

நான் ஓர் அமெரிக்கன். இதை நீ எப்படிச் சொல்வாய் என்று அமெரிக்காவிடம் கேட்டால், ‘நீ ஒரு கறுப்பு அமெரிக்கன்’ என்று அது திருப்பிச் சொல்லும். நீ யார் என்று என்னைக் கேட்டால், நான் ஓர் எழுத்தாளன் என்பேன். இவன் யார் என்று என்னைச் சுட்டிக்காட்டி அமெரிக்காவிடம் கேட்டால், ‘அவன் ஒரு கறுப்பு எழுத்தாளன்’ என்றுதான் சொல்லும்.
ஜேம்ஸ் பால்ட்வின் ஒரு நேர்மையான மனிதன் என்று என் நாடு சொல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என் நாடு இப்படிச் சொல்லும், ‘அதோ அங்கே நிற்கும் பால்ட்வின் கறுப்பினத்தவன் என்றாலும் நேர்மையான மனிதன்.’
என்னைக் காண யார் வந்தாலும் அவர்கள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய், ‘இதோ இது என் நகரம். நான் இங்கேதான் பிறந்தேன்’ என்று நியூயார்க்கைக் காட்டி என்னால் பெருமிதம் கொள்ள முடியும். நியூயார்க் என்பது ஒரு நகரம் அல்லவா? அதற்கு நம்மைப் போல் உணர்வுகள் எல்லாம் கிடையாது அல்லவா? எனவே, பால்ட்வினை உனக்குத் தெரியுமா என்று அதனிடம் போய் கேட்டால், ‘ஆம், நீங்கள் குறிப்பிடும் அந்தக் கறுப்புக் குழந்தை இங்கேதான் பிறந்தது’ என்று ஓர் அதிகாரிபோல் அது சொல்லும்.
என் வீதியில் இருக்கும் தேநீர்க் கடையை எனக்கு மிகவும் பிடிக்கும். எங்கே நல்ல தேநீர் கிடைக்கும் என்று கேட்டால், அதோ அங்கே என்று உற்சாகமாக என்னால் கைகாட்ட முடியும். பால்ட்வின்தான் உங்களை எனக்குப் பரிந்துரை செய்தார். அவரை உனக்குத் தெரியுமா என்று அந்தக் கடையிடம் சென்று கேட்டுப் பாருங்கள். அது சொல்லும், ‘யார், அந்தக் குள்ளமான கறுப்பு மனிதனா? ஆம், அவன் அடிக்கடி இங்கே வருவான்.’
ஒவ்வொரு முறை புத்தகக் கடைக்குப் போகும்போதும் என் உடல் சிலிர்க்கும். இருட்டும் வரை தேடுவேன். விடிந்தால் உலகம் அழிந்து விடுமோ என்பதுபோல் அவ்வளவு புத்தகங்களை வாங்குவேன். தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு, நண்பனிடமிருந்து விடைபெறுவதுபோல் ஏக்கத்தோடு திரும்பித்திரும்பிப் பார்த்தபடியே வெளியேறுவேன். என் நண்பனை எந்த அளவுக்கு நேசிக்கிறேனோ அந்த அளவுக்கு அந்தக் கடையையும் நான் நேசிக்கிறேன்.
உனக்கு பால்ட்வினைத் தெரியுமா என்று அந்தப் புத்தகக் கடையிடம் கேட்டால், எவ்வளவோ பேர் வருகிறார்கள் நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள் என்று கடை குழப்பமடையும். என் அடையாளங்களைச் சொல்லிக் கேட்டுப் பாருங்கள். சட்டென்று திருப்பிக் கேட்கும், ‘ஓ, கதை எழுதும் கறுப்பு மனிதனா? ஆம், அறிவேன்.’
