இப்படியும் கொண்டாடலாமே!

இப்படியும் கொண்டாடலாமே!

Published on

குழந்தைகள் தினம் அடுத்த வாரம் வரப்போகிறது. அதை எப்படிக் கொண்டாடப் போகிறீர்கள்? புத்தகங்கள் வாசித்தும் கொண்டாடலாமே. அதற்குக் கீழ்க்கண்ட புத்தகங்கள் உதவும்:

மாயக் கண்ணாடி

குழந்தைகளுக்கான நேரடிக் கதைகள், மலையாள மொழிபெயர்ப்பைத் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் உதயசங்கர் எழுதிய நேரடிக் கதைகளின் தொகுப்பு இது. வித்தியாசமான முன் அட்டையுடன் வந்துள்ளது. இந்தக் கதைகளில் சில ‘மாயா பஜாரி’ல் ஏற்கெனவே நீங்கள் வாசித்து மகிழ்ந்தவைதான். பொதுவாக ராஜாக்களைப் பாராட்டும், ராஜாக்களைப் புகழும் கதைகளையே அதிகம் கேட்டிருப்போம். ஆனால், இந்தத் தொகுப்பில் உள்ள கதை ஒவ்வொன்றும் ராஜாக்களின் கோமாளித்தனங்களைக் கேலி செய்கின்றன.

நூல் வனம், தொடர்புக்கு: 9176549991

பூமியின் வடிவத்தைக் கண்டறிந்தது எப்படி?

பூமியின் வடிவம் தட்டையா, வட்டமா, உருண்டையா? உருண்டை வடிவம்தான். ஆனால், இந்த உருண்டை வடிவமும், மிகச் சரியான உருண்டையா, இல்லையா? இது பற்றிய கேள்விகள் பண்டைக் காலம் முதலே பலருக்கும், குறிப்பாக விஞ்ஞானிகளிடையே தோன்றின. அந்தக் கேள்விகளிலிருந்து பூமியின் வடிவத்தைக் கண்டடைந்த விதத்தை அழகாகப் படங்களுடன் சுவைபடக் கூறுகிறது இந்த நூல். இந்த நூலை எழுதியவர் அனதோலி தொமீலின். இதை சுவாரஸ்யம் குறையாமல் குன்றாமல் மொழிபெயர்த்திருப்பவர், ரஷ்ய நூல்களின் பழைய மொழிபெயர்ப்பாளர் நா. முகம்மது செரீபு.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு, தொடர்புக்கு: 044-26359906

இறக்கை விரிக்கும் மரம்

வானத்தில் பறக்க ஆசைப்படும் ஒரு மரத்தைப் பற்றிய கதை, நட்புடன் பழகும் காக்கையைப் பற்றிய கதை எனப் பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய இரண்டு கதைகளைக் கொண்ட புதிய சிறார் நூலே இந்தத் தொகுப்பு.

டிஸ்கவரி புக் பேலஸ், தொடர்புக்கு: 8754507070

கனவினைப் பின் தொடர்ந்து...

வரலாறு எவ்வளவு சுவாரஸ்யமானது என்று சில புத்தகங்களை வாசித்தால் தெரியும். அப்படிப்பட்ட புத்தகங்களில் ஒன்று இது. சிந்து சமவெளி மக்கள், நாளந்தா பல்கலைக்கழகம், கிரேக்கத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்பு போன்ற முக்கிய வரலாற்றுத் தகவல்களை ஒரு கதை போலப் படித்தால் எப்படியிருக்கும்? அந்த அனுபவத்தைத் தருகிறது இந்த நூல். பிரபல ஆங்கிலக் குழந்தைகள் எழுத்தாளர் த.வெ. பத்மா எழுதியதைச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார் ஜே. ஷாஜஹான்.

எதிர் வெளியீடு, தொடர்புக்கு: 98650 05084

மந்திரக் கைக்குட்டை

குழந்தைகளுக்காகத் தொடர்ச்சியாக எழுதிவரும் கொ.மா.கோ. இளங்கோ எழுதிய சிறார் கதைகளின் தொகுப்பு இது. குழந்தைகளின் கற்பனையை வித்தியாசமாகத் தூண்டக்கூடிய இந்தக் கதைகளில் சில ‘மாயா பஜாரி’ல் ஏற்கெனவே நீங்கள் வாசித்தவைதான். சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கதை வடிவிலேயே அழகாகச் சில கதைகள் சொல்லிச் செல்கின்றன.

புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044-24332924

சுல்தானின் காடு

காட்டில் வாழும் அம்மா புலிக்கும் அதன் குட்டியான சுல்தானுக்கும் ஒரு தோழி உண்டு. அவர்தான் இந்தப் புத்தகத்துக்கான படங்களை எடுத்த பீனா. அவர் ஒரு காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர், காடுகளை நேசிப்பவர். ராஜஸ்தானில் உள்ள ரன்தம்போர் காட்டில் வாழும் குட்டிப் புலி சுல்தானின் வாழ்க்கையைப் படங்கள், அப்பகுதி பொம்மைகள் வழியாக இந்தப் புத்தகம் நமக்குச் சொல்கிறது. கமலா பாசின் எழுதிய இந்த நூலைத் தமிழில் பூரணி பாலேந்திரா மொழிபெயர்த்துள்ளார். மொழிபெயர்ப்பு எளிமையாகவும், சீராகவும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

தூலிகா, தொடர்புக்கு 044 24331639

மின்மினி

பள்ளி ஆசிரியரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கச் செயல்பாட்டாளருமான என். மாதவனின் மொழிபெயர்ப்பில் வெளியான சிறார் கதைகளின் தொகுப்பு இது. பலவும் வாய்மொழிக் கதைகள், எளிய மனிதர்களைப் பற்றிய கதைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு

மீசைக்காரப் பூனை

தமிழ் சிறார் இலக்கியத்தில் பாடல்கள் பெரிதும் குறைந்துவிட்ட நிலையில், சமீப காலமாகத் தொடர்ச்சியாகச் சிறார் பாடல்களை எழுதி வருகிறார் எழுத்தாளர் பாவண்ணன். அவருடைய புதிய சிறார் பாடல் தொகுப்பு இது. ரயிலில் சந்தித்த சிறார்கள் பேசிய கதையின் உந்துதலால் இப்பாடல்களை அவர் எழுதியிருக்கிறார்.

புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு

மக்கு மாமரம்

ஒரு மரம் ஒரே இடத்தில்தான் இருக்க வேண்டுமா? ஒரு மரம் வேர்களை நிலத்திலிருந்து பிடுங்கிக்கொண்டு தனக்கான பாதையை, தனக்கான இலக்கைத் தேடி நடக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்? அதைத்தான் செய்கிறது இந்தக் கதையில் வரும் மாமரம். பல இடங்கள், பல மனிதர்கள், உயிரினங்கள்-தாவரங்களைப் பார்க்கும் அந்த மரம், கடைசியில் என்னவாக மாறியது என்பதுதான் கதை. இப்படிக் கேள்வி கேட்டுப் பயணிக்கும் மாமரத்துக்கு ‘மக்கு மாமரம்' என்று தவறாக மற்றவர்கள் பட்டப்பெயர் வைத்தாலும், அதைப் புத்தகத்துக்குத் தலைப்பாக வைக்காமல் இருந்திருக்கலாம். ஏ.என். பெட்னேகர் எழுதிய கதையைத் தமிழில் கொ.மா.கோ. இளங்கோ மொழிபெயர்த்திருக்கிறார்.

நேஷனல் புக் டிரஸ்ட், தொடர்புக்கு: 044-28252663

ஒளி விளையாட்டு

அறிவியல் விளையாட்டுகள் பாடத்தின் ஒரு பகுதியாகவும், பொழுதுபோக்கு அம்சமாகவும் மாறி வரும் காலம் இது. அறிவியலை விளையாட்டு ரீதியாகக் கற்க எளிமையான பல விளையாட்டுகளை அறிமுகப்படுத்துகிறது தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்டுள்ள இந்நூல். எஸ்.டி. பால கிருஷ்ணன், சி. வெங்கடேசன் ஆகியோர் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளனர்.

அறிவியல் வெளியீடு, தொடர்புக்கு: 044-28113630

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in