

கடந்த மூணு வருஷமா ஜனவரி மாசத்துக்காக காத்திருக்க ஆரம்பிச்சிட்டேன். ஏன் தெரியுமா? அப்போ வர்ற புத்தகக் கண்காட்சியில எனக்கும் தங்கைக்கும் போதும் போதுங்கிற அளவுக்கு அப்பா நிறைய கதை புத்தகங்கள் வாங்கிக்கொடுப்பார்.
இந்த வருஷம் ஜூன் மாசம் வாங்கிக்கொடுத்த புத்தகத்துல இப்போதான் ‘உயிருள்ள தொப்பி’யைப் படிச்சு முடிச்சேன். என்னென்ன மாதிரி சின்னப் பசங்களுக்குப் பிடிச்சமாதிரி 42 குட்டிக் கதைகள் இதுல இருக்கு. அத்தனையும் ரஷ்ய நாட்டு சிறுவர் கதைகள். இந்தப் புத்தகத்துக்காக நல்ல நல்ல கதைகளா தேடிப்பிடிச்சு சேர்த்திருக்கார் குட்டியண்ணன். அந்தக் குட்டியண்ணன் போட்டோ புத்தகத்துல இருக்காண்ணு தேடினேன். ஆனா, இல்ல.
ஒரு கதைய படிச்சு முடிக்க மூணு நிமிஷம் போதும். இந்த கதைப் புத்தகத்தோட தலைப்புக் கதைய 39-ம் பக்கத்துல கண்டுபிடிச்சு முதல்ல அதைப் படிச்சேன். தொப்பிக்கு எப்படி உயிரு வரும்ன்னு தெரிஞ்சுக்க ஆவலாகப் படிச்சேன். படிச்சதும்தான் தெரிஞ்சுது அதுல ஒரு ரகசியம் இருக்குன்னு.
அப்புறம் நம்ம மஞ்சக்குருவியோட முட்டைகள் ஒரு அழகான கூட்டுல இருக்குற மரத்துல முதுகை சொறிஞ்சுக்கிறேன், குளிக்க விரும்பாத யானையார் அடிக்கிற கூத்துல பாவம் அந்தக் குருவியோட முட்டைகள் டமால்னு உடையுது. ஆனா, குருவி செமத்தியா யானைக்கு ஒரு பாடம் கத்துகொடுக்குது பாருங்க. ஒரே காமெடி. அப்புறம் காட்டுல தொலைஞ்சுபோற என்னை மாதிரி ஒரு பையன ஒரு பெரிய பறவை தன்னோட முதுகுல ஏத்திக்கொண்டுவந்து வீட்ல விட்டுட்டுப்போகுது. அந்தப் பறவை நினைச்சா அவனை முழுங்கியிருக்கும். ஆனா ஏன் அவனுக்கு அது உதவி செஞ்சுது?
இப்படி ஒவ்வொரு கதையிலயும் நிறைய காமெடி, ரகசியம் எல்லாம் இருக்கு. இதை நான் படிச்சு என் தங்கச்சிக்கு சொல்லி அவளை தினமும் தூங்க வைக்கிறேன். உங்களுக்கும் அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆசை வந்திருக்குமே! ‘உயிருள்ள தொப்பி’யை வாங்கி படிங்க.
நூல் மதிப்புரை செய்தவர்:
ஜெ. ஜோசுவா பாரதி, 7-ம் வகுப்பு,
ஜவஹர் மேல்நிலைப் பள்ளி, சென்னை.