

வேகமாக வந்த நாட்டிலஸ் நீர்மூழ்கி, ஆஸ்திரேலியாவின் பெரும் பவளத்திட்டு அருகில் நின்றது. விளக்கைப் போட்ட அருணா, “இரவு நேரத்துல பவளத்திட்டுகள் தனி அழகுதான்! ஒரு பிரம்மாண்ட நிகழ்வைப் பார்ப்பதற்காக வந்திருக்கோம். அதோ, அங்க பாருங்க” என்று பரபரப்பானார்.
பவள உயிரிகளிடமிருந்து சின்னஞ்சிறிய துகள்கள் வெளியேறிக்கொண்டிருந்தன! தூறலாகத் தொடங்கி ஒன்றிரண்டு நிமிடங்களிலேயே அடித்துப் பெய்யும் மழையைப் போல சின்ன சின்ன துகள்கள் வெளியில் வரத் தொடங்கின. சில நிமிடங்களிலேயே அந்த இடத்தில் அடர்த்தியாகப் பனி பெய்வதுபோல் இருந்தது.
“பவள உயிரிகள் முட்டை போடுதா?” என்று கேட்டாள் ரக்ஷா.
“இது இனப்பெருக்க நிகழ்வுதான். ஆனால், முட்டை போடும் நிகழ்வு இல்லை. முட்டை என்பது உயிரணுவும் கருமுட்டையும் சேர்ந்த பிறகு வரும். ஆனா, இது இணைசேருதல் நிகழ்வு. இங்க இருக்கும் சில பவள உயிரிகள் இணை சேர்வதைத்தான் பார்த்துகிட்டு இருக்கோம். அதாவது இந்தப் பவள உயிரிகள் கருமுட்டைகளையும் உயிரணுக்களையும் வெளியேற்றுது” என்று சொல்லி நிறுத்தினார் அருணா.
“இது Broadcast Spawning தானே! அதாவது தண்ணீரில் உயிரணுக்கள், கருமுட்டையை அப்படியே வெளியிடும் பண்பு. பாடத்தில்கூட வருமே...” என்றான் செந்தில்.
“பிரமாதம்! அதேதான்! இந்த இனப்பெருக்க செல்களுக்குச் சில மணிநேரம்தான் உயிர்ப்பும் வீரியமும் இருக்கும் என்பதால் இரண்டு வகை செல்களும் ஒரே நேரத்தில் தண்ணீரில் இருந்தால்தான் இனப்பெருக்கம் சரியா நடக்கும். இப்படி ஒரே நேரத்தில் இனப்பெருக்கம் செய்வதை Synchronised spawningனு சொல்வாங்க. இது எல்லாப் பவள உயிரிகளிலும் இருக்காது. இந்த ஒத்திசைவு இனப்பெருக்கம் இடம், இனத்தைப் பொறுத்து மாறுபடும் பண்பு” என்றார் அருணா.
“அப்புறம் எப்படி ஒரே நேரத்தில் தயாராகும்?” என்று ஆச்சரியப்பட்டாள் ரோசி.
“அங்கதான் சுற்றியுள்ள வெப்பநிலையும் நிலவின் சுழற்சியும் முக்கியப் பங்கு வகிக்குது. இன்று முழு நிலா இருக்கு பார்த்தீங்களா? பொதுவா பவள உயிரிகள் பௌர்ணமி அன்றுதான் இனப்பெருக்கம் செய்யும். ஆண்டில் ஒரு சில மாதங்களில் முழு நிலவு நாளில் இவை இனப்பெருக்கத்துக்குத் தயாரா இருக்கும். ஆனா, பவள உயிரிகளின் உடலில் இருந்து வெளியேறுவதற்கான அந்த இறுதி உந்துதல் வரணும்னா செல்கள் முதிர்ச்சியடையணும். அதற்குக் கடல்நீர் வெப்பநிலை கொஞ்சம் கூடுதலா இருக்கணும். சராசரியா வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸுக்கும் மேலே போகும்போது இந்த செல்களில் ஒரு மாற்றம் நடந்து அவை முதிர்ச்சியடைகின்றன, பிறகு வெளியேற்றப்படுகின்றன.”
“அப்போ எல்லா நேரமும் கடல் வெப்பநிலை அதிகமாவே இருந்தா நிறைய பவள உயிரிகள் இனப்பெருக்கம் செய்யுமா?” என்று கேட்டான் செந்தில்.
“அது எப்படி? வழக்கமான குளிர்நீரில் இருந்து கொஞ்சம் வெப்பம் அதிகரிச்சா நல்லது. ஆனா, வெப்பமாவே இருந்தா இனப்பெருக்க சுழற்சியில் மற்ற நிலைகள் எப்படி நடக்கும்?” என்றாள் ரோசி.
“இனப்பெருக்கம் வெற்றிகரமா முடிஞ்சாகூட, வரக்கூடிய லார்வா பிழைச்சிருக்கணும், அதுக்கு உணவு கிடைக்கணும், இதுக்கெல்லாம் கூடுதல் வெப்பம் சரிப்பட்டு வராதே” என்றாள் ரக்ஷா.
“நீங்க ரெண்டு பேர் சொன்னதும் சரி. இனப்பெருக்க சுழற்சி என்பது ஒரு நுணுக்கமான அமைப்பு. அதில் எல்லாம் சரியா பொருந்தணும். இது மட்டுமில்ல, ஒரு நாளில் பகல் நேரம் எவ்வளவு, ஓதம் (கடல் ஏற்றவற்றம்), உப்புத்தன்மை எல்லாமே பொருந்தும்போதுதான் இந்த இனப்பெருக்கம் நடக்கும்.”
“இப்போ இனப்பெருக்க செல்களை வெளியிட்ட பவள உயிரிகள் எல்லாமே ஒரே இனமா?” என்று கேட்டாள் ரக்ஷா.
“ஆமாம், குழப்பம் வரக் கூடாது என்பதால் வெவ்வேறு இனங்கள் வெவ்வேறு நேரத்தில் இனப்பெருக்கம் செய்யும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கடல்நீரில் இருக்கும் எல்லா இனப்பெருக்க செல்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவையாதான் இருக்கும். இயற்கையின் ஏற்பாடு அது” என்று சொல்லி முடித்தார் அருணா.
“ஒரு உயிரின் தொடக்கத்தைப் பார்த்திருக்கோம். சிலிர்ப்பா இருக்கு” என்று ரக்ஷா சொல்ல, அருணா அந்த உயிரணு, கருமுட்டையின் நுண்ணோக்கிப் படங்களை அவர்களிடம் காட்டினார்.
முழுநிலவின் ஒளியில் புதிய தலைமுறை ஒன்று தன் பயணத்தைத் தொடங்க, மெதுவாகப் புறப்பட்டது நாட்டிலஸ் நீர்மூழ்கி.
(அதிசயங்களைக் காண்போம்!)
கட்டுரையாளர், கடல்சார் ஆராய்ச்சியாளர்.
தொடர்புக்கு: nans.mythila@gmail.com