பிலிப்பைன்ஸ் நாட்டுக் கதை: வானுக்கும் கடலுக்கும் போர்

பிலிப்பைன்ஸ் நாட்டுக் கதை: வானுக்கும் கடலுக்கும் போர்
Updated on
2 min read

உலகம் உருவானபோது வானம், கடல், ஒரே ஒரு கறுப்புப் பறவை ஆகியவை மட்டுமே இருந்தன. நிலம் உருவாகாததால் தொடர்ந்து வானில் பறப்பதைத் தவிர பறவைக்கு வேறு வழி இல்லை. ஓய்வே இல்லாமல் பறந்ததால் பறவையின் இறக்கைகள் களைப்படைந்தன. ஒரு மதிய நேரத்தில் பறவையால் தன் இறக்கைகளை விரிக்க முடியவில்லை. ஓய்வெடுப்பதற்கு இடம் ஏதும் இல்லை. பறவைக்குக் கீழே பெருங்கடல் மட்டுமே இருந்தது.

இன்னும் சில நாள்கள் மட்டுமே தான் உயிரோடு இருக்க முடியும் என்பதைப் பறவை உணர்ந்தே இருந்தது. அதற்குள் களைத்துப்போன தன் இறக்கைகளுக்கு ஓய்வளிக்கும் வழியை அது கண்டுபிடிக்க வேண்டும். அந்தக் காலத்தில் வானம் மிகவும் கீழே, ஏறக்குறைய கடலைத் தொட்டுக்கொண்டிருந்தது. கடலையும் வானத்தையும் பயன்படுத்தி, ஓய்வெடுப்பதற்கான இடத்தை எப்படி உருவாக்குவது என்று பறவை யோசித்தது.

மறுநாள் காலையில் வேகமாகக் கடலுக்கு அருகில் சென்று, “வானம் சொல்கிறது, நீ எதற்கும் பயனில்லாத உப்புக் கடலாம். தேவையில்லாத அலைகளை உருவாக்குவதைத் தவிர, நீ வேறு எதுவும் செய்வதில்லையாம். நான் பறப்பதற்கு உன்னால் உதவக்கூட முடியாதாம்” என்றெல்லாம் சொன்னது பறவை. “என்னது?” என்று கடல் கத்தியது. “ஆழ்கடலில் உள்ள உயிரினங்கள் குறித்து, வானத்தால் ஒருபோதும் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. என் அலைகளுக்குக் கீழே உள்ள உலகம், வானத்தில் உள்ள அனைத்தையும்விட உயர்ந்தது” என்றது கடல்.

“நல்லது! ஆனால், வானம் சொல்கிறது நீ எதற்கும் பயனில்லையாம். ஒருநாள் நீ என்னைக் கொன்றுவிடுவாயாம்.” கடல் சீற்றம் அடைந்தது. தண்ணீர் கறுப்பு நிறமாக மாறிச் சுழன்றது. பெரிய அலைகள் வானத்தை நோக்கி எழுந்தன. அவற்றின் முகடுகளில் வெள்ளை நுரை உருவானது. நீரின் பேரிரைச்சல் இடியைப் போலக் கேட்டது.

வானில் பறந்துகொண்டிருக்கும் தன்னை இழுத்து மூழ்கடித்துவிடும் என்று பயந்த பறவை, உடனடியாக அங்கிருந்து பறந்தது. கடல் தன் அலைகளை மேலும் மேலும் உயரத்துக்கு அனுப்பியதைப் பார்த்தது பறவை. வானை மூழ்கடிக்கத் தன் ஆற்றல் முழுவதையும் கடல் பயன்படுத்தியதுபோல் இருந்தது.

தொட முடியாத உயரத்துக்கு வானம் தன்னை இழுத்துக்கொண்டது. கடல் இன்னும் மேலே சென்று, தன் உப்பு நீரால் வானின் மீது மோதியது. அப்போது மின்னல் கடலைத் தாக்கியது. இருண்ட வானிலிருந்து பாறைகளும் கற்களும் பொழியத் தொடங்கின.

காயப்படாமல் இருப்பதற்காக, பதற்றத்துடன் இடப்பக்கமும் வலப்பக்கமும் மேலேயும் கீழேயும் பறந்தது பறவை. பாறைகள் எல்லாத் திசைகளிலும் விழுந்தன. கடல் நீரால் பறவையின் இறக்கையில் எடை அதிகரித்தது.

“ஐயோ… நான் என்ன செய்தேன்? முன்னாடி இருந்ததைவிட இப்போது மிகுந்த ஆபத்தில் இருக்கிறேனே!” என்று தனக்குள் சொல்லிக்கொண்டது பறவை.

திடீரென்று அனைத்தும் நின்றன. மீண்டும் அமைதியாகவும் பிரகாசமாகவும் இருந்த வானில், மிகுந்த எச்சரிக்கையுடன் பறந்தது பறவை. மேலிருந்து கீழே பார்த்தபோது, இதற்கு முன்பு இல்லாத ஏதோ ஒன்று கடலில் உருவாகி இருப்பதைக் கவனித்தது.

வானிலிருந்து கடல் நீண்ட தொலைவில் இருப்பதை அறிந்த பறவை, நன்றாகப் பார்ப்பதற்காக இன்னும் கீழே பறந்து வந்தது. ராட்சத பாறைகள் கடலை நிறைத்திருந்தன. தண்ணீருக்கு மேலே அவை நீட்டிக்கொண்டிருந்தன. அவற்றைச் சுற்றிலும் இருந்த நீர், பாறைகளின் மீது மோதுவதையும் பின்னால் செல்வதையும் மறுபடியும் மோதுவதையும் பார்த்தது. சிறிது இறங்கி வந்த பறவை, பாறையின் உச்சியில் தன்கால் விரல்களால் தொட்டது. மேற்பரப்பு கடினமாகவும் பாதுகாப்பாகவும் இருந்ததால், ஓய்வெடுக்க ஓர் இடம் கிடைத்ததை நினைத்து மகிழ்ந்தது.

உட்கார்ந்த இடத்திலிருந்து சுற்றிலும் பார்த்த பறவை, கண்ணுக்கு எட்டும் தூரம்வரை, கடலுக்கு மேலே பாறைகள் நீட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்தது. அந்தப் பாறைகள் எல்லாம் வளர்ந்து ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட பிலிப்பைன்ஸ் நாட்டை உருவாக்கின.

லியானா ரொமுலோ - தமிழில்: சூ.ம.ஜெயசீலன்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in