

வேகமாகச் சீறிப்பாய்ந்த நாட்டிலஸ் நீர்மூழ்கி, பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியாவுக்கு அருகில் மூன்று கிலோமீட்டர் ஆழத்தில் நின்றது.
“கடலுக்கடியில் மலைத்தொடர்களும் சிகரங்களும் இருக்குன்னு படிச்சிருக்கேன். ஆனா, இப்போதான் நேரில் பார்க்கிறேன்” என்றான் செந்தில்.
“இது டேவிட்சன் கடல்மலை (Davidson Seamount). இதன் உயரம் கிட்டத்தட்ட இரண்டரை கி.மீ. (2250 மீ). கடலுக்கு அடியில் இருக்கும் மலைகள் முக்கியமான வாழ்விடங்களா இருக்கு. இங்கு எத்தனை விதமான மீன்கள் இருக்கு பார்த்தீங்களா?” என்று அங்கிருந்த மீன்கூட்டங்களைக் காட்டினார் ஆராய்ச்சியாளர் அருணா. மூவரும் அந்த மீன்கூட்டங்களையும் பிரம்மாண்ட மலையையும் ரசித்தனர்.
நாட்டிலஸ் நீர்மூழ்கி அங்கிருந்து தென்கிழக்குப் பக்கமாகப் பயணித்து, பாறைகள் நிறைந்த ஒரு பகுதிக்கு வந்தது. “அதோ பாருங்க” என்று அருணா கைகாட்டவே, “என்ன சின்ன சின்னதா வெளிர் ஊதா நிறத்துல மூட்டை மாதிரி கிடக்கு” என்று ஆச்சரியப்பட்டாள் ரோசி.
ரோபாட் கேமரா காட்சிகளைப் படம்பிடித்தது. காட்சிகள் நீர்மூழ்கியின் திரையில் தெரிந்ததும், “அட! பந்து போல சுருண்டிருப்பது எல்லாம் கணவாய்களா?” என்று மூவரும் ஆச்சரியப்பட்டனர்.
“ஆமாம். இது ஆழ்கடலில் வாழும் ஒருவகை பேய்க்கணவாய் (Octopus). இதுங்களோட இயற்கையான வளர்ப்புப் பண்ணை (நர்சரி) இது. அதாவது, இங்க நீங்க பார்க்கும் ஆயிரக்கணக்கான கணவாய்கள் எல்லாமே முட்டைகளை அடைகாக்கும் பெண் விலங்குகள்” என்று விளக்கினார்அருணா.
“இதுங்க உள்புறம் வெளியில் தெரியும்படி ஏன் சுருண்டு இருக்கு?” என்று செந்தில் கேட்டான்.
“இந்த வகை விலங்குகள் முட்டைகளை அடைகாக்கும் முறை இதுதான். உடலை வளைத்து சுருட்டி, முட்டைகளை மணலோ தூசியோ படாமல் வேட்டையாடிகளிடமிருந்து இந்தக் கணவாய்கள் பாதுகாக்கும்” என்று அருணா சொல்லிக்கொண்டிருந்தபோதே, ரோபாட் கேமரா முன்னோக்கிப் பயணித்தது. பார்க்கும் இடமெல்லாம் ஊதா மூட்டைகளாகக் கணவாய்கள் சுருண்டு கிடந்தன.
“அடடா! எவ்வளவு கணவாய்கள்!” என்று ரக்ஷா ஆச்சரியப்பட்டாள்.
“ஆமாம், இந்த உலகத்திலேயே மிகப்பெரிய கணவாய் வளர்ப்புப் பண்ணை இதுதான். பொதுவா கணவாய்கள் தனித்து வாழும் இயல்பு உடையவைன்னு ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனா, சில ஆண்டுகளுக்கு முன்பாக கிழக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் நிறைய கணவாய்கள் இருக்கும் ஒரு பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. இது கணவாய்கள் அடிக்கடி வந்து ஒன்றுகூடும் சமுதாயக் கூடம் மாதிரின்னு வெச்சிக்கோங்க. இந்தப் பகுதிக்கு விஞ்ஞானிகள் ஆக்ட்லாண்டிஸ்னு (Octlantis) பேர் வெச்சிருக்காங்க. அதற்குப் பிறகு மிக அதிகமான எண்ணிக்கையில் கணவாய்கள் கண்டுபிடிக்கப்பட்டது இந்த இடத்தில்தான். இந்தக் கணவாய் வளர்ப்புப் பண்ணை 2018இல் கண்டுபிடிக்கப்பட்டது” என்றார் அருணா.
“கேமரா காட்சிகளைக் கவனிச்சுப் பாருங்க. வெப்பம் அதிகமா இருக்கும் நீரில் ஒரு நடுக்கம் வருமே, பாறைகளுக்குப் பக்கத்தில் உள்ள நீரிலும் அந்த நடுக்கம் இருக்கு” என்று கைகாட்டினான் செந்தில்.
“ஆமாம், இந்தப் பகுதியின் வெப்பநிலை அதிகம்தான். பக்கத்தில் இருக்கும் வெந்நீர் ஊற்றுகள் இதுக்கு ஒரு காரணமா இருக்கலாம்னு சொல்றாங்க. ஆனாலும், மற்ற பகுதிகளை விட்டுட்டு இந்த விலங்குகள் இங்கு வந்து ஏன் கூட்டமா இருக்கணும்னு நமக்கு இன்னும் தெளிவா தெரியலை. கடல் மலைகளைச் சுற்றி நீரோட்டம் அதிகமா இருக்கும் என்பதால் ஆக்சிஜன் அதிகமா இருக்கும். இங்க இடுக்கான பகுதிகள் அதிகம் என்பதால் மறைந்து வாழ அது உதவும். பெரிய விலங்குகளும் வேட்டையாடிகளும் குறைவு. இது போன்ற காரணங்களால் கணவாய்கள் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க. எது எப்படியோ இந்தத் தேர்வு சரியானதுதான். ஏன்னா, இந்த இடத்தில் உள்ள முட்டைகளில் கரு வளர்ச்சி நல்லாவே இருக்குன்னு உறுதிப்படுத்தியிருக்காங்க” என்று சொல்லி முடித்தார் அருணா.
“ஆமா, இது சரியான இடம், பிடித்த இடம் என்பதால்தானே இங்கே இவ்வளவு விலங்குகள் கூட்டமா கூடியிருக்கு” என்றாள் ரக்ஷா.
“ஆமா, கணவாய்களின் முட்டை எப்படி இருக்கும்?” என்று செந்தில் கேட்க, அருணா விளக்கம் தர ஆரம்பித்தார்.
அடுத்த தலைமுறை கணவாய்களைத் தொந்தரவு செய்யாமல் நாட்டிலஸ் நீர்மூழ்கி மெதுவாகப் புறப்பட்டது.
( அதிசயங்களைக் காண்போம்!)
nans.mythila@gmail.com