட இது உதவியாக இருக்கும். அவன் ஒரு பிறவிக் கலைஞன். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது” என்று பாராட்டினாள் கோதை.

இந்தச் சம்பவம் நடந்து ஒரு வாரம் கடந்திருக்கும். அன்று கனமழை பெய்தது. கண்கள் கூசும்படி மின்னல் வெட்டியது. இடி இடித்தது. கோதை வெளியே எட்டிப் பார்த்தாள். மேற்கு மலைகளுக்கு மேலே அடர்ந்த கருமேகம் சூழ்ந்திருந்தது. மலையில் மழையின் வேகம் இன்னும் அதிகமாக இருக்கும் என்றார் அப்பா. கோதைக்குப் பயமாக இருந்தது.

“கதிர், நீலியும் சீரனும் எப்படி இருக்காங்களோ? ” என்று பதற்றத்துடன் கேட்டாள் கோதை.

“அவர்கள் இயற்கையோடு ஒன்றி வாழப் பழகியவர்கள். பாதுகாப்புடன் இருப்பார்கள். நீ கவலைப்படாதே” என்று தேற்றினான் கதிர்.

மழை நேரத்தில் திடீரென்று காட்டாற்றில் வெள்ளம் வரும். ஆபத்து அதிகம் என்பதால் யாரும் மலைக்குச் செல்ல மாட்டார்கள்.

ஒரு வாரத்தில் மழை நின்றது. கோதையும் கதிரும் செண்பகக் காடுகளுக்குச் சென்றார்கள். சீரன், வனப்பேச்சி கோயில் வாசலில் இருந்தான். அருகில் இருந்த நோட்டில் அவன் வரைந்த ஓவியங்கள் காற்றில் படபடத்தன.

கோதை அதை எடுத்துப் புரட்டினாள். எல்லாமே அணில் ஓவியங்களாக இருந்தன! காரணம் கேட்டாள், சீரன் பதில் சொல்லவில்லை. நீலி மூலம் காரணம் தெரியவந்தது.

ஒரு பெருமரம் மழையின் போது மின்னல் தாக்கிக் கருக்கிப் போனது. அப்போது மரத்தில் இருந்த அணிலும் இறந்துவிட்டது. சீரன் அந்தத் துயரத்திலிருந்து மீண்டு வருவதற்காக அணிலை விதவிதமாக வரைய ஆரம்பித்தான்.

சீரனுக்கு கோதை ஆறுதல் சொல்லித் தேற்றினாள். ஓர் ஓவியக் கண்காட்சிக்கு அவனை அழைத்துச் செல்ல வந்ததாகச் சொன்னாள். நீலியும் சீரனும் இரண்டு நாள்கள் பயணமாக கோதை, கதிருடன் நகரத்துக்குக் கிளம்பினர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in