மாய உலகம்! - நாம் பார்ப்போமே...

ஓவியம்: லலிதா
ஓவியம்: லலிதா
Updated on
2 min read

எங்களை ஆண்டு கொண்டிருக்கும் மன்னர்களே! உங்கள் அனைவருக்கும் ஃபைஸ் அகமது ஃபைஸ் ஆகிய நான் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அமர்ந்திருக்கும் சிம்மா சனத்துக்கு என் வணக்கம்.

உங்கள் தலையில் மின்னிக்கொண்டிருக்கும் மணிமகுடத்துக்கு என் வணக்கம். நீங்கள் அணிந்திருக்கும் தங்க, வைர, முத்து, மரகத மணி மாலைகளுக்கு என் வணக்கம்.

உங்கள் கையிலுள்ள கூர்மையான வாளுக்கு என் வணக்கம். உங்கள் பிரம்மாண்டமான படைகளுக்கும் குவிந்து கிடக்கும் ஆயுதங்களுக்கும் என் கோடானு கோடி வணக்கம். நிரம்பி வழிந்துகொண்டிருக்கும் உங்கள் கஜானாவுக்கு என் வணக்கம்.

உங்கள் உள்ளங்கையில் இருக்கிறது இந்த உலகம். பூமி உங்களுடையது. வானம் உங்களுடையது. கடலும் நதியும் மலையும் காடும் உங்களுடையவை. இங்கே வாழும் அனைத்து உயிரினங்களையும் நீங்கள்தாம் ஆள்கிறீர்கள்.

நாங்களும் எங்கள் பெற்றோரும் எங்கள் சகோதரர்களும் எங்கள் சகோதரிகளும் எங்கள் குழந்தைகளும் உங்களுக்குச் சொந்தமானவர்கள். எங்கள் வீடும் நிலமும் எங்களுடையவை அல்ல; உங்களுடையவை. நாங்கள் சிரிக்க வேண்டுமா, அழ வேண்டுமா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.

நாங்கள் ஒவ்வொருவரும் உங்களைக் கண்டு அஞ்சுகிறோம். உங்கள் பெயரைச் சொல்லும் போதே ஒவ்வொருவரும் நடுங்கு கிறோம். உங்களுக்கு விருப்பமில்லாத எதையும் நாங்கள் செய்வதில்லை. உங்களுக்குப் பிடிக்காத எதையும் நாங்கள் வாய் திறந்து சொல்வதில்லை. இப்படித்தான் இவ்வளவு காலம் வாழ்ந்து வந்திருக்கிறோம்.

நாளை? நாளை என்னாகும்? நாளையும் உங்கள் மணிமகுடம் ஆடாமல், அசையாமல் உங்கள் தலை மீதே வீற்றிருக்குமா? உங்களிடமுள்ள படைகள் எல்லாம் இன்றுள்ள அதே பலத்துடன் எப்போதும் நிலைத்து இருந்துகொண்டிருக்குமா? உங்கள் மணிமாலைகள் இன்றுபோல் நாளையும் மின்னிக்கொண்டிருக்குமா? உங்கள் வாளில் அதே கூர்மை நாளையும் தங்கி இருக்குமா? நாளையும் நீங்கள்தான் மன்னராக இருப்பீர்களா? அப்போதும் நாங்கள் உங்களுக்குச் சலாம் போட்டுக்கொண்டு இருப்போமா?

மன்னர்களே, நான் உங்களுக்குப் போடும் கடைசி சலாம் இது. கேட்டுக்கொள்ளுங்கள். நாளை அனைத்தும் மாறப்போகிறது. உங்கள் கண் முன்னால், என் கண் முன்னால் அனைத்தும் மாறப் போகிறது. கடந்த காலத்தை நீங்கள் ஆண்டீர்கள். நிகழ்காலத்தை நீங்கள் ஆண்டுகொண்டிருக்கிறீர்கள். எதிர்காலம் உங்களுடையது அல்ல. அதில் உங்களுக்கு இடம் இருக்காது.

உறுதியாகவும் கம்பீரமாகவும் நின்றுகொண்டிருக்கும் உங்கள் சிம்மாசனம் நாளை ஆட்டம் காணும். நீங்கள் பெருமையோடு அணிந்திருக்கும் மணிமகுடம் நாளை ஒரு பாறைபோல் உங்களைப் போட்டு அழுத்தும். சுற்றி நின்று பாதுகாக்கும் படை வீரர்கள் நாளை உங்களைத் தவிக்கவிட்டு ஓடுவார்கள். நீங்கள் குவித்து வைத்திருக்கும் ஆயுதங்கள் எல்லாம் துருப்பிடித்து நொறுங்கும். பொன்னையும் மணியையும் வைத்துக்கொண்டு இனி என்ன செய்வது என்று கன்னத்தில் கை வைத்துத் தவிப்பீர்கள்.

