

நம் நாட்டுக்கு இந்தியா என்ற பெயர் எப்படி வந்தது? அதற்குக் காரணம் சிந்து நதி. வட இந்தியாவில் பாயும் ஐந்து முக்கிய நதிகளில் ஒன்றுதான் சிந்து. அதேநேரம், இந்த நதிக்கரையில் பண்டைய நதிக்கரை நாகரிகங்களில் முக்கியமான சிந்து சமவெளி நாகரிகம் செழித்திருந்ததும், இந்தியா தன் பெயரைப் பெறுவதற்கும் ஒரு காரணம்.
பண்டைய உலக நாகரிகங்களில் இதுவே மிகப் பெரிய பரப்பளவைக் கொண்டது. பண்டைய எகிப்து, மெசபடோமிய நாகரிகங்கள் இணைந்த பகுதியைவிட, சிந்து சமவெளி நாகரிகம் பெரியது. இந்த நாகரிக மக்கள் தாமிரம், தகரத்தின் கலவையான வெண்கலம் என்ற கலப்பு உலோகத்தை உருவாக்கும் திறனைப் பெற்றிருந்தார்கள். அதனால் இந்த நாகரிகக் காலம் வெண்கலக் காலம் எனப்படுகிறது.
மேன்மை தந்த உழவு
இன்றைய பாகிஸ்தான் மற்றும் வட இந்தியாவில் சிந்து நதி பாய்ந்த பகுதிகள் பண்டைக் காலத்தில் வளமான விவசாய நிலத்தை உருவாக்கின. இங்கேதான் சிந்து சமவெளி மக்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் உழவில் சிறந்தவர்கள்.
இந்த நாகரிகத்தின் முக்கிய மையங்கள் ஹரப்பாவும் மொஹஞ்சதாரோவும். 1920-ல் நடத்தப்பட்ட அகழாய்வில் ஹரப்பா கண்டறியப்பட்டது. நாட்டுப் பிரிவினைக்குப் பிறகு ஹரப்பாவும் மொஹஞ்சதாரோவும் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டன.
அறிவில் சிறந்தவர்கள்
சிந்து சமவெளி நாகரிக மக்கள் அறிவுத் திறனில் மேம்பட்டவர்களாக இருந்ததுடன், ஒருங்கிணைந்தும் செயல்பட்டிருக்கிறார்கள். திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரங்களில் வாழ்ந்தார்கள். செங்கல் தயாரித்து வீடுகளைக் கட்டும் நுட்பத்தை அவர்கள் அறிந்திருந்தார்கள். இந்த வீடுகளுக்கு நீர் விநியோகிக்கப்பட்ட முறை, அந்தக் காலத்தின் மிகப் பெரிய அற்புதம். குடிக்கத் தண்ணீர் மட்டுமல்லாமல், கழிவு நீர் வெளியேற்றும் வசதிகளும் உருவாக்கப்பட்டிருந்தன.
அச்சுகளை உருவாக்குவது, அரிய சிவப்பு மணிக்கற்களைக் கொண்டு கலைப் பொருட்கள் செய்வது எனக் கலை, கைவினைகளிலும் அவர்கள் தேர்ந்தவர்களாக இருந்தனர்.
அழியாப் பெருமைகள்
இப்படியாகப் பல்வேறு பெருமைகளுடன் கி.மு. 2,500 முதல் கி.மு. 1,500 வரை ஆயிரம் ஆண்டுகளுக்குச் செழித்திருந்த சிந்து சமவெளி நாகரிகம் மர்மமான முறையில் அழிந்துபோனது. அழிந்ததற்கான திட்டவட்டமான காரணம் தெரியவில்லை.
மொஹஞ்சதாரோவில் கண்டறியப்பட்ட பெரிய பொதுக் குளியல் மையம், நடனமாடும் பெண்ணின் வெண்கலச் சிற்பம் போன்றவை 4000 ஆண்டுகளையும் தாண்டி இன்றுவரை அழியாமல் உள்ளது. சிந்து சமவெளி நாகரிகத்தின் மதிப்பை இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம்.
சிந்துவின் தனிச்சிறப்பு
# சிந்து சமவெளி நாகரிகம் நமது நாட்டின் ‘நாகரிகத் தொட்டில்’ எனப்படுகிறது.
# உலகில் திட்டமிட்டுக் கட்டப்பட்ட முதல் நகரங்களாகச் சிந்து சமவெளி நகரங்கள் திகழ்ந்தன. அகழாய்வில் இது தெரிய வந்திருக்கிறது.
# மரம், கற்கள், செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட வசதியான வீடுகளில், அந்த மக்கள் வாழ்ந்தார்கள்.
# ஹரப்பாவில் 25,000 பேரும் மொஹஞ்சதாரோவில் 40,000 பேரும் வாழ்ந்திருக்கலாம்.
# களிமண், கற்கள், தங்கம், வெள்ளி ஆகியவற்றைக்கொண்டு அழகான கலைப்பொருட்களைச் செய்யவும் அவர்கள் கற்றிருந்தார்கள்.
# சிந்து சமவெளி மக்கள் 400-க்கும் மேற்பட்ட எழுத்துகளைப் பயன்படுத்தி யிருக்கிறார்கள்.