ஆழ்கடல் அதிசயங்கள் 19: கடலின் மேய்ச்சல் விலங்குகள்

ஆழ்கடல் அதிசயங்கள் 19: கடலின் மேய்ச்சல் விலங்குகள்
Updated on
3 min read

தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடாவில் புல்வெளி போலத் தெரிந்த ஓர் இடத்துக்கு வந்த நாட்டிலஸ் நீர்மூழ்கி, தொலைவிலேயே நின்றுவிட்டது. ரோபாட் கேமராக்கள் மூலம் திரையில் தெரிந்த காட்சிகளை அனைவரும் ஆர்வமாகப் பார்த்தனர்.

“இதுதான் கடற்புல் படுகை (Seagrass bed). இந்தத் தாவரங்களை, ‘கடற்கோரைகள்’னும் சொல்வாங்க. நிலத்தில் இருந்த தாவரங்களிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்து உருவான கடற் தாவரங்கள் இவை. பூக்கும் தாவரங்களின் வகையைச் சேர்ந்த இந்தக் கடற்புற்கள் கூட்டமா வளரும்போது, அந்தக் கடற்புல் படுகை ஒரு வாழிடமா மாறுது” என்று சொல்லி நிறுத்தினார் அருணா.

“புல்லைப் பார்க்குறதுக்குதான் ரோபாட்டெல்லாம் அனுப்பியிருக்கோமா, பக்கத்தில் போய்ப் பார்த்தா என்னவாம்?” என்று கேட்டாள் ரோசி.

“இந்த வாழிடம் கடலின் நுரையீரல்கள் என்று அழைக்கப்படும் அளவுக்கு ஆக்சிஜன் சுழற்சியில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனா, நாம பார்க்கப்போவது வாழிடத்தை அல்ல, வேற ஒரு உயிரினம்” என்று அருணா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ஒரு
பேராமை வந்து கடற்புற்களைச் சாப்பிட்டது.

“அட, ஆமை புல் சாப்பிடுது” என்று ஆசையாகப் பார்த்தான் செந்தில். “இதுதான் அந்த உயிரினமா?” என்று ரக்‌ஷா கேட்க, இல்லை என்று தலையாட்டினார் அருணா. அடுத்த சில நொடிகளில் தொலைவில் ஏதோ ஒன்று தெரிந்தது. புல் படுகைக்குப் பக்கத்தில் அது வந்ததும் ஓரளவு உருவம் தெளிவானது.

அந்த விலங்கு வேகமாகக் குனிந்து புற்களை மேயத் தொடங்கியது! வாய்க்குள் புற்கள் போவது தெரியாவிட்டாலும் அந்த விலங்கு சென்ற பிறகு புற்கள் இருந்த தடம் மட்டுமே இருந்தது.

“மாடு அவசர அவசரமா புல்லை மேயற மாதிரி இருக்கு” என்றான் செந்தில். “இதன் பெயர் ஆவுளியா (Dugong). சைரனியா (Sirenia) குடும்பத்தைச் சேர்ந்த கடல் பாலூட்டி இது” என்றார் அருணா. “ரொம்பப் பெருசா இருக்கு!” என்றாள் ரக்‌ஷா.

“இது ஆபத்தான விலங்கு அல்ல, சாதுவானது. ஆனா, மனிதர்கள் அருகில் வந்தா விலகிப் போயிடும். அதனால்தான் தொலைவிலிருந்தே பார்க்கறோம். பத்து அடி நீளம், 300 கிலோ எடை வரை இதுங்க வளரும். இதோ இந்த முடிகளைப் பாருங்க” என்று திரையில் அந்த விலங்கின் முதுகுப்பகுதியைக் காட்டினார் அருணா.

“உடல் முழுக்க சின்ன சின்ன முடிகள் இருக்கு... வாய்க்குப் பக்கத்திலும் இருக்கே” என்றான் செந்தில்.
“ஆவுளியா இந்த முடிகள் மூலமாகத்தான் பெரும்பாலும் சுற்றியிருக்கும் சூழலை உணர்ந்துகொள்ளும். இந்த முடிகளில் உணர் நரம்புகள் இருக்கு. ஆவுளியா கடற்புற்களை வேரோடு அப்படியே சாப்பிடும். பெரும்பாலும் ஆழமில்லாத கடலோரப் பகுதிகள்லதான் இருக்கும்” என்று விளக்கினார் அருணா.

