

உறவினர் அமெரிக்காவில் இருந்து வாங்கி வந்த ஒரு மின்சாதனத்தை இங்கு பயன்படுத்த முடியவில்லை. அதற்குக் காரணம், அங்கு மின்சாரம் 110 வோல்ட் என்றும் இங்கு 230 வோல்ட் என்றும் பேசிக்கொண்டார்கள். ஏன் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியான மின்சாரம் இல்லை, டிங்கு?
- ஜெப் ஈவான், 6-ம் வகுப்பு, புனித பாட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோட்டூர்புரம், சென்னை.
உலகில் பல்வேறு நாடுகளும் பல்வேறு தரத்தில் மின்சாரம் வழங்கும் விதத்தைக் கடைபிடிக்கின்றன. அமெரிக்கா 110 வோல்ட் மின்சாரத்தை வீடுகளுக்கு வழங்குகிறது.
இங்கிலாந்து 230 வோல்ட் மின்சாரத்தை வழங்குகிறது. ஆங்கிலேயர்களால் ஆளப்பட்ட இந்தியாவும் அதே அளவு வோல்ட் மின்சாரத்தை வழங்கிவருகிறது. நேர் மின்னோட்டம் (Direct current – DC), மாறுதிசை மின்னோட்டம் (Alternating current - AC) என இரண்டு தரங்களில் மின்சாரம் வழங்கப்படுகிறது. இவற்றில் நேரடி மின்னோட்டம் தாமஸ் ஆல்வா எடிசனால் உருவாக்கப்பட்டு, மின் விளக்குகளில் பயன்படுத்தப்பட்டது.
மாறுதிசை மின்னோட்டம் நிகோலா டெஸ்லாவால் உருவாக்கப்பட்டது. நேரடி மின்னோட்டம் சிக்கனமானது. ஆனால், நீண்ட தூரத்துக்கு அதைக் கொண்டு செல்ல இயலாது. மாறுதிசை மின்னோட்டத்தை நீண்ட தூரத்துக்கு கொண்டு செல்ல முடியும். நேரடி மின்னோட்டதைவிட மாறுதிசை மின்னோட்டமே சிறந்தது.
ஆனால், எடிசனைக் கவுரவிக்கவும் அன்றைய அமெரிக்க வீடுகளில் பெரும்பாலான சாதனங்கள் நேரடி மின்சாரத்துக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டிருந்ததாலும் அந்த நாடு வீடுகளில் பயன்படுத்துவதற்கு 110 வோல்ட் கொண்ட நேரடி மின்னோட்டத்தை வழங்கியது.
மற்ற இடங்களில் அமெரிக்காவும் 230 வோல்ட் மின்சாரத்தைத்தான் பயன்படுத்திவருகிறது. அமெரிக்காவிலிருந்து கொண்டுவரும் மின்சாதனங்களை இந்தியாவில் பயன்படுத்துவதற்கு, அடாப்டர்கள் (Adaptor) மூலம் மின்னோட்டம் வழங்க முடியும், ஜெப் ஈவான்.