

அப்படியே நொறுங்கி உட்கார்ந்தவர்தான். யார் வந்து என்ன கேட்டாலும் அப்பாவின் காதில் எதுவும் விழவில்லை. எனக்கு இனி எதுவும் இல்லை, என்னை எதுவும் கேட்காதீர்கள் என்பதுபோல் கதவைச் சாத்திக்கொண்டுவிட்டார். ஒரு பேரரசர் இப்படி இருட்டோடு இருட்டாக முடங்கிவிட்டால் நாடு என்னவாகும்? மக்கள் என்னாவார்கள்? இதை யார் ஷாஜகானிடம் போய்ச் சொல்வது? யாரால் அவரைத் தேற்றமுடியும்? யார் சொன்னால் அவர் மீண்டும் தன் பணிகளைப் பார்ப்பார்?
வேறு யார்? ஜஹனாராவிடம்தான் போயாக வேண்டும் என்று அமைச்சர்களுக்குத் தெரியும். மாட்டேன், முடியாது என்று ஜஹனாரா இதுவரை யாரிடமும் சொன்னதில்லை. அமைச்சர்கள் மட்டுமல்ல, பொதுவாகவே உதவி என்று கேட்டு வந்த எவரையும் ஜஹனாரா வெறுங்கையோடு திருப்பி அனுப்பியது கிடையாது. எல்லாமே உண்மைதான். ஆனால், இந்த முறை அவரிடம் போவது சரியாக இருக்குமா? உதவக்கூடிய நிலையில் அவர் இருப்பாரா?
பேரரசரின் மனைவி மும்தாஜ் மஹால் இறந்துவிட்டார். அவரால் துக்கத்தில் இருந்து வெளிவர முடியவில்லை. எப்படியாவது அப்பாவைத் தேற்றி அவரை எங்களுக்கு மீட்டுக்கொடு என்று ஜஹனாராவிடம் கேட்க வேண்டும். சிக்கல் என்னவென்றால் அவரும் துக்கத்தில்தானே இருப்பார்? பேரரசருக்கு மனைவி என்றால் ஜஹனாராவுக்கு அம்மா அல்லவா? இவ்வளவு பெரிய அரசரே சுருண்டு கிடக்கும்போது, 17 வயது ஜஹனாரா எப்படி இருப்பாரோ? அவருக்கே ஆதரவு தேவைப்படும் நேரத்தில் நாம் ஆதரவு கேட்டுப் போய் நிற்பது சரியா?
மிகுந்த யோசனையோடும் மிகுந்த தயக்கத்தோடும் ஜஹனாராவிடம் சென்றார்கள். வாருங்கள் என்று அமரவைத்தார் ஜஹனாரா. ’’உங்களுக்கு ஏதேனும் தேவைப்படுகிறதா?’’ என்று கேட்ட இளம்பெண்ணைக் கண்டதும் அவர்களின் கண்கள் கலங்கின. வந்த காரியத்தை மெல்லிய குரலில் சொன்னார்கள். ஜஹனாரா அமைதியாகக் கேட்டுக்கொண்டார். பிறகு எழுந்து நின்று, ’’நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள்’’ என்று அவர்களை அனுப்பிவைத்தார்.
ஜஹனாரா எப்போது அப்பாவைப் பார்த்தார் என்றோ என்னவெல்லாம் பேசினார் என்றோ எப்படி அவருக்கு ஆறுதல் சொன்னார் என்றோ ஒருவருக்கும் தெரியாது. ஆனால், ஷாஜகான் எழுந்து வந்துவிட்டார்.
ஒவ்வொரு முறை முக்கிய முடிவை எடுக்கும்போதும், ஒவ்வொரு முறை தடுமாற்றம் வரும்போதும், “ஜஹனாரா கொஞ்சம் இங்கே வாயேன்” என்று மகளிடம்தான் ஓடினார் ஷாஜகான். அரசியலா? ஜஹனாரா. நிர்வாகமா? ஜஹனாரா. தத்துவ நூல்களில் விளக்கம் தேவைப்படுகிறதா? ஜஹனாரா. கட்டிடக் கலையில் சந்தேகமா? அதற்கும் ஜஹனாராதான். அப்பா இதைச் செய்யுங்கள் என்று மட்டுமல்ல, அதைச் செய்யாதீர்கள் என்றும் ஜஹனாராவால் உறுதியாகச் சொல்ல முடிந்தது. இந்த வயதிலேயே உங்களுக்கு இருக்கும் நிதானத்துக்கு, உங்களுக்கு இருக்கும் அறிவுக்கு, உங்களுக்கு இருக்கும் ஆற்றலுக்கு நீங்கள் பேரரசியாகத்தான் வந்திருக்கவேண்டும் என்று அமைச்சர்கள் வியந்தனர்.
