

நாகர்கோவில்ல கொஞ்ச நாளைக்கு முன்னாடி புத்தகக் கண்காட்சி நடந்துச்சு. அங்கப் போய் நிறைய புத்தகங்கள் வாங்குனேன். அதுல மழலைப்பிரியன் என்ற பெயர்ல எழுதியிருந்த ‘சிந்திக்கச் சில கதைகள்’ன்ற சிறுகதைத் தொகுப்பு எனக்கு ரொம்ப பிடிச்சுருந்துச்சு.
என்னை மாதிரிச் சிறுவர், சிறுமிகளுக்குப் புத்தக வாசிப்பைத் தூண்டுற விதத்துல இதுல 25 சிறுகதைகள சுவாரஸ்யமா கொடுத்திருக்காங்க. இந்தக் கதை புத்தகத்துல சின்ன வயசுலேர்ந்தே அன்பு செலுத்துறது, இரக்கம், பிறருக்கு உதவுறதுன்னு நல்ல குணங்களை வளர்க்குற கதைகள்தான் இருக்குது.
உதாரணமா, ‘தேவை உள்ளவர்களுக்காக’ன்னு ஒரு கதையைச் சொல்லலாம். கதையில, சிறுவனுக்குச் சைக்கிள் வாங்கக் காசு சேமிக்க அவனோட அப்பா உண்டியல் ஒன்னு வாங்கிக்கொடுக்குறாரு. புதுச் சைக்கிள் வாங்கணும்னு ஆசைஆசையா காசு சேமிச்சு வைப்பான் அந்தச் சிறுவன். ஒரு நாள் அவனோட மாற்றுத் திறனாளி பள்ளித் தோழன் தரையில் ஊர்ந்து போறதை அந்தச் சிறுவன் பார்க்குறான். அதைப் பார்த்துக் கலங்குறான். அவனுக்கு ஏதாச்சும் செய்யணும்னு யோசிக்கிறான். சைக்கிள் வாங்க சேர்த்து வைச்ச பணத்தைத் தன்னோட அப்பாகிட்ட கொடுத்து, மாற்றுத் திறனாளி நண்பனுக்கு மூணு சக்கரச் சைக்கிள் வாங்கிக் கொடுக்கிறான்.
இந்தக் கதையைப் படிச்சப்போ என்னோட மனசும் உருகுச்சு. இந்தக் கதையில ரெண்டு விஷயத்தைச் சொல்லியிருக்காங்க. ஒண்ணு, சேமிப்போட அவசியத்தை வலியுறுத்தியிருக்காங்க. அடுத்து, இயலாதவர்க்கு உதவணும்னு சொல்லியிருக்காங்க. இப்படி ஒவ்வொரு கதையிலையும் நல்ல செயல்களைப் பசங்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்காங்க.
உங்களுக்கும் இந்தக் கதைகளைப் படிக்க ஆசையா? அப்போ, ‘சிந்திக்கச் சில கதைகள்’ புத்தகம் வாங்கிப் பாருங்களேன்.
நூலை மதிப்புரை செய்தவர்: அ. சமீரா பாத்திமா,
9- ம் வகுப்பு, ஹோம் சர்ச் மகளிர் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவில்.