

வேகமாக வந்த நாட்டிலஸ் நீர்மூழ்கி, அலாஸ்காவின் கடற்பகுதியில் நின்றது. வானத்தில் பறந்தபடி படங்களையும் காணொளிகளையும் எடுக்கிற ட்ரோன் கேமராவின் இணைப்பு கிடைத்திருப்பதாக நீர்மூழ்கியின் திரையில் ஒரு செய்தி வந்தது
. “என் நண்பரோட கேமராதான். இந்த நிகழ்வைத் தெளிவா புரிஞ்சுக்க காட்சிகள் உதவும்” என்றார் அருணா.
நீர்மூழ்கிக்கு எதிரில் சிறிய வெங்கணா (Herring) வகை மீன்கள் கூட்டமாக நீந்திக்கொண்டிருந்தன. தொலைவில் ஒரு திமிங்கிலக் கூட்டம் வந்தது.
“ட்ரோன் கேமரா ஏன் வந்ததுன்னு இப்போ புரிஞ்சது. பெரிய விலங்குகளான திமிங்கிலங்களின் அழகையும் பிரம்மாண்டத்தையும் மேலிருந்து பார்த்தா மட்டும்தான் ரசிக்க முடியும்” என்றாள் ரோசி.
“வேறொரு காரணமும் இருக்கு. கவனிங்க” என்று அருணா கைகாட்டினார்.
மீன் கூட்டத்துக்குக் கீழே வந்த திமிங்கிலங்கள் வேகத்தைக் குறைத்துக் கொண்டன. ஒரு திமிங்கிலம் மெல்ல மூச்சை வெளியில்விட, பெரிய ஒரு நீர்க்குமிழி மேலே எழும்பியது. அடுத்தடுத்து எல்லாத் திமிங்கிலங்களும் பெரிதாக மூச்சுவிட்டன.
“இப்போ நீருக்கடியில் இருக்கும் ஒலிகளையும் சேகரிக்கும் ஹைட்ரோ போனை இயக்கப் போறேன். கடலில் உள்ள சத்தமும் உங்களுக்குக் கேட்கும்” என்றபடி ஒரு பட்டனைத் தட்டினார் அருணா. புஸ்புஸ்ஸென்று பெரிய மூச்சுவிடும் சத்தமும் திமிங்கிலங்களின் மெல்லிய உறுமலும் கேட்டன. மூச்சு விட்டபடியே திமிங்கிலங்கள் வட்ட வடிவில் சுற்றிச் சுற்றி நீந்திக்கொண்டிருந்தன. மீன் கூட்டங்கள் வெளியில் போக முடியாமல் அந்த வட்டத்துக்குள் சிறைபட்டதுபோல் இருந்தன.
“அங்க பாருங்க”என்று ட்ரோன் காணொளியைக் காட்டினான் செந்தில்.
தண்ணீரில் பெரிய நீர்க்குமிழிகள் உருவாகியிருந்தன. திமிங்கிலங்களின் ஒவ்வொரு மூச்சுக்கும் ஒரு வட்டம் உருவாகும் காட்சி ட்ரோன் காணொளியில் தெரிந்தது. சுருள் வடிவில் ஒரு குமிழி வட்டம் உருவாகியிருந்தது.
திமிங்கிலங்கள் வட்டமிடுவதை நிறுத்தவில்லை, சத்தமும் கேட்டுக்கொண்டேயிருந்தது. வெங்கணா மீன்கள் மெல்ல கடல்பரப்பை நோக்கி நீந்தத் தொடங்கின.
திடீரென்று அமைதி. நீர்க்குமிழிகள் வருவது நின்றது. நீர்மூழ்கிக்குள் இருப்பவர்களும் ஓசையின்றி எல்லாவற்றையும் கவனித்தார்கள். அடுத்த நொடி ரயிலின் சத்தம் போல ‘கூ’ என்று கேட்டது. “யப்பா” என்று காதை மூடிக்கொண்டாள் ரக்ஷா.
ஒரு திமிங்கிலம் வாயைப் பிளந்தபடி வேகமாக மேல்நோக்கி நீந்தியது. மற்ற திமிங்கிலங்களும் உடனே வாயைத் திறந்துகொண்டு மேல்நோக்கி நீந்தின. மீன்கள் எம்பி எம்பி தப்பிக்க முயற்சி செய்தன. ட்ரோன் காணொளியில் வாயைத் திறந்தபடி திமிங்கிலங்கள் வருவதும் திமிங்கிலங்களின் வாய்க்குள் மீன்கள் கூட்டம் கூட்டமாக விழுவதும் தெரிந்தது.
