

நான் சாதிக்கணும்னு எங்கம்மாவுக்கு ரொம்ப ஆசை. வாழ்க்கையில் கஷ்டப்பட்டு ஜெயிச்சவங்களைப் பத்தி அடிக்கடி என்னிடம் சொல்லுவாங்க. ஒருமுறை எனக்கு ‘வென்றவர் வாழ்க்கை’ன்னு ஒரு புத்தகம் வாங்கிக் கொடுத்தாங்க. படிச்சுப் பார்த்தா, எல்லாமே வெற்றியாளர்களின் வாழ்க்கை வரலாறு. ஒரே மூச்சுல படிச்சுட்டேன்.
ஒவ்வொரு வெற்றியாளர்களோட வாழ்க்கையையும் நடந்த சம்பவத்தை இந்தப் புத்தத்துல அழகா சொல்லியிருக்காரு மரபின்மைந்தன் ம.முத்தையா. உதாரணமா, கிரிக்கெட்டுல நமக்கெல்லாம் ரொம்ப தெரியாத விஜய் மெர்ச்சண்ட் பத்தி எழுதியிருந்ததைப் படிச்சப்போ எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. அவரு சாகும் தறுவாயில், ‘என் மறைவுக்குப் பிறகு என் பெயரை வீதிகளுக்கு வைக்க வேண்டாம். என்னால் யார் வாழ்விலாவது கொஞ்சம் சந்தோஷம் ஏற்பட்டிருந்தசல் அவர்கள் இதயங்களில் இடம் கொடுங்கள்’ என்று சொன்னது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. இந்தக் காலத்துல யாராவது இப்படியெல்லாம் சொல்லுவாங்களான்னு எனக்கு நானே கேட்டுக்கிட்டேன்.
அப்புறம், எங்கப் பள்ளிக்கூடத்துல ஆண்டு விழாவுக்குப் பேச்சுப்போட்டி நடந்துச்சு. அப்போ, இந்தப் புத்தகத்துல இருந்த விக்ரம் சாராபாயோட வாழ்க்கை வரலாற்று தகவல்கள சொல்லிப் பேசினேன். எளிமையா சொல்லியிருந்த கருத்துகள் கேட்பவர்களை ரொம்ப கவர்ந்துச்சு. அந்தப் போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைச்சது. அப்போ என் அம்மா நினைச்ச மாதிரி நானும் ஏதோ சாதிச்சதைப் போல உணர்ந்தேன். அந்த வகையில ‘வென்றவர் வாழ்க்கை’ புத்தகம் எனக்கு உதவியா இருந்துச்சு.
வாழ்க்கையில் சாதித்தவங்களை உங்களுக்குத் தெரிஞ்சுக்க ஆசையா? அப்போ ‘வென்றவர் வாழ்க்கை’ புத்தகத்தை வாங்கிப் படியுங்க!
நூல்: வென்றவர் வாழ்க்கை
ஆசிரியர்: மரபின்மைந்தன் ம. முத்தையா
வெளியீடு: விஜயா பதிப்பகம் | விலை: ரூ.40
முகவரி: 20, ராஜ வீதி, கோவை.
தொலைபேசி: 0422-2394614
நூலை மதிப்புரை செய்தவர்: ஜா. கீர்த்தனா,
8-ம் வகுப்பு, மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி,
செந்தண்ணீர்புரம், திருச்சி.
உங்களுக்குப் பிடித்த நூல் எது? குழந்தைகளே! உங்கள் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, மாமா என யாராவது உங்களுக்கு நூல்கள் வாங்கிக் கொடுத்திருப்பார்கள். நீங்களும் அதை ஆசையாகப் படித்திருப்பீர்கள். அப்படி ஆர்வமாகப் படித்த நூல்கள் உங்களிடம் இருக்கிறதா? அந்த நூலில் பிடித்த அம்சங்களை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள். மறக்காமல் நூலின் முன் பக்க அட்டையை ஸ்கேன் செய்தோ, புகைப்படம் எடுத்தோ அனுப்புங்கள். உங்கள் புகைப்படத்தை அனுப்பவும் மறக்க வேண்டாம். படிக்கும் வகுப்பு, பள்ளியின் பெயர், முகவரியையும் குறிப்பிடுங்கள். ‘மழலை மதிப்புரை’ என்று தலைப்பிட்டு எங்களுக்கு அனுப்புகிறீர்களா? |