

வேகமாகச் சென்றுகொண்டிருந்த நாட்டிலஸ் நீர்மூழ்கி, கலிபோர்னியாவுக்கு அருகில் 200 மீ. ஆழத்தில் நின்றது. சுற்றிலும் இருட்டு. ஆராய்ச்சியாளர் அருணா விளக்கை இயக்கியதும் ஆங்காங்கே சிறு மீன்கள் தெரிந்தன. மற்ற மூவரும் ஆர்வமாக வேடிக்கை பார்த்தனர்.
‘‘அதோ’’ என்று அருணா கைகாட்ட, மெதுவாக ஒரு மீன் நீந்திக்கொண்டிருந்தது.
‘‘என்ன இது, மீனோட உருவம் சரியா தெரியல’’ என்றான் செந்தில்.
‘‘அதுதான் விஷயமே. இவை சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அடர்கறுப்பு (Ultrablack) நிற மீன்கள். இந்த மீன்களின் உடலுக்குள் ஒளியை உறிஞ்சும் செல்கள் இருக்கு. அவை, வரக்கூடிய ஒளியில் கிட்டத்தட்ட 99.5% அளவை அப்படியே உறிஞ்சிடும். அதனால்தான் இவை அடர்கறுப்பாகத் தெரியுது. இது மாதிரி 16 வகை மீன்களைக் கண்டுபிடிச்சிருக்காங்க. இதோ இந்த மீன் Fangtooth’’ என்று நீந்திக்கொண்டிருந்த மீனைக் காட்டினார் அருணா.
‘‘ஆனா, ஆழ்கடல் எப்பவுமே இருட்டாதானே இருக்கு? விளக்கு இருந்தா தான் நம்மளாலேயே எதை யாவது பார்க்க முடியுது? இதனால் என்ன பயன்? ’’என்று செந்தில் கேட்டான்.
அருணா சிரித்தபடி விளக்கை அணைத்தார். இருட்டுக்குக் கண்கள் பழகியதும் ஆங்காங்கே மினுங்கலாக என்னென்னவோ தெரிந்தன.
‘‘அட!’’ என்று ஆச்சரியப்பட்டாள் ரோசி.
‘‘ஆழ்கடல் பெரும்பாலும் இருட்டாதான் இருக்கும். ஆனா, இங்க உயிர் ஒளிர்தல் (Bioluminescence) பண்புகொண்ட விலங்குகள் அதிகம். அந்த ஒரு சின்ன ஒளி மூலமாகூட வேட்டையாடிகளிடமும் இரை விலங்குகளிடமும் மாட்டிக்க வாய்ப்பு இருக்கே! அதனால் உருவான தகவமைப்பு இது. இதோ இந்த மீனைப் பாருங்க. இதன் பெயர் Threadfin Dragonfish. இந்த மீனின் உடல்மேல் படும் ஒளியில் 99.956% உறிஞ்சப்படும்’’ என்று நீர்மூழ்கிக்கு அருகில் வந்த விலாங்கு போன்ற ஒரு மீனைக் காட்டினார் அருணா.
‘‘ஆ... கறுப்போ கறுப்பு!’’ என்றாள் ரக் ஷா.
"ஆமாம். இதுபோன்ற அடர்கறுப்பு பண்பு பறவைகளிடம்தான் இருப்பதாக விஞ்ஞானிகள் நினைச்சிட்டு இருந்தாங்க. ஆனால், 2018இல் இதே கலிபோர்னியாவின் ஆழ்கடல் பகுதியில்தான் மீன்களிடமும் இந்தப் பண்பு இருப்பதைக் கண்டுபிடிச்சாங்க. அது மட்டுமில்ல, வழக்கமா இது மாதிரி கறுப்பான உயிரினங்களின் உடலில் இரண்டு வகையான செயல்பாடுகள் நடக்கும். ஒளியை உறிஞ்சுதல் (Absorption), ஒளிச்சிதறல் (Light Scattering). ஒளியை உறிஞ்சுவதற்கு மெலனின் நிறமிகளும் ஒளியைச் சிதறடிக்க வித்தியாசமான செல் அமைப்புகளும் பயன்படும். ஆனா, இந்த மீன்களின் உடலுக்குள், மெலனின் செல்களே இரண்டு வேலைகளையும் செய்யும்" என்று அருணா சொல்லி நிறுத்தினார்.
‘‘அப்படின்னா வேலை மிச்சம், ஆற்றலும் வீணாகாது’’ என்று செந்தில் சொல்ல, ‘‘நீ ஒண்ணு கவனிச்சியா? பரிணாம ரீதியா அதிகம் முன்னேறிய பறவை இனங்களைவிட, இந்த மீன்களில் இருக்கும் அமைப்பில் செயல்திறன் அதிகமா இருக்கு’’ என்றாள் ரோசி.
‘‘ஆமாம், நம்முடைய வளர்ந்த அறிவியல் தொழில்நுட்பங்களாலேயே இரண்டையும் செய்யக்கூடிய ஒளி அமைப்புகளை உருவாக்க முடியலையாம். இந்த மீன்களுக்கு எப்படி இது சாத்தியமாச்சுன்னு விஞ்ஞானிகள் ஆய்வு செஞ்சிட்டு இருக்காங்க’’ என்று பேச்சை முடித்தார் அருணா.
அடர்கறுப்பு மீன்களை எந்தத் தொந்தரவும் செய்யாமல் புறப்பட்டது நீர்மூழ்கி.
(அதிசயங்களைக் காண்போம்)
நாராயணி சுப்ரமணியன்
nans.mythila@gmail.com