அவருக்குப் பாடம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியரும்கூட ஒருநாள் விடைபெற்றுச் சென்றுவிட்டார். “ஜஹனாரா, இனி உனக்குக் கற்றுக்கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை. உன்னைவிட வயதில் இரு மடங்கு மூத்தவர்கள்கூடத் தடுமாறும் பாடங்களை நீ சுலபமாகக் கற்றுத் தேர்ந்துவிட்டாய். நியாயப்படி எனக்குப் பிறகு நீதான் ஆசிரியராக வரவேண்டும். உன் அறிவுக்கு நீ உலகை ஆளவேண்டியவள் ஜஹனாரா!”
“ஜஹனாரா, உன்னிடம் கல்வித்துறை இருந்தால் இந்நாடு இப்போது வேறு மாதிரியாக மாறியிருக்கும். நீ மாளிகையை ஆளவேண்டியவள். அமைச்சர்களே உன்னிடம் வந்து ஆலோசனைகள் கேட்கிறார்கள் என்றால், நீ தலைமை அமைச்சராக அல்லவா இருக்க வேண்டும்? நீ நிதி நிர்வாகியாக இருக்க வேண்டியவள். உன் தகுதிக்கு நீ ஒரு பேரரசியாக இருக்க வேண்டியவள் என்பதை அறிவாயா, ஜஹனாரா?”
ஒவ்வொரு முறை ஒவ்வொருவர் இப்படிச் சொல்லும்போதும் புன்னகை செய்துவிட்டு நகர்ந்துவிடுவார் ஜஹனாரா. பாவம் இவர்கள் எல்லாம்! நான் இவற்றில் எதுவாகவும் மாற முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். என்னால் ஒரு பேரரசருக்கு வழிகாட்ட முடியும். ஒரு பேரரசரை மணந்துகொள்ள முடியும். ஒரு பேரரசரின் அம்மாவாக முடியும். ஆனால், நாட்டை நான் ஆள முடியாது. எல்லாருக்கும் எல்லாவற்றையும் நான் கற்றுக்கொடுக்கலாம். ஆனால், ஓர் ஆசிரியர் ஆக முடியாது. எனக்குப் பல துறைகள் தெரிந்திருக்கலாம். ஆனால், எந்த ஒரு துறைக்கும் நான் தலைமை ஏற்க முடியாது.
இவர்களோடு சேர்ந்து நான் மலை ஏறலாம். ஆனால், சிகரத்தில் என்னால் கால் பதிக்க முடியாது. பெண்ணாக இருப்பதாலேயே இன்னோர் ஆணுக்கு வழிவிட்டு நான் நகர்ந்துவிட வேண்டும். ஒவ்வொன்றிலும் எது உச்சம் என்பது எனக்குத் தெரியும். இன்னும் ஒரே ஓர் அடி எடுத்து வைத்தால் என்னால் அதைத் தொட்டுவிடவும் முடியும். ஆனால், தொட மாட்டேன்.
களத்தில் மூச்சிரைக்க, உயிரைக்கொடுத்து ஓடுவேன். எல்லாரையும் முந்துவேன். வெற்றிக்கோடு கண்ணுக்குத் தெரியும். ’போ ஜஹனாரா போ’ என்று என் இதயம் பிடித்துத் தள்ளும். கோட்டைத் தீண்டுவதற்கு முந்தைய கணம் என் கால்கள் உறைந்து நின்றுவிடும். பேரரசர்களும் பேராசிரியர்களும் அமைச்சர்களும் நிபுணர்களும் வெகு தொலைவிலிருந்து ஓடிவந்து என்னைக் கடந்து முன்னே செல்வார்கள்.
மூச்சு வாங்கி முடித்த பிறகு என்னிடம் வருவார்கள். ’’ஜஹனாரா, எவ்வளவு நெருக்கடி வந்தாலும், எத்தனை பெரிய துயர் வந்தாலும் உன்னால் எப்படி இவ்வளவு நிதானமாக இருக்கமுடிகிறது? இந்தச் சிறு வயதில் எப்படி இவ்வளவு பக்குவமாக நடந்துகொள்கிறாய்? அந்த மாயத்தை எனக்கும் கற்றுக்கொடேன்!”
நான் அவர்கள் கண்களைப் பார்த்துப் புன்னகை செய்வேன்.
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: marudhan@gmail.com