உங்கள் கைகள் நடுங்குவதை நாங்கள் பார்ப்போம். நடுங்கும் விரல்களிலிருந்து உலகம் நழுவி விழுவதை நாங்கள் பார்ப்போம். விரைந்து வந்து அந்த உலகை நாங்கள் எங்கள் கரங்களில் ஏந்திக்கொள்வோம்.

மலைபோல் உயர்ந்து நிற்கும் எங்கள் துயரம் பனிபோல் விலகி ஓடுவதை நாங்கள் பார்ப்போம். எங்கள் கைகளையும் கால்களையும் பூட்டி வைத்திருக்கும் சங்கிலிகள் சுக்கல் நூறாக உடைந்து சிதறுவதை நாங்கள் பார்ப்போம். நூற்றாண்டுகளாக விழுந்து கிடந்த நாங்கள் நாளை எழுந்து நிற்போம். நிற்கும்போது எங்கள் உண்மையான உயரம் என்ன என்பதை நாங்கள் பார்ப்போம்.

இவர்களையா இவ்வளவு காலமாகஅடக்கி வைத்திருந்தோம் என்று நீங்கள் மிரள்வீர்கள். இவர்களுக்காகவா நாம் இவ்வளவு காலமாகப் பணிந்து பணிந்து நடந்துகொண்டிருந்தோம் என்று நாங்கள் திகைப்போம்.

உங்கள் மாளிகைகள் மண்மூடிக்கிடப்பதையும் உங்கள் மணி மகுடங்கள் வீதியில் விழுந்து புரள்வதையும் பார்த்தபடி நாங்கள் நடப்போம். நாங்கள் நடக்க, நடக்க பூமி அதிரும். எங்கள் இதயத்துடிப்பும் பூமித்துடிப்பும் ஒன்று சேரும். அதை நாங்கள் பார்ப்போம்.

எதிர்காலம் எங்களுடையது. இதை எங்களைவிட நீங்கள் நன்றாக அறிவீர்கள். அதனால்தான் நீங்கள் இவ்வளவு பாதுகாப்பாக கோட்டைகள் கட்டிக்கொண்டு உள்ளே ஒளிந்துகொண்டிருக்கிறீர்கள். எதிர்காலத்தை நாங்கள் உங்களிடமிருந்து பறித்துக்கொள்வோம் என்று பயந்துதான் இவ்வளவு படைகளை, இவ்வளவு ஆயுதங்களை நீங்கள் சேர்த்து வைத்திருக்கிறீர்கள்.

உங்களைக் கண்டு நாங்கள் அஞ்சுவதைவிட எங்களைக் கண்டு நீங்கள் அஞ்சுவதுதான் அதிகம் என்பது எங்களுக்குத் தெரியும். எங்கள் அச்சமும் உங்கள் அச்சமும் முடிவுக்கு வருவதை நாம் பார்ப்போம்.

உங்கள் அதிகாரமும் உங்கள் ஆணவமும் உங்களோடு காணாமல் போகட்டும். உங்கள் ஆயுதங்களை நீங்களே எடுத்துச்சென்று விடுங்கள். உங்கள் போர்கள் உங்களோடு மறையட்டும். திறந்து கிடக்கும் உங்கள் கஜானாவை நாங்கள் தீண்டக்கூடப் போவ தில்லை. உங்களோடு தொடர்புடைய எதுவும் எங்களுக்கு வேண்டாம். உங்களிட மிருந்து எங்களுக்குத் தேவைப்படுவது ஒன்றுதான். விடுதலை.

எங்கள் நம்பிக்கைகளைக் கொண்டு ஒரு புதிய உலகை நாங்கள் படைப்போம். எங்கள் கனவுகளைக் கொண்டு ஒரு புதிய வாழ்வை நாங்கள் தொடங்குவோம். எங்கள் உலகைத் தேடி, எங்கள் வாழ்வைத் தேடி எதிர்காலம் புறப்பட்டு வந்துசேரும். அதை நாம் பார்ப்போம்!

(ஃபைஸ் அகமது ஃபைஸ்: பாகிஸ்தானிய கவிஞர், எழுத்தாளர்.)

கட்டுரையாளர், எழுத்தாளர்.

தொடர்புக்கு: marudhan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in