

பாடப்புத்தகங்கள் தாண்டிய வாசிப்பு குழந்தைகளின் உலகத்தை விசாலமாக்கும், அறிவை ஆழமாக்கும். அந்த வகையில் குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்தவும் மதிப்பீடுகளைக் கடத்தவும் தமிழ்நாடு அரசு சார்பில் ‘இளந்தளிர் இலக்கியத் திட்டம்’ சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 100 நூல்கள் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் சிறார் படைப்பாளிகளான உதயசங்கர், சாலை செல்வம், கொ.மா.கோ. இளங்கோ, வெற்றிச்செழியன், ஞா.கலையரசி, உமாமகேஸ்வரி, கிரீஷ், சரிதா ஜோ, பொற்கொடி உள்ளிட்ட எழுத்தாளர்களின் 23 சிறார் படைப்புகளைச் சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். தமிழ்நாடு பாடநூல் - கல்வியியல் பணிகள் கழகம் இந்த நூல்களைத் தயாரித்திருக்கிறது.
ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு தலைப்பைப் பற்றிச் சொல்கிறது. மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த நூல்கள் ஐந்து முதல் 14 வயது வரையுள்ள சிறார்களுக்கானவை. கதை, விடுகதை, பாடல், உரையாடல் போன்ற வடிவங்களில் வயதுக்கேற்ற கருத்துகளை இந்நூல்கள் விளக்குகின்றன.
மாணவர்களிடம் மிரட்சியை ஏற்படுத்தாத வகையில், குறைந்த பக்கங்களிலும் வண்ணத்தாளிலும் நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
சேமிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாலின பேதம் களைதல், இயற்கை வளம், நன்னெறி, சேமிப்பு போன்றவற்றைப் பற்றி நூல்கள் எடுத்துரைக்கின்றன. திருநர் சமூகம், மாதவிடாய் போன்றவை குறித்து மாணவர்கள் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவை தொடர்பான அறிமுகப் புத்தகங்களும் உண்டு.
இந்த வகையில் மேலும் 27 நூல்கள் இந்த மாதம் வெளியிடப்பட இருக்கின்றன. அதன் பிறகு அரசுப் பள்ளிகளுக்கு இந்தப் புத்தகத் தொகுப்பு அனுப்பப்படும்.
தவிர, மாநிலம் எங்கும் நடைபெறும் புத்தகக்காட்சிகளிலும் இந்த நூல்கள் கிடைக்கும். பாடநூல் தண்டிய வாசிப்பு குறித்து தொடர்ந்து பேசப்பட்டுவருகிறது. இந்தப் பின்னணியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நேரடியாகச் செல்லவுள்ள இந்த நூல்கள், புதிய வாசலைத் திறக்கும் என்று நம்பலாம்.
- ப்ரதிமா