Last Updated : 19 Oct, 2016 10:57 AM

 

Published : 19 Oct 2016 10:57 AM
Last Updated : 19 Oct 2016 10:57 AM

கடலைக் கலக்கும் விநோத மீன்கள்!

கடல் மீன்கள் என்னென்ன உள்ளன? இப்படிக் கேட்டால் நாம் சாப்பிடும் வஞ்சிரம், வாவல், சங்கரா மீன்களின் பெயர்களைச் சொல்லிவிடுவீர்கள். கடலில் இந்த வகை மட்டுமல்ல; ஏராளமான மீன் வகைகள் உள்ளன. இதுவரை நீங்கள் அறிந்திராத சில மீன்களைப் பார்ப்போமா?

விரியன் மீன்

விரியன் மீனைக் (viper fish) கொலைகார மீன் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு மிகவும் மூர்க்கமாக இருக்கும் இந்த மீன். ஆனால், இந்த மீன் இரண்டு அடி நீளம் வரைதான் வளரும். பெரிய கண்களும் ஊசி போன்ற கூர்மையான பற்களும் இந்த மீனுக்கு உண்டு. பிறந்தது முதல் இறக்கும் வரை வாயைத் திறந்தபடியே வைத்திருக்கும். வாயை மூட முடியாத அளவுக்கு இதன் பற்கள் மிக நீளமானவை. சாப்பிடாமல் நீண்ட நாட்கள் உயிர் வாழக் கூடிய ஆற்றல் இந்த மீனுக்கு உண்டு.

சவப்பெட்டி மீன்

சவப்பெட்டி மீன்கள் (coffin fish) தெற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா கடற்கரையோரங்களில் அதிகம் காணப்படுகின்றன. இந்த மீன்கள் 15 செ.மீ. வரை வளரும். அதாவது அரை அடி ஸ்கேல் அளவுக்கு இருக்கும். சிறிய கால்கள் போல் காட்சியளிக்கும் துடுப்புகளைக் கொண்டு தரையில் நடந்து செல்லும் இந்த மீன். இதை ‘கை மீன்’ (hand fish) என்றும் சொல்வதுண்டு. எதிரி தாக்க வந்தால், அவசர அவசரமாக நிறைய தண்ணீரைக் குடித்து, உடலை உப்பச் செய்துவிடும். இதன் உப்பிய உடலை எதிரியால் கடிக்கக்கூட முடியாது.

நீல வளைய ஆக்டோபஸ்

கடல்வாழ் உயிரினங்களில் அதிக விஷம் கொண்ட மீன் நீல வளைய ஆக்டோபஸ்தான் (Blue ringed octopus). ஒரு கோல்ஃப் பந்து அளவே இந்த மீன் இருக்கும். நீளம் 58 அங்குலம் மட்டுமே. ஆள்தான் பார்க்க மிகவும் சிறிது. ஆனால், விஷமோ மனிதர்களைக் கொல்லக் கூடிய அளவு கொடியது. இதன் விஷத்திற்கு மாற்று மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

துடுப்பு மீன்

உலகிலேயே நீளமான, சதைப் பிடிப்பில்லாதது இந்தத் துடுப்பு மீன்தான் (oar fish). 36 அடி நீளம் வரை வளரும். பாம்பின் உடல் போல நீளமாக நீண்டு வளர்ந்திருக்கும். உடல் முழுதும் நீண்டு செல்லும் சிவப்பு துடுப்பு இருக்கும். இதை ரிப்பன் மீன் என்றும் சொல்வதுண்டு. இந்த மீனை மக்கள் கடல் பாம்பு எனத் தவறாக நினைத்துப் பயப்படுவதும் உண்டு.

கல்பர் விலாங்கு

கல்பர் விலாங்கு (gulpe reel) மூன்று முதல் ஆறு அடி நீளம் வரை வளரக்கூடியது. இந்த விலாங்கு மீனுக்கு மிகப் பெரிய வாய் உண்டு. எவ்வளவு பெரிய இரை வந்தாலும் இது தன் வாயை ஒரு வலை போல் விரித்து, இரையை அப்படியே பிடித்துவிடும். பெரிய இரையைத் தாங்கும் அளவு இதன் வயிறும் விரிவடையும். இதற்கு நீண்ட, சாட்டை போன்ற வால் உண்டு.

ராட்சஸக் கணவாய்

மிகப் பெரிய உயிரினங்களில் இதுவும் ஒன்று. சராசரியாக 46 அடி நீளம் வரை வளரும். இதற்கு எட்டு ராட்சஸக் கைகள் உள்ளன. இவற்றின் நுனியில் உறிஞ்சக்கூடிய வகையிலான கப்புகள் இருக்கும். இவற்றை இரையின் மேல் வைத்தால், கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும். கையில் சிக்கும் எதையும் இது விழுங்கி விடும். இந்த ராட்சஸக் கணவாயை (giant squid) யாரும் உயிருடன் பார்த்ததில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x