“இவ்வளவு பெரிய உடலுக்கு எவ்வளவு கடல்புல் தேவைப்படும்! யானையைக் கட்டித் தீனி போடுற மாதிரிதான்” என்றாள் ரக்‌ஷா.
சிரித்துக்கொண்ட அருணா, “ஒண்ணு தெரியுமா? மரபணு ரீதியா இந்த ஆவுளியா, யானையின் நெருங்கிய உறவு. இவை நிறைய சாப்பிடும் என்பதும் உண்மைதான். ஒரு நாளைக்குச் சராசரியா 40 முதல் 50 கிலோ கடற்புற்களைச் சாப்பிடும்” என்றார்.

“ஐயோ, அப்போ கடற்புற்கள் அழிஞ்சு போயிடாதா?” என்றாள் ரோசி.

“இல்ல, ஆவுளியாக்களைச் சூழல் பொறியாளர்கள்னு சொல்வோம். ஆவுளியாக்களின் மேய்ச்சல் நிலங்களா இருக்கும் புல் படுகைகளில் தாவரங்கள் வேகமா மறுபடியும் வளரும்னு கண்டுபிடிச்சிருக்காங்க. சொல்லப்போனா ஒரு கடற்புல் படுகை நல்லா ஆரோக்கியமா இருக்கணும்னா அங்க ஆவுளியாக்கள் இருக்கணும்” என்றார் அருணா.

“இது எவ்வளவு நன்மைகள் செய்யுது!” என்று ஆச்சரியப்பட்டான் செந்தில்.
“சூழலுக்கு ஒவ்வாத சில மீன்பிடி முறைகள், கடல்சூழல் மாசு, சட்டவிரோத வேட்டை, காலநிலை மாற்றம் போன்ற பல பிரச்சினைகளால் ஆவுளியாக்கள் பாதிக்கப்படுது.

இவற்றின் இனப்பெருக்க விகிதம் குறைவு என்பதால் எண்ணிக்கை குறைஞ்சா உடனே மீண்டு வருவதும் கஷ்டம். இந்த விலங்கு அழியக்கூடிய ஆபத்தில் இருக்கு. இப்போ பாக் ஜலசந்தியின் ஒரு பகுதி, இந்த ஆவுளியாக்களுக்கான பாதுகாப்புப் பகுதியா அறிவிக்கப்பட்டிருக்கு” என்றார் அருணா.

“கடற்புல் படுகைகளைப் பாதுகாக்கும் இந்த விலங்குகளை நாம பாதுகாக்கப் போறோம். சூப்பர்” என்றாள் ரோசி.
“ஆமா, எனக்கு ஒரு முக்கியமான சந்தேகம், நிலத்தில் இருக்கும் பசுக்கள் மாதிரியே ஆவுளியாக்களும் அசைபோடுமா?” என்றான் செந்தில்.

“இல்ல, இந்த ஆவுளியா குடும்பத்தைச் சேர்ந்த பாலூட்டிகளை ‘அசை போடாத தாவர உண்ணிகள்’னு (Non ruminant herbivore) சொல்வோம். இவற்றின் உடலில் உணவுப் பாதையின் கீழ்ப்பகுதியில்தான் பெரும்பாலான கடற்புற்கள் செரிக்கப்படுது. இதில் என்னென்ன செயல்முறைகள் நடக்குதுனு விஞ்ஞானிகள் இன்னும் ஆராய்ச்சி செய்றாங்க. ஆவுளியாக்களை முழுமையான தாவர உண்ணிகளாக இருக்கும் ஒரே கடல் பாலூட்டின்னு சொல்வாங்க. தாவர செல்களை இவற்றின் உடல் முழுமையா செரிக்குமா, அதிலிருந்து ஆற்றல் உறிஞ்சப்படுவது எப்படி என்பதெல்லாம் அடுத்த கட்ட ஆராய்ச்சிகள்லதான் தெரியும்” என்றார் அருணா.
ரோபாட் கேமரா திரும்பி வந்தது. தொலைவில் புழுதி கிளப்பியபடி ஆவுளியா மேய்ந்துகொண்டிருக்க, நாட்டிலஸ் ஓசையின்றிக் புறப்பட்டது.

(அதிசயங்களைக் காண்போம்)
கட்டுரையாளர், கடல்சார் ஆராய்ச்சியாளர்.
தொடர்புக்கு: nans.mythila@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in