கதை: நண்பர்கள் எப்படி இருப்பார்கள்?

கதை: நண்பர்கள் எப்படி இருப்பார்கள்?
Updated on
2 min read

முல்லைக் காட்டில் அனி, ஹனி என இரு குரங்குகள் வசித்துவந்தன. அனியும் ஹனியும் எல்லாரிடமும் அன்பாகப் பழகக்கூடியவை. ஆனால், ஹனி தன்னை ஏமாற்றுபவர்களைக்கூடக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அப்பாவியாக இருந்ததை நினைத்து அனிக்கு வருத்தமாக இருந்தது.

நரி அருகிலுள்ள திராட்சைத் தோட்டத்திற்கு ஹனியை அனுப்பி, திராட்சைகளைப் பறித்து வரச் சொல்லும். ஆனால், ஏதேனும் ஆபத்து வந்தால் ஹனியை மாட்டிவிட்டுவிட்டு, தான் தப்பிச் சென்றுவிடும்.

அதே மாதிரி கரடி உயரமான மரக்கிளையில் இருக்கும் தேன்கூட்டை எடுத்துவரச் சொல்லிவிட்டுத் தொலைவில் நின்றுகொள்ளும். தேனீக்கள் ஹனியைக் கொட்ட வரும்போது, கரடி தப்பி ஓடிவிடும்.

காட்டுப் பூனையோ ஹனியிடம், “புறா, குருவி போன்ற பறவைகளிடம் போய் ஏதேனும் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிரு” என்று அனுப்பி வைக்கும். ஹனி அந்தப் பறவைகளிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, காட்டுப்பூனை அருகில் பதுங்கியிருந்து அந்தப் பறவைகளைப் பிடித்துவிடும்.

இப்படி நரி, கரடி எல்லாம் தங்கள் தேவைகளுக்காகத்தான் தன்னை நண்பன் என்று ஏற்றுக்கொண்டிருக்கின்றன என்பது ஹனிக்குப் புரியவே இல்லை. அனி எப்போதாவது இது பற்றிச் சொன்னாலும் ஹனி நம்பாது.

தம்பி ஹனியின் துணையுடன் தோட்டம் ஒன்றை உருவாக்கியது அனி. தோட்டத்துச் செடிகள் செழித்து வளர்ந்தன. தக்காளி, கொய்யா, வெள்ளரி போன்ற காய்களும் கனிகளும் காய்த்துக் குலுங்கின.

‘ஹனிக்கு நல்ல நண்பர்கள் யார், சுயநலமான நண்பர்கள் யார் என்று அடையாளம் காட்ட இதுதான் நல்ல நேரம்’ என்று நினைத்தது அனி.

“ஹனி, இந்தக் காய்களையும் கனிகளையும் நாம் வெகுநாட்கள் பாதுகாத்து வைக்க முடியாது. அதனால், ஓரளவு நமக்காக எடுத்து வைத்துக்கொள்ளலாம். மீதியிருக்கும் மற்ற காய்களையும் கனிகளையும் நண்பர்களுக்கு விருந்து வைக்கலாம்” என்றது அனி.

அனி சொன்னதைக் கேட்ட ஹனிக்கும் அது நல்ல யோசனையாகவே தெரிந்தது. அது நரி, கரடி, காட்டுப் பூனை ஆகிய நண்பர்களை அழைத்து விருந்து கொடுக்கலாம் என்று நினைத்தது.

அனி ஹனியிடம், “தம்பி, நாம் நல்ல நண்பர்களை விருந்திற்கு அழைப்போம். அதற்கு முன் நான் சொன்னபடி நம் நண்பர்களிடம் நீ சென்று சொல்ல வேண்டும்” என்று காதில் ரகசியமாக ஏதோ சொன்னது.

“இவ்வளவுதானே அண்ணா! நீங்கள் சொன்னதுபோலவே நான் சொல்கிறேன்” என்றபடி வெளியே சென்றது ஹனி.

சிறிது தொலைவு சென்றதும், “ஐயோ, என் அண்ணனுக்கு ஆபத்து... நண்பர்களே, காப்பாற்ற ஓடிவாருங்களேன்” என்று கத்தியபடி அங்கும் இங்கும் ஓடியது ஹனி. கரடியும் நரியும் காட்டுப் பூனையும் வசிக்கும் இடத்திற்குச் சென்று உதவி கேட்டது.

ஹனி கத்தியதைக் கேட்ட நரி, கரடி, காட்டுப்பூனை ஆகிய மூன்றும் அதனதன் இருப்பிடத்தைவிட்டு வெளியே வரவில்லை. ஆனால், மரத்திலிருந்த காகமும் குருவியும், “இதோ நாங்கள் வருகிறோம்” என்றபடி பறந்துவந்தன.

மரப்பொந்திற்குள் இருந்த அணிலும் வெளியே ஓடிவந்தது. குழிக்குள் இளைப்பாறிக் கொண்டிருந்த முயலும் ஓடிவந்தது.

அனைத்தும் குரங்குகளின் தோட்டத்திற்குள் நுழைந்தன. அங்கே வாழை இலைகளில் பலவகை காய், கனிகளை வைத்துக்கொண்டு சிரித்தபடி நின்றிருந்தது அனி.

“என்ன ஹனி, உன் அண்ணனுக்கு ஆபத்து என்றாய். ஆனால், அது சிரித்துக்கொண்டு நிற்கிறதே” என்று காகம், குருவி, முயல், அணில் ஆகிய நான்கும் கேட்டன. ஹனிக்கும் ஒன்றும் புரியவில்லை.

“என்ன ஹனி, உன் உற்ற நண்பர்களான நரி, கரடி, காட்டுப் பூனை எல்லாம் வரவில்லையா?” என்று புன்னகையுடன் கேட்டது அனி.

“அண்ணா, உங்களுக்கு ஆபத்து என்று அழைத்தும் அவர்கள் வரவில்லை. ஆனால், இதோ காகமும் குருவியும் முயலும் அணிலும் உங்களைக் காப்பாற்ற வந்திருக்கின்றன” என்றது ஹனி.

“பார்த்தாயா ஹனி, நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது நம்மோடு இருப்பவர்கள் நம் உண்மையான நண்பர்கள் அல்லர். நமக்கு ஒரு ஆபத்து வரும்போது காப்பாற்ற ஓடிவருபவர்களே நம் உண்மையான நண்பர்கள். நாம் அத்தகைய நண்பர்களுக்குத்தான் விருந்து வைக்க வேண்டும். அவர்கள்தாம் நம் விருந்தினை உண்பதற்குத் தகுதியானவர்கள்” என்றது அனி.

அனி சொன்னதைக் கேட்ட ஹனிக்கு உண்மையான நண்பர்கள் யார் என்பது புரிந்தது.

“ஆமாம் அண்ணா, இப்போது உண்மையான நண்பர்களை அடையாளம் கண்டுகொண்டேன். இனி இவர்களை நான் நண்பர்களாக ஏற்றுக்கொள்வேன். இப்போதே இவர்களுக்கு விருந்து அளிப்போம்” என்று சொன்ன ஹனியை ஆச்சரியமாகப் பார்த்தது அனி.

“விருந்து தயாராகத்தான் இருக்கிறது. வாருங்கள், நாம் எல்லாரும் சேர்ந்து உண்போம்” என்று அனி சொல்ல, அங்கே அழகான விருந்து நடந்து முடிந்தது!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in