

சிலருக்குக் கொஞ்சம் சத்தம் கேட்டாலே தூக்கம் கலைந்துவிடும். இன்னும் சிலரோ சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தால் தூங்கவே மாட்டார்கள். உண்மையில் நிம்மதிக்கும் தூக்கத்துக்கும் தொடர்பு உண்டு. உடல் உறுப்புகள், மனதின் ஓய்வுக்குத் தூக்கம் ரொம்ப முக்கியம். எனவேதான் மனிதர்கள் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தைத் தூங்கியே கழிக்கிறார்கள். ஆனால், மனிதர்கள் தூங்குவதுபோல அல்லாமல் விலங்குகள் பலவிதமாகத் தூங்குகின்றன. பல்வேறு விலங்குகளின் தூக்கம் குறித்த சுவாரசியமான விஷயங்களைத் தெரிந்துகொள்வோமா?
மனிதர்களைப் போலப் பாதுகாப்பாகத் தூங்கும் சூழ்நிலை விலங்குகளுக்கு இல்லை. ஒரு விலங்குக்கு எப்போது வேண்டுமானாலும் மற்றொரு பெரிய விலங்கால் ஆபத்து வரலாம். இரைக்காக எப்போது வேண்டுமானாலும் தூக்கத்திலிருந்து அவை எழுந்து ஓடலாம். இதனால் கிடைக்கும் இடைவெளி நேரங்களில் குட்டித் தூக்கமோ, பாதி விழிப்பு; மீதி ஓய்வு என அரைத் தூக்கத்தையோ விலங்குகள் போடும்.
குதிரைகள், வரிக்குதிரைகள் நின்றபடியே தூங்கும் இயல்புடையவை. மூட்டுகளை இறுக்கிக்கொண்டு உடலின் மொத்த எடையைக் கால்களில் சுமக்கும் இயல்பு இவற்றுக்கு உண்டு. நின்று கொண்டே தூங்குவதால், கண் விழித்த வேகத்தில் குதிரைகளால் பாய்ந்து ஓட முடிகிறது.
குண்டு உடல் காரணமாகப் பெரும்பாலும் யானை படுத்து தூங்காது. வலுவான மரத்தின் மீது தலை, தும்பிக்கையைச் சாய்த்து குட்டித் தூக்கம் போடுவதையே விரும்பும். உருவத்தில் பெரியது என்பதால், அதிக உணவுக்காக அலைவதற்கும், அவற்றைச் சாப்பிடுவதற்குமே பெரும்பாலான நேரம் செலவாகும். இதனால், தினசரி சராசரியாக 4 மணி நேரமே யானை தூங்கும்.
பாம்புகளுக்குக் கண்ணில் இமைகள் இல்லை. அசையாது சுருண்டு அவை குட்டித் தூக்கம் போடும்போதும், கண்கள் திறந்து இருப்பது போலவே தெரியும். உண்மையில், உறக்கத்தின்போது பாம்புக்குத் தனது கண்ணில் உள்ள ரெட்டினா பகுதியை மட்டும் சிறிய சவ்வினால் மூடிக்கொள்ளும் வசதி உண்டு.
காண்டாமிருகம் மனிதர்களைப் போலவே தினசரி 8 மணி நேரம் தூங்கும். ஆழ்ந்த உறக்கத்தில்கூட, தனது விறைத்த காதுகள் உதவியுடன் சிறு சத்தத்தையும் உணர்ந்து உஷாராகும் இயல்பு இதற்கு உண்டு.
மிகவும் வேகமாக ஓடக்கூடிய சிறுத்தை, மரத்தின் உயரமான கிளையிலும் உடலை சாய்த்துத் தூங்கும். அப்படித் தூங்கும்போதும் கிளையிலிருந்து சிறுத்தையின் உடல் சரியாது.
உலகின் சோம்பேறி விலங்கு எனப் பெயர் பெற்றது சோம்பல் கரடி (sloth bear). இது தினமும் குறைந்தது 15 மணி நேரம் தூக்கத்தில் இருக்கும். அதன் சோம்பலான சுபாவத்தினாலும் செயல்பாடுகளாலும் விழித்திருக்கும் மிச்ச நேரத்திலும் தூங்குவது போலவே தோற்றமளிக்கும்.
பறவைகள் நீண்ட தூரம் பறக்கும்போதும் அவை அரைத் தூக்க நிலையிலேயே ஓய்வெடுக்கின்றன. பறவையினமான வாத்து எப்போதும் கூட்டமாகவே இருப்பது, வாத்துகளின் தூங்கும் முறைக்கு உதவியாக இருக்கிறது. கூட்டத்தின் ஓரத்தில் இருப்பவை, குழுவின் பாதுகாப்புக்காக இப்படி அரைத்தூக்கம் போடும். கூட்டத்தின் நடுவில் இருப்பவை பாதுகாப்பாக முழுத் தூக்கம் போடும்.
ஒரு நாளில் அதிகம் தூங்கும் சாதனை வௌவாலுக்கு உண்டு. பழுப்பு வௌவால்கள் சுமார் 20 மணி நேரம் தூங்கும். நள்ளிரவில் மட்டுமே இரைதேடிச் செல்வதால், மற்ற சமயங்களில் தலைகீழாகத் தொங்கியபடி தூங்கிக்கொண்டிருக்கும்.
உயரமான விலங்கான ஒட்டகச்சிவிங்கி அவ்வப்போது 5 அல்லது 10 நிமிடங்களாக தினமும் அதிகபட்சமாக 1 அல்லது 2 மணி நேரம் மட்டுமே தூங்கும்.
விலங்குகளில் கரடியின் குளிர்காலத் தூக்கம் ரொம்ப பிரபலமானது. உணவின்றி சுமார் 8 மாதங்கள் வரை கரடி கும்பகர்ணத் தூக்கம் போடுவதுண்டு. பாறைகளுக்கு இடையே, மரப்பொந்துகளில் எனப் பாதுகாப்பாகக் கரடிகள் தூங்கும். இந்தக் காலகட்டத்தில் கரடியின் இதயத்துடிப்பு, ரத்த ஓட்டம், உடல் வெப்பநிலை ஆகியவை குறைந்திருக்கும். உடலின் வளர்சிதை மாற்றமும் குறைவதால் கரடிக்குப் பசி எடுக்காது. இதனால் தனது உடல் எடையில் கால் பங்கினை இழந்து கரடி இளைத்துப்போய்விடும். மற்ற மாதங்களில் தினசரி ஒருசில மணி நேரங்கள் மட்டுமே தூங்கும். மீதி நேரம் முழுக்க இரையைத் தின்று இழந்த உடல் எடையைக் கரடி திரும்பப் பெற்றுவிடும்.