இங்கேயே வாழ்ந்து, வாழ்ந்து இதெல்லாம் எனக்குப் பழகிப்போய் விட்டது. ஆரம்பத்தில் எனக்கு நிறைய கோபம் வரும். அமெரிக்காவில் பிறந்தவர்கள், அமெரிக்காவில் வளர்ந்தவர்கள் எல்லாரும் அமெரிக்கர்கள்தாமே? நான் இத்தேசத்தின் குடிமகன்தானே? இது மிகவும் அடிப்படையான ஓர் உண்மையல்லவா? இருந்தும், என்னைக் கறுப்பு அமெரிக்கன் என்று ஏன் அழைக்க வேண்டும் என் நாடு? என் நியூயார்க் என்று நான் சொல்வதுபோல், என் பால்ட்வின் என்று ஏன் சொல்லத் தயங்குகிறது என் நகரம்?
என் உடலின் நிறம்தான் நானா? எனக்கென்று ஒரு பெயர் இருந்தும், எனக்கென்று ஒரு நாடு இருந்தும், எனக்கென்று ஆற்றல் இருந்தும், எனக்கென்று பல நூறு கனவுகள் இருந்தும் என் தோலின் நிறம்தான், அது மட்டும்தான் உங்கள் கண்களுக்குத் தெரிகிறதா? நான் நடந்தால், அமர்ந்தால், பேசினால் ஒரு கறுப்பு மனிதன் நடப்பதாக, ஒரு கறுப்பு மனிதன் அமர்வதாக, ஒரு கறுப்பு மனிதன் பேசுவதாக நீங்கள் உணர்கிறீர்களா? அப்படி மட்டும்தான் உணர முடிகிறதா உங்களால்?
நான் எழுதிய ஒரு புத்தகத்தை எடுத்துப் பிரிக்கும்போது என்ன நினைத்துக்கொள்வீர்கள்? ஜேம்ஸ் பால்ட்வின் எழுதிய புத்தகத்தைப் பிரிக்கிறோம் என்றா, ஒரு கறுப்பு மனிதனின் புத்தகத்தைப் பிரிக்கிறோம் என்றா? படிக்கும்போது எப்படி உணர்வீர்கள்? ஒரு கதை படிக் கிறோம் என்றா, கறுப்புக் கதை படிக்கிறோம் என்றா?
என்னால் ஒரு வீதியை ஒரு வீதியாக, ஒரு மனிதனை மனிதனாக, ஒரு புத்தகத்தைப் புத்தகமாகக் காண முடியும்போது நீங்கள் மட்டும் ஏன் கறுப்பு வீதியையும் கறுப்பு மனிதனையும் கறுப்புப் புத்தகத்தையும் பிரித்துக் காண வேண்டும்? கருமை என் உடலிலிருந்து புறப்பட்டு வந்து உங்கள் கண்களை அடைத்துவிட்டதா?
கோபப்படுவதாலோ வருந்து வதாலோ அழுவதாலோ எதுவும் மாறப்போவதில்லை என்பதை ஒரு கட்டத்தில் உணர்ந்துகொண்டேன். அமெரிக்கா என்னை எப்படிப் பார்க்க விரும்புகிறதோ அப்படியே பார்த்துக் கொள்ளட்டும். உலகம் என்னை எப்படி அழைக்க விரும்புகிறதோ அப்படியே அழைத்துக்கொள்ளட்டும். அமெரிக்காவுக்காக, உலகுக்காக நான் என்னை மாற்றிக்கொள்ளப் போவதில்லை.
என் அமெரிக்கா, என் உலகம் என்றே நான் அழைப்பேன். அப்படியே உரிமை கொண்டாடுவேன். வாழ்வின் எல்லா வண்ணங்களும் வேண்டும் எனக்கு. எல்லா மனிதர்களும் தேவை எனக்கு. அப்போதுதான் என்னால் வாழ முடியும். அப்போதுதான் என்னால் எழுத முடியும். அப்போதுதான் என்னால் ஒரு மனிதனாக இருக்க முடியும்.
(ஜேம்ஸ் பால்ட்வின் அமெரிக்காவின் முக்கியமான எழுத்தாளர், கவிஞர்.)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com