

மாலத்தீவுகள் என்ற தீவுகள் சேர்ந்த ஒரு நாட்டைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சுமார் 1,190 தீவுகளைக் கொண்ட ஒரு நாடு இது. இவற்றில் 200 தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்கிறார்கள். இந்த நாட்டின் மக்கள் தொகையும் ரொம்ப அதிகமில்லை. மொத்தமே சுமார் 4 லட்சம்தான். மக்கள் தொகை பட்டியலின்படி உலகின் குட்டி நாடு. ஆனால், அழகான நாடுகளில் இதுவும் ஒன்று.
இந்தத் தீவு தேசம் எங்கு உள்ளது? இது இந்தியாவின் லட்சத்தீவுகளுக்குத் தெற்கும், இலங்கையிலிருந்து சுமார் 700 கிலோ மீட்டர் தென் மேற்கிலும் உள்ளது. இங்கே உள்ள தீவுகளில் 26 தீவுகள் பவளப்பாறைகளால் உருவானது. இவை மாலை போல் தீவுகளை இணைத்திருக்கின்றன.
குட்டி நாடாக இருந்தாலும் இந்த நாட்டுக்குத் தனிப் பாரம்பரியம் உள்ளது. நம் சோழ மன்னர்கள் காலத்தில் இந்தத் தீவு அவர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. 1558-ம் ஆண்டில் போர்த்துக்கீசியர் இந்தத் தீவு தேசத்தைக் கைப்பற்றினார்கள். அந்தக் காலத்தில் பல ஐரோப்பிய நாடுகள் நாடு பிடிக்கும் போட்டியில் தீவிரமாக இருந்தன. இதன் காரணமாக 1654-ம் ஆண்டு முதல் டச்சுக்காரர்கள் வசமும், 1887 முதல் ஆங்கிலேயர்களிடமும் இந்த நாடு அடிமைப்பட்டது.
இறுதியாக 1965-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தக் குட்டி நாடு விடுதலை பெற்றது. மாலத் தீவுகள் நாடு சுற்றுலாவை நம்பித்தான் இருக்கிறது. உலக வெப்பமயமாதல் காரணமாகக் கடல் மட்டம் உயர்ந்தால், கடலில் மூழ்கும் முதல் நாடு இதுவாகத்தான் இருக்கும். இதை உணர்த்துவதற்காக 2009-ம் ஆண்டில் அந்த நாட்டின் அமைச்சரவைக் கூட்டம் கடலுக்கடியில் நடைபெற்றது.
தகவல் திரட்டியவர்: எஸ். பிரேம் குமார், 9-ம் வகுப்பு,
அரசினர் மேல்நிலைப் பள்ளி, எடப்பாடி, சேலம்.