வல்லரசில் உருவான இந்தியக் குட்டி விஞ்ஞானி!

வல்லரசில் உருவான இந்தியக் குட்டி விஞ்ஞானி!
Updated on
1 min read

அமெரிக்காவில் சூப்பர் குட்டி கண்டுபிடிப்பாளராக விஸ்வரூப மெடுத்துள்ளார் மானசா மெண்டு. யார் இந்த மானசா? இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுமி. பெரிய விஞ்ஞானியாக மாறும் அளவுக்கு அப்படி என்ன செய்தார்?

அமெரிக்காவில் டிஸ்கவரி எஜுகேஷன் எனும் அமைப்பு உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்காவில் இளம் விஞ்ஞானிகளைக் கண்டுபிடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறது இந்த அமைப்பு. அண்மையில் புதிய கண்டுபிடிப்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக இந்த அமைப்பு நேஷனல் பிரிமியர் அறிவியல் போட்டியை அறிவித்தது.

மினசோட்டாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பங்கேற்க ஆயிரக்கணக்கான மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளுடன் வந்திருந்தார்கள். போட்டியில் 5 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குப் பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் இறுதி சுற்றுக்குப் பத்து பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள். இந்தப் பத்து பேரில் ஐந்து பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் அமெரிக்கக் குழந்தைகள்.

இப்படிப் பல பிரிவு போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்தவர்தான் மானசா மெண்டு. இவருக்கு 2016 ஆண்டுக்கான ‘டாப் யங் சைன்டிஸ்ட்' என்ற பட்டம் வழங்கப்பட்டது. இறுதிப் போட்டியில் காற்றின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் சாதனத்தைக் கண்டுபிடித்தற்காக மானசாவுக்கு முதல் பரிசு கிடைத்தது. அவருக்குப் பரிசாக 25 ஆயிரம் டாலர்கள் கிடைத்தன.

அமெரிக்காவின் இளம் விஞ்ஞானியாகியுள்ள மானசா மெண்டுவுக்கு 13 வயதுதான் ஆகிறது. ஓஹாயோ மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தச் சாதனத்தை ஏன், எதற்காகக் கண்டுபிடித்தாய் என்று நடுவர்கள் மானசாவிடம் கேட்டார்கள். அவர் சொன்ன பதில் இதுதான்:

“ஒரு தடவை இந்தியாவுக்குப் போயிருந்தேன். அங்கே பல ஊர்கள்ல சுத்தமான குடிநீர் இல்லை. மின்சாரமும் இல்லை. அடிப்படை வசதிகள் இல்லாமல் நிறைய மக்கள் கஷ்டப்படுறாங்க. இதற்கு என்ன செய்ய முடியும்னு யோசிச்சேன். அப்போ காற்றின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஐடியா வந்தது” என்று சொன்னார் மானசா. இந்தப் போட்டியில் பரிசாகக் கிடைத்த பணத்தை மானசா, அடுத்த கட்டப் புதிய ஆராய்ச்சிகளுக்காகப் பயன்படுத்தப் போகிறாராம்.

மானசாவுக்கு மனப்பூர்வமாக வாழ்த்துகளைச் சொல்வோமா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in