

ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலில் சீறிப்பாய்ந்துகொண்டிருந்த நாட்டிலஸ் நீர்மூழ்கி, "ஆழம் - 150 மீட்டர்" என்ற அறிவிப்புடன் வேகத்தைக் குறைத்தது.
“அட! மறுபடியும் இதே இடமா? ஆறு நாளா ராத்திரி நேரம் இங்க வந்து காத்திருக்கோம். நாம என்னதான் பார்க்கப் போறோம்? ” என்று அலுத்துக்கொண்டான் செந்தில்.
இரண்டு மணி நேரம் அப்படியே கழிந்தது.
“அதோ அதோ” என்று அருணா பரபரப்பானார். தூரத்தில் நிழலாக ஒரு பெரிய மீனின் வடிவம் தெரிந்தது. அருணாவின் முகம் பிரகாசமானது.
ஆறு அடி நீளம் கொண்ட பெரிய மீன் அது. கறுப்பும் பழுப்பும் அடர்நீலமுமாகத் தெரிந்தது.
“இந்த மீனைப் பார்க்கவா இவ்வளவு தூரம் வந்தோம்!” என்றாள் ரக்ஷா.
\‘ஆமா, ஏதோ டைனோசர் காலத்து இனம் மாதிரி இருக்கு” என்றாள் ரோசி.
“அதேதான். சீலகாந்த் (Coelacanth) பண்டைய மீன் இனம்தான். 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்னால டைனோசர்கள் அழிஞ்சு போனதே, அப்போது இந்த மீன் இனம் அழிஞ்சு போயிட்டதா எல்லாரும் முடிவு பண்ணிருந்தாங்க. இது அழியலைன்னு எப்படிக் கண்டுபிடிச்சாங்க தெரியுமா?” என்று கேட்டார் அருணா.
“எப்படி?” என்று மூவரும் ஒரே குரலில் கேட்டார்கள்.
“1938இல் தென்னாப்பிரிக்காவை ஒட்டிய கடலில் இந்த மீன் வலையில் மாட்டியது. மீனவர்கள் அந்தத் தகவலை அருங்காட்சியகத்துக்குச் சொன்னாங்க. அருங்காட்சியகத்தின் பொறுப்பாளரா இருந்த மார்ஜரி கோர்னே லாட்டிமர் இதை மீனியலாளர் ஜே.எல்.பி.ஸ்மித்திடம் சொன்னார். அவர்தான் இது அழிந்துபோனதா சொல்லப்பட்ட சீலகாந்த் இனம்னு உறுதிப்படுத்தினார்” என்றார் அருணா.
“ஆராய்ச்சியாளர் ஸ்மித்துக்கு எவ்வளவு ஆச்சரியமா இருந்திருக்கும்!” என்றாள் ரோசி.
“மற்ற மீன்களோடு ஒப்பிடும்போது இதில் பல சிறப்பம்சங்கள் இருக்கு. இதோட இதயம், முதுகுத்தண்டு எல்லாமே கொஞ்சம் வேறுபட்டது. ஆழ்கடலில் வாழ்றதுக்காக இதில் கொழுப்பு நிரம்பிய நுரையீரல் போன்ற அமைப்பு இருக்கும். இந்த மீனுடைய பரிணாம வளர்ச்சி, மரபணுக் கூறுகளை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செஞ்சிட்டு வர்றாங்க. 1999இல் இந்தோனேசியாவிலும் ஒரு சீலகாந்த் கண்டறியப்பட்டது. அது ஒரு தனி இனம்னு விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியிருக்காங்க”என்றார் அருணா.
“இது இரவில்தான் வேட்டையாடுமா? ” என்றாள் ரோசி.
“ஆமாம், இது ஒரு இரவாடி இனம். பகலில் ஓய்வெடுத்துவிட்டு இரவில் கணவாய்கள், மீன்களை வேட்டையாடும். இந்த மீன் பற்றி 5 ஆண்டுகளா ஆராய்ச்சி செய்துவரும் என் நண்பர், இதுவரை 3 மீன்களைத்தான் பார்த்திருக்காராம்” என்றார் அருணா.
“அப்படியா?” என்று செந்தில் திகைக்க, “ஆமாம், நாம இதைப் பார்க்க முடிஞ்சது பெரிய அதிசயம், மற்ற விஞ்ஞானிகள் இதைக் கேட்டா ஆச்சரியப்படுவாங்க” என்று அருணா சொல்ல, மூவரும் ஆச்சரியப்பட்டனர்.
“இதை நேரில் பார்க்கறது ஏன் இத்தனை கஷ்டமா இருக்கு? இது அழிந்துவரும் இனமா?” என்று கவலையுடன் கேட்டாள் ரக்ஷா.
“ஆமா, இப்போ மொத்தமே 500 ஆப்பிரிக்க சீலகாந்த் மீன்கள்தாம் பாக்கி இருக்கு. ஆழ்கடலில் மீன்வலைகள் வீசப்படும்போது, அதில் தற்செயலா சிக்கி நிறைய சீலகாந்த் மீன்கள் அழிஞ்சிருக்கு. ஆனா, சீலகாந்த் மீன்களை யாரும் சாப்பிடுவதில்லை. அது தற்செயலா நடப்பதுதான். ஆகவே இந்த மீன்களைத் தொந்தரவு செய்யாமல் ஆழ்கடலில் மீன்பிடிக்க முடியுமான்னு வனவிலங்குப் பாதுகாவலர்கள் ஆராய்ச்சி செஞ்சிட்டு இருக்காங்க. அது தவிர, இந்த மீன் இருக்கும் இடமும் ரொம்ப ஆழமா இருப்பதால், மற்ற மீன்கள் போல இதைச் சுலபமா பார்க்க முடிவதில்லை” என்று சொல்லி முடித்தார் அருணா.
“டைனோசர் காலத்தில் இருந்தே தாக்குப் பிடிக்கும் மீன் இனம்... ஆஹா.... எனக்குக் கால இயந்திரத்தில் பயணம் செஞ்ச மாதிரி இருக்கு” என்றாள் ரோசி. எல்லாரும் சிரித்தனர்.
சீலகாந்த் மெதுவாக நீந்திக்கொண்டிருக்க, அதைத் தொந்தரவு செய்யாமல் ஓசையின்றி புறப்பட்டது நாட்டிலஸ் நீர்மூழ்கி.
(அதிசயங்களைக் காண்போம்!)
நாராயணி சுப்ரமணியன்
nans.mythila@gmail.com