

மலைகளை யாராவது உருவாக்க முடியுமா? இப்படி யாராவது கேள்வி கேட்டால் நம்மை முட்டாளாக்கப் பார்க்கிறார்களோ என்றுதானே நினைப்போம். உண்மையில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு மலை உள்ளது. எங்கு தெரியுமா? இங்கிலாந்தில்!
அங்குச் சில்பரி என்ற இடத்தில் 40 மீட்டர் உயரம், 167 மீட்டர் விட்டமும் கொண்ட ஒரு மலை உள்ளது. அதன் உச்சி மட்டும் தட்டையாகவும் 30 மீட்டர் விட்டத்திலும் உள்ளது. இந்த மலை சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. இந்த மலை சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்டுள்ளது. மூன்று அடுக்குகளாகப் பிரித்து இந்த மலையைக் கட்டியிருக்கிறார்கள். மலை மீது புற்கள் வளர்ந்ததால் இது நிஜமான மலை போலவே மாறியிருக்கிறது.
ஆரம்பத்தில் இயற்கையாக உருவான மலை என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால், அதை அக்கு வேறு ஆணி வேறாக விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோதுதான், இது முழுக்க முழுக்க மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது.
சுமார் 4751 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மலை கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதன் காலம் கி.மு. 2400 முதல் கி.மு. 2300 ஆண்டுகளுக்கு இடைப்பட்டது என்று கணித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். அந்தக் காலத்தில் இந்த மலையை ஏன் உருவாக்கினார்கள்? இதற்கான விடையை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தட்டையாக உள்ள அதன் மேல் பகுதி உருண்டை வடிவில் இருந்திருக்கலாம் என்றும், மத்தியக் காலத்தில் அங்குக் கட்டிடம் கட்டுவதற்காகத் தட்டையாக்கப்பட்டிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மனிதர்கள் இதைக் கட்டியதால் ‘சில்பரி பிரமிடு’ என்று இதைக் குறிப்பிடுகிறார்கள்.
காலங்கள் உருண்டோடினாலும், இன்றும் விடை காண முடியாத அளவுக்குப் புரியாத புதிராகவே உள்ளது சில்பரி மலை.