யோகாவில் ஒரு தங்கச் சிறுமி!

யோகாவில் ஒரு தங்கச் சிறுமி!
Updated on
1 min read

சின்ன வயதிலேயே யோகா செய்யும் குட்டீஸ் நிறைய பேர் இருப்பீங்க! ஆனா, கோவையைச் சேர்ந்த பி.எம். அபிதாஸ்ரீயை எல்லோரும் யோகா சாம்பியன்னு கூப்பிடுறாங்க! அது ஏன் தெரியுமா?

சமீபத்தில் பாங்காக்கில் காமன்வெல்த் யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடந்துச்சு. இதில்11 முதல் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில், அபிதாஸ்ரீ கலந்துக்கிட்டாங்க. இந்தப் போட்டியில் 2 நிமிடங்கள்ல 27 யோகாசனம் செய்து சாம்பியன் ஆஃப் சாம்பியன்ஸ் பட்டம் ஜெயிச்சி வந்திருக்காங்க அபிதாஸ்ரீ. அத்தோடு நின்றுவிடவில்லை. சிறப்பு ஆசனங்கள் பிரிவில் தித்திப்பாசனா, கண்ட பேருண்டாசனா, கோகுல கிருஷ்ணாசனா, அஷ்டவக்ராசனா என 5 ஆசனங்கள் செய்து முதல் பரிசையும் தட்டிட்டு வந்திருக்காங்க அபிதாஸ்ரீ.

இவர் கோவை சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக். பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார். இந்த சாதனையை அவரால் எப்படி செய்ய முடிந்தது?

“பள்ளிக்கூடத்துல யோகா ஆசிரியர் காயத்ரிதான் எனக்கு யோகா கத்துக்கொடுத்தாங்க. அதை தினமும் காலையில் 4 மணி முதல் 6 மணி வரை வீட்டில் செய்வேன். இப்படி யோகாவை நிறைய கத்துக்கிட்டு மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் கலந்துக்கிட்டேன். நிறைய பரிசும் வாங்கியிருக்கிறேன்.

திருப்பூரில் தென்மண்டல அளவுல நடந்த போட்டியில ஜெயிச்சு, காமன்வெல்த் போட்டியில் கலந்துக்கிட்டேன். சீனா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து என பல நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் வந்திருந்தாங்க. இந்தப் போட்டியில் ஜெயிச்சு தங்கப் பதக்கம் வாங்கினேன்” என்கிறார் அபிதாஸ்ரீ.

யோகாவில் சாம்பியனாக வலம் வந்துகொண்டிருக்கிற அபிதாஸ்ரீக்கு, ஈட்டி எறிதல் போட்டி என்றால் கொள்ளைப் பிரியமாம். இரண்டிலும் ஜொலிக்க நாமும் வாழ்த்து சொல்வோமா!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in