நம்ப முடிகிறதா? - இயற்கையின் வர்ண ஜாலங்கள்!

நம்ப முடிகிறதா? - இயற்கையின் வர்ண ஜாலங்கள்!
Updated on
2 min read

உலகில் இயற்கை அதிசயங்கள் ஏராளம் உள்ளன. மலை, பள்ளத்தாக்கு, கடல் என இந்த இயற்கை அதிசயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. மனிதர்களின் வாயைப் பிளக்க வைக்கும் சில இயற்கை அதிசயங்களைப் பார்ப்போமா?

பிலிப்பைன்சில் ‘சாக்லெட்’ என்ற பெயரில் மலைகள் உள்ளன. இங்கே சாக்லெட்களெல்லாம் கிடையாது. மலைகளை உயரமான இடத்திலிருந்து பார்க்கும்போது சாக்லெட் போலத் தெரியும் என்பதால் இந்தப் பெயர் மலைகளுக்கு வந்தது. அருகருகே அமைந்துள்ள இந்த மலைகள் ஒவ்வொன்றும் கூம்பு வடிவில் இருக்கின்றன. இங்கே இப்படி 1,268 மலைகள் கூம்பு வடிவில் உள்ளன.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள மூர்த்தானியா எனும் சிறிய நாடு வரை சஹாரா பாலைவனம் பரவியுள்ளது. இந்தப் பாலைவனத்தில் சுமார் 25 மைல் அகலத்தில் பெரிய பள்ளம் ஒன்று உள்ளது. இந்தப் பள்ளத்தை விமானத்திலிருந்து பார்க்கும்போது பிரம்மாண்டக் கண் போலத் தெரிகிறது. அதனால் இந்தப் பள்ளத்தை ‘சஹாரா கண்’ என்றே அழைக்கிறார்கள்.

கொலம்பியாவில் உள்ள ஓர் ஏரியின் பெயர் ‘புள்ளி ஏரி’. அதாவது ‘ஸ்பாட்டட் லேக்’. இந்த ஏரியில் கோடைக்காலத்தில் பெரும்பாலான தண்ணீர் ஆவியாகி விடும். இதனால் ஏரியில் உள்ள உப்பு, கால்சியம் போன்ற தாதுக்கள் மட்டும் உள்ளேயே தங்கி விடும். இதன் காரணமாக, ஏரிக்குத் தண்ணீர் வந்தவுடன் அந்தத் தாதுக்கள் எல்லாம் ‘பெரும் புள்ளி’களாகத் தெரியும். அதனால், இந்த ஏரிக்கு ‘ஸ்பாட்டட் ஏரி’ என்று பெயர்.

பெரிய குகைகளைப் பார்த்தாலே எல்லோருக்கும் பயம் வந்துவிடும். ஆனால்., சிலியில் உள்ள ஒரு குகையைப் பார்த்தால், அங்கேயே இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும். இந்தக் குகை அவ்வளவு அழகாக இருக்கிறது. குகை முழுவதுமே மார்பிள் கல்லால் ஆனது. இந்தக் குகையின் அடிப்பாகத்தில் ஓடும் பச்சை மற்றும் நீல வண்ண ஏரியின் மேல் உள்ள மார்பிள் கல்லில் பிரதிபலிப்பால் குகையே விநோதமாகக் காட்சியளிக்கிறது. இதுதான் இந்தக் குகையின் அழகுக்குக் காரணம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in