ஆழ்கடல் அதிசயங்கள் 21: அதிவேக வேட்டையாடி

ஆழ்கடல் அதிசயங்கள் 21: அதிவேக வேட்டையாடி
Updated on
2 min read

சீறிப் பாய்ந்த நாட்டிலஸ் நீர்மூழ்கி, நடுக்கடலில் வேகத்தைக் குறைத்தது. சிறிய மீன்கள் கூட்டம் எங்கிருந்தோ வந்தது.

“மீன்கள் வந்தாச்சுனா வேட்டையாடிகளும் வரும், வேடிக்கை பார்க்கத் தயாராக வேண்டியதுதான்” என்றாள் ரோசி.

பெரிய மீன்கள் மெதுவாக வந்தன.

“யப்பா... எவ்வளவு பெரிய மூக்கு!” என்றாள் ரோசி.

“இது மூக்குதானா? இல்லை கொம்புன்னு சொல்லலாமா?” என்று கேட்டான் செந்தில்.

“இது அலகு அல்லது மேல்தாடை நீளமா இருப்பதால் உருவாகும் அமைப்பு. இதோட பெயர் மயில்கோலா (Sail fish). Sail என்றால் பாய்மரம். இதோட முதுகுத் துடுப்பு பாய்மரம் மாதிரி விரியும் என்பதால் வந்த பெயர். மயில்கோலாங்கிற பெயருக்கும் அந்த முதுகுத் துடுப்புதான் காரணம்” என்றார் அருணா.

“கடலில் மிக விரைவாக நீந்தும் மீன் இதுதானே?” என்று கேட்டாள் ரக்‌ஷா.

“அதேதான். இந்த மீன்கள் அதிவேகமா நீந்தும். மணிக்கு 40 கிலோமீட்டர் வேகம் வரைகூட நீந்தும்” என்றார் அருணா. பிறகு வேட்டையைக் கவனிக்கும்படி சைகை செய்தார்.

அங்கே மயில்கோலாக்கள் மெதுவாக நீந்தியபடி மீன்கூட்டத்தை நெருங்கின. திடீரென்று அவற்றின் முதுகுத் துடுப்பு பாய்மரம் போல் விரிந்தது. மீன்கூட்டத்தை நெருங்கிய மயில்கோலாக்கள் நீளமான அலகுகளை அசைத்தன. சிறு மீன்கள் குழம்பியதால் கூட்டம் கலையத் தொடங்கியது. மயில்கோலாக்கள் விடாமல் அலகுகளை அசைத்துக்கொண்டிருந்தன.

திடீரென்று மயில்கோலாக்களின் நிறம் மாறியது! ஒரு நொடிக்குள் வெளிர் நீலத்தில் மஞ்சள் கோடுகள் கொண்ட நிறம் அவற்றின் உடலில் தெரிந்தது! மீன்கூட்டத்தில் குழப்பம் அதிகரித்தது. மீன்கள் அங்கும் இங்கும் துள்ளிக் குதித்தன.

“அலகுகளை அசைக்கும்போது மீன்களுக்குக் காயம் படுது, கூட்டம் கலையுது, அதுங்க குழம்பிப்போகுது, கவனிச்சீங்களா?” என்றாள் ரோசி.

மீன்கள் கடல்நீருக்கு மேலே குதித்தபோது மயில்கோலாக்கள் அவற்றை விழுங்க ஆரம்பித்தன.

“எவ்வளவு வேகமா, திறமையா வேட்டையாடுது” என்று ஆச்சரியப்பட்டான் செந்தில்.

“இன்னும் வேட்டை தொடருது, கவனிங்க. அதோ அந்தப் பக்கம் இருக்கும் மயில்கோலா, எப்பவுமே அலகை வலது பக்கம்தான் அசைக்குது. இதோ இந்த மயில்கோலா இடதுபக்கம் மட்டுமே அசைக்குது பாருங்க” என்றார் அருணா.

“அட, ஆமாம்” என்று ரக்‌ஷா சொல்ல, மூவரும் எந்த மீன் எந்தப் பக்கம் அலகை அசைக்கிறது என்று விவாதித்தார்கள். “நமக்கு வலதுகைப் பழக்கம், இடதுகைப் பழக்கம் இருப்பதுபோல மயில்கோலாக்களுக்கும் பழக்கம் இருக்கு, அப்படித்தானே?” என்றாள் ரோசி.

“மிகவும் சரி” என்று அருணா தலையாட்டினார்.

“திடீர்னு கலர் மாறியது எதுக்கு?” என்று ரக்‌ஷா கேட்க, “தன்கூட வேட்டையாடும் பிற மயில்கோலாக்களுக்குத் தகவல் பரிமாறத்தான். சரியா?” என்று அருணாவை ஆர்வமாகப் பார்த்தான் செந்தில்.

“ஆமா. சரிதான். தகவல் பரிமாறுவதோடு இரைமீன்களைத் திடீர்னு குழப்பவும் நிறமாற்றம் உதவும்” என்றார் அருணா.

“நீந்தும்போது இந்த முதுகுத்துடுப்பை நீட்டுவதாலும் மடக்குவதாலும் மயில்கோலாக்களால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியும். இயக்கவியல் சார்ந்த நுணுக்கமான அம்சம் இதுன்னு விஞ்ஞானிகளே ஆச்சரியப்படறாங்க. வேகமா நீந்துவது மட்டுமல்ல, வேட்டையாடுவதற்காக அலகை முன்னோக்கி அசைப்பதிலும் அதிவேகம்தான். அலகின் நுனி ஒரு நொடிக்கு 130 மீட்டர் முன்னோக்கிப் பாயும்” என்றார் அருணா.

“எனக்கு இதைப் பார்க்கும்போது ஃபென்சிங் எனப்படும் வாள் வீச்சு விளையாட்டு நினைவுக்கு வருது. வேகமா முன்னோக்கி வாளின் நுனியை நீட்டுவதுதான் அங்கேயும் முக்கியமானதா இருக்கு” என்றாள் ரக்‌ஷா.

“கடலுக்குள்ள போட்டி வெச்சா இதுக்குத்தான் தங்கப் பதக்கம் கிடைக்கும்” என்று ரோசி சொல்ல, அருணா சிரித்துக்கொண்டார். சின்ன உறுமலுடன் நாட்டிலஸ் நீர்மூழ்கி அங்கிருந்து புறப்பட்டது.

(அதிசயங்களைக் காண்போம்!)

கட்டுரையாளர், கடல்சார் ஆராய்ச்சியாளர்.

தொடர்புக்கு: nans.mythila@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in