

தமிழ் நவீன இலக்கியவாதிகளில் குறிப்பிடத் தக்கவர் கு.அழகிரிசாமி. தமிழின் சிறந்த சிறுகதைகளில் அவருடைய கதைகளுக்கு முதல் வரிசையில் இடம் உண்டு. அதிலும் குறிப்பாகக் குழந்தை கதாபாத்திரங்களை மையமிட்ட புகழ்பெற்ற பல கதைகளை அவர் எழுதியுள்ளார். எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் கதைகளில் குழந்தைகளின் தனித்த குணங்கள், அழகாகப் பதிவாகியுள்ளான. பொதுவாகப் பெரியவர்கள், குழந்தைகளைத் தங்கள் இடத்தில் வைத்துப் பார்த்து, ‘நீ இப்படிச் செய்யலாமா?’, ‘அப்படி நடக்கலாமா?’ என அறிவுரைகள் சொல்வார்கள். ஆனால், அழகிரிசாமி, குழந்தைகளின் இயல்புடன் பொருத்திப் பார்க்கிறார்.
‘அன்பளிப்பு’, ‘ராஜா வந்திருக்கிறார்’ போன்ற கதைகள் அழகிரிசாமியின் இந்த அம்சத்துக்கு உதாரணமானவை. இந்த இரண்டு கதைகளும் அழகிரிசாமியின் பிரபலமான கதைகள். இந்த இரண்டு கதைகளிலும் சிறார்களே முக்கியக் கதாபாத்திரங்கள். ‘ராஜா வந்திருக்கிறார்’ கதையில் சிறாருக்கே உரிய விளையாட்டு, கேலிப் பேச்சு, செல்லச் சண்டை என அவர்களது உலகத்தைச் சுவாரசியமாகச் சொல்லியிருப்பார். ஆளுக்கு ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு, பக்கம் திறந்து காண்பித்து ஒரு விளையாட்டு ஆடுகிறார்கள். சிறார்கள் தலையைக் குனிந்தபடி எந்நேரமும் வீடியோ கேம் விளையாடும் இன்றைய காலகட்டத்தில் இதைப் படிப்பதற்கே ஆசுவாசமாக இருக்கிறது.
‘பேதைமை’ கதையில் சிறுவர் இருவரின் களங்கமில்லாக் குற்றத்தை அழகிரிசாமி சொல்லியிருக்கிறார். பிச்சைக்காரர் ஒருவரின் சோற்றுப் பாத்திரத்தில் சிறார்கள் மண் அள்ளிப் போட்டுவிடுகிறார்கள். ஐந்து வயதுக்கு உள்பட்ட தம்பியும் அவனுக்குச் சற்று மூத்த அண்ணனும்தான் இந்தக் காரியத்தைச் செய்துவிடுகிறார்கள். இதைப் பார்த்த ஒரு கடைக்காரர் குழந்தைகள் இருவருக்கும் தர்ம அடி கொடுக்கிறார். இதைப் பார்த்த எழுத்தாளரின் அனுபவமாக இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கும். அந்தச் சிறுவர்களை எழுத்தாளர் கடைக்காரரிடமிருந்து காப்பாற்றுகிறார்.
அவர்கள் செய்தது தவறுதான். ஆனால், அவர்கள் முகமெல்லாம் வீங்கிப் போகும் அளவுக்கு அடிக்க வேண்டியதில்லை என்பது அவரது கருத்து. சிறார்களை அவர்களது வீட்டில் விடலாம் எனக் கூட்டிக்கொண்டு செல்கிறார். சிறார்கள், சேரிப் பகுதியில் உள்ள ஒரு சிறு குடிசைக்கு முன்னால் போய் நிற்கிறார்கள். மெலிந்த, நோயாளித் தாய் முகமெல்லாம் வீங்கி அழுதபடி இருக்கும் தன் குழந்தைகளைப் பார்த்துக் கண்ணீர்விடுகிறார். ஆள்கள் இருக்கவே முடியாதபடி அந்தக் குடிசை இருக்கிறது. குழந்தைகள் செய்த தவறுக்கான காரணத்தை எழுத்தாளர் அழகிரிசாமி நமக்குக் கண்டுபிடித்துச் சொல்கிறார். அது அவர்களது பேதைமை என்கிறார்.
‘காற்று’ கதையில் கற்பகம் என்கிற சின்னஞ்சிறு குழந்தையின் மனத்தைப் படம்பிடித்துக் காண்பித்திருப்பார். ஒரே ஓர் அறைகொண்ட வீட்டில் வசிக்கும் அவளுக்கு அந்தத் தெருவில் உள்ள ஒரு வீட்டுத் திண்ணை ஆசுவாசமாக இருக்கிறது. ஆனால், அந்தத் திண்ணை வீட்டுக்காரருக்குக் குழந்தைகள் திண்ணையில் வந்து கும்மாளம் போடுவது பிடிக்கவில்லை. குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்க நினைத்து, ஒருநாள் ஒளிந்திருந்து ஒரு குழந்தையைத் தலைமுடியோடு சேர்த்துப் பிடித்து அடித்துவிடுகிறார். அப்படி மாட்டிக்கொண்டது வேறு யாருமல்ல; கற்பகம்தான். அடியை வாங்கிக்கொண்டு வீட்டுக்குள் முடங்குகிறாள்.
ஒற்றை அறையில் எவ்வளவு நேரம் இருக்க முடியும்? அவள் ஓடியாட வேண்டிய குழந்தை அல்லவா? தன் அப்பாவிடம் ஒரு திண்ணை கட்டச் சொல்ல வேண்டும் என நினைக்கிறாள். அது வாடகை வீடு, அது அவளது அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயம். அவள் ஒரு பெரிய திண்ணையைக் கனவு காண்கிறாள். ‘இருவர் கண்ட ஒரே கனவு’, ‘தம்பி ராமையா’ போன்ற இன்னும் பல கதைகளில் சிறார்களின் உலகத்தை அழகிரிசாமி உணர்வுபூர்வமாகச் சித்தரித்துள்ளார். எளிமையான வாக்கிய அமைப்பு, பெருவழக்குச் சொற்களின் பயன்பாடு என அவரது கதைகளும் சிறுவர்களைப் போல் இயல்பும் புத்தம் புதிய அழகும் கொண்டவை. இந்த அம்சங்களில் சிறார் இலக்கியங்களுக்கும் ஒரு முன்மாதிரி என கு. அழகிரிசாயின் இவ்வகைக் கதைகளைச் சொல்லலாம்.