டிங்குவிடம் கேளுங்கள்: காடுகள் எப்போது உருவாகின?

டிங்குவிடம் கேளுங்கள்: காடுகள் எப்போது உருவாகின?
Updated on
2 min read

‘இல்லாதவர்களுக்கு நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும்’ என்று என் பெற்றோர் சொல்லிக்கொண்டும் செய்துகொண்டும் இருக்கிறார்கள். நாம் சம்பாதிப்பது நமக்காகத்தானே? இருப்பவர்கள் இல்லாதவர்களுக்குச் செய்ய வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா, டிங்கு?

- கே. தியாகராஜன், 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, மாமண்டூர், திருவண்ணாமலை.

உங்கள் பெற்றோர் எவ்வளவு நல்ல மனம் படைத்தவர்களாக இருக்கிறார்கள்! மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நம் சமூகத்தில் எல்லாருக்கும் படிப்பிலும் வேலையிலும் சம வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதனால், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மிகப் பெரிய அளவில் இருக்கின்றன. உணவு இல்லாமல், தங்குவதற்கு இடம் இல்லாமல், படிக்க இயலாமல் எவ்வளவோ பேர் கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் எல்லாம் உழைக்காமலும் இல்லை. உதாரணத்துக்கு, உங்களைப் போன்ற ஒரு மாணவருக்குப் பணம் கொடுத்து உதவினால், படித்து நல்ல நிலைக்கு வரலாம் அல்லவா? நமக்கு இல்லாமல் இன்னொருவருக்கு உதவச் சொல்லவில்லை.

நம்மிடம் அதிகமாக இருப்பதையோ அல்லது இருப்பதில் சிறிதையோ தான் பகிர்ந்துகொள்ளச் சொல் கிறார்கள். உலகிலேயே மிகப் பெரிய சந்தோஷம் அடுத்தவரின் கஷ்டத்தைப் போக்குவதுதான்! நீங்களும் உங்கள் பெற்றோரைப் போல ஒரு முறை கொடுத்துப் பாருங்கள். பிறகு நீங்களும் உங்கள் பெற்றோர்போல் சொல்லிக்கொண்டிருப்பீர்கள். பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கட்டாயமோ சட்டமோ இல்லைதான். ஆனால், உதவுவது என்பது மனிதர்களின் சிறந்த குணங்களில் ஒன்று அல்லவா, தியாகராஜன்.

பூமி தோன்றியபோதே காடுகள் உருவாகிவிட்டனவா, டிங்கு?

- சு. காவ்யா, 6-ம் வகுப்பு, அ.உ.நி. பள்ளி, ஏகாட்டூர், திருவள்ளூர்.

பூமி உருவாகி சுமார் 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன. விதைகளுடன் கூடிய மரங்கள் சுமார் 36.3 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் உருவாயின. அதற்குப் பிறகே காடுகள் உருவாகியிருக்கின்றன, காவ்யா.

செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன, டிங்கு?

- ரா. கலைவேந்தன், 4-ம் வகுப்பு, ஊ.ஒ.தொ.பள்ளி, குருவரெட்டியூர், ஈரோடு.

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்பது ஒரு கணினி, கணினியால் கட்டுப்படுத்தப்படும் ரோபோ அல்லது ஒரு மென்பொருளை மனித மூளையைப் போலவே புத்திசாலித்தனமாக சிந்திக்க வைக்கும் ஒரு முறை. மனித மூளையின் வடிவங்களைப் படிப்பதன் மூலமும் அறிவாற்றல் செயல்முறையைப் பகுப்பாய்வு செய்வதன் மூலமும் செயற்கை நுண்ணறிவை உருவாக்குகிறார்கள், கலைவேந்தன்.

மச்சம் ஏன் உருவாகிறது, டிங்கு?

- வெ. நவீன், 6-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, துக்கியாம்பாளையம், சேலம்.

தோலில் உள்ள மெலனோசைட்டுகள் மெலனின் என்கிற நிறமியை உற்பத்தி செய்கின்றன. இவற்றின் மூலமே தோலுக்குரிய நிறத்தைப் பெறுகிறோம். மெலனோசைட் செல்கள் கொத்தாக வளரும்போது, மச்சம் உருவாகிவிடுகிறது. பெரும்பாலான மச்சங்கள் குழந்தைப் பருவத்தில் தோன்றுகின்றன. வருடங்கள் செல்லச் செல்ல மச்சங்கள் மறைந்துவிடுகின்றன. சில மச்சங்கள் மட்டுமே வாழ்க்கை முழுவதும் இருக்கின்றன, நவீன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in