மெல்ல நீர்க்குமிழி வட்டங்கள் மறையத் தொடங்கின. எங்கிருந்தோ வந்த கடற்பறவைகளும் எம்பி வரும் மீன்களை வேட்டையாடத் தொடங்கியதில் பறவைகளின் ஒலி, ‘சளப் சளப்’ என்று மீன்கள் துள்ளும் சத்தம், திமிங்கிலங்களின் உறுமல் என்று அந்த இடத்தில் ஒரே இரைச்சலாக இருந்தது.
“திமிங்கிலங்களுக்கு நல்ல வேட்டைதான்” என்றாள் ரோசி.
“இந்தத் திமிங்கிலங்களைக் கூன்முதுகுத் திமிங்கிலங்கள்னு (Humpback whales) சொல்வோம். இவை, இரையை அப்படியே விழுங்கும் இயல்புகொண்டவை. இந்த உணவுமுறை Bubble net feeding. அதாவது நீர்க்குமிழியால் வலைகள் அமைத்து மீன்பிடித்துச் சாப்பிடும் பண்பு. இந்தக் குமிழ்கள் உருவாகும்போது பெரிய சத்தம் வந்ததுதானே? அந்தச் சத்தத்துக்குப் பயந்து மீன்கள் ஒரே இடத்தில் நெருக்கமாக நீந்தும். அப்போ திமிங்கிலங்கள் எளிதா மீன்களை விழுங்கிடும்” என்று நிறுத்தினார் அருணா.
“இது ரொம்பப் பயனுள்ள வேட்டை முறையா இருக்கே! எல்லாக் கூன்முதுகுத் திமிங்கிலங்களும் இப்படித்தான் சாப்பிடுமா?” என்றான் செந்தில்.
“இல்லை. இது இயல்பிலேயே உள்ள குணம் கிடையாது, கற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வழக்கம்தான். எல்லாக் கூன்முதுகுத் திமிங்கிலங்களும் இப்படிச் செய்வதில்லை. சில திமிங்கிலக் குடும்பங்களில் மட்டும்தான் இது இருக்கு” என்றார் அருணா.
“கூட்டு வேட்டை முறைக்குப் பெரிய அளவில் அறிவு வேணும்னு சொல்லியிருக்கீங்க. அதுவும் மரபணுவில் இல்லாம, ஒரு வாழ்நாளுக்குள் இதைக் கத்துகிட்டுச் செய்யணும்னா பெரிய விஷயம்தான்” என்றாள் ரக்ஷா.
“உண்மைதான். இது பற்றிப் பல ஆராய்ச்சிகள் நடந்திட்டு இருக்கு” என்று அருணா சொல்லும்போதே, “இந்தப் பழக்கம் எப்படி வந்திருக்கும்?” என்றான் செந்தில்.
“குறைந்த நேரத்தில் விரைவா நிறைய மீன்களை விழுங்க இது உதவுது. ஆகவே சூழல் மாறுபாடுகளால் உணவு கிடைக்காமல் இருக்கும்போது இந்தப் பழக்கம் வந்திருக்கலாம்னு ஒரு கருத்து இருக்கு. பொதுவா திமிங்கிலங்கள் எல்லா மாதங்களிலும் வேட்டையாடுவதில்லை. வலசை - இனப்பெருக்கம்னு வெவ்வேறு செயல்பாடுகளில் இருக்கும். ஆகவே, வேட்டையாடும் கொஞ்ச காலத்தில் அதிக இரையைப் பிடிப்பதற்காகக்கூட இது உருவாகியிருக்கலாம்” என்று சொல்லி முடித்தார் அருணா.
“இன்னும் இது பத்தி சரியா தெரியலைன்னு யாரும் கவலைப்பட வேண்டாம். நான் வளர்ந்து பெரிய விஞ்ஞானியாகி இதைப் பத்தி கண்டுபிடிச்சு சொல்றேன்” என்றான் செந்தில்.
“இந்த ஹைட்ரோபோனை வெச்சு யார் யார் என்னென்ன கடல் சத்தத்தைக் கேட்க ஆசைப்படுறீங்க?” என்று ரோசி கேட்க, மற்ற இருவரும் யோசிக்க ஆரம்பித்தார்கள்.
வயிறு நிறைந்த திருப்தியில் திமிங்கிலங்கள் கடற்பரப்பிலிருந்து கீழே வந்து சோம்பேறித்தனமாக நீந்தின. அந்த இடத்தைவிட்டு மெல்லப் புறப்பட்டது நாட்டிலஸ் நீர்மூழ்கி.
(அதிசயங்களைக் காண்போம்!)
கட்டுரையாளர், கடல்சார் ஆராய்ச்சியாளர்.
தொடர்புக்கு: nans.mythila@